அங்க குறைகளை நிவர்த்தி செய்வாள் அங்காள பரமேஸ்வரி

இயற்கையாகவோ, விபத்து அல்லது வேறேனும் இடர்பாடுகளில் சிக்கியோ உடலில் அங்க குறை ஏற்பட்டு அவதிக்குள்ளானவர்கள் திருக்கடையூரில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரியை சென்று தரிசித்து வந்தால் அந்த குறைகள் நிவர்த்தியாகிறது. சிவனைப் போலவே பஞ்ச சிரசுகளை வரமாக பெற்றிருந்த பிரம்மன். ஒரு முறை கயிலாயத்திற்கு வருகிறார். தொலைவிலிருந்து பார்த்த பார்வதிதேவி, சிவபெருமான் தான் வருகிறார் என்றெண்ணி, எழுந்து சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்கி நின்றாள். அப்போது சிவபெருமான் வருகிறார். அதைக் கண்ட தேவி, தான் இப்போது மரியாதை செய்தது யாருக்கு என்று நிமிர்ந்து பார்த்தாள். ஐந்து தலைகளோடு பிரம்மா நின்று கொண்டிருந்தார். பார்வதிதேவியைப் பார்த்து எகத்தாளமாக நகைத்தார் பிரம்மதேவன்.

சினம் கொண்ட பார்வதிதேவி, பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து விடுங்கள் என சிவபெருமானிடம் வேண்ட, அவரும் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்தார். பிரம்மாவின் கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டது. நடந்ததை அறிந்த சரஸ்வதி தேவி ஆவேசம் அடைந்தார். “நீ பிரம்மஹஸ்தி தோஷம் பிடித்து மயானம் தோறும் அலைந்து திரிவாயாக” என்று சிவபெருமானுக்கு சாபமிட்ட சரஸ்வதி “நீ அகோர உருவம் கொண்டு செடி கொடிகளை அணிந்து பூத கணங்களுடன் காடு தோறும் அலைவாயாக” என பார்வதிக்கும் சாபமிட்டாள். சிவபெருமானை பிரம்மஹஸ்தி தோஷம் பிடித்தது. சிவபெருமான் பிச்சாண்டியாக உருமாறி யாசகம் பெறத் தொடங்கினார். பார்வதி தேவி, மயான பேச்சியாக மாறி, சுடுகாட்டில் அலைந்து திரிந்தாள். இவர்களின் நிலமை கண்டு வேதனை அடைந்த மகாவிஷ்ணு மோகினி உருவம் கொண்டு சரஸ்வதியிடம் சென்றார்.

இவர்களது சாப விமோசனம் பற்றி கேட்டறிந்தார். சிவபெருமான் கையில் ஒட்டியிருந்த கபாலம், பிச்சை மூலம் நிரம்பினால் சிவபெருமானின் சாபம் விலகும் என்றார். உடனே மைத்துனர் சிவனின் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் பிச்சை இடுகிறார். போடப்போட கபாலம் நிரம்பவே இல்லை. அங்காளம்மனாக உருவெடுத்த பார்வதிதேவி, மகாலட்சுமி உதவியுடன் பிரம்ம தேவனின் கபாலத்தை தன்னுடைய காலால் மிதித்து தன்னிடம் வைத்துக்கொண்டாள். சிவ பெருமானின் பிரம்மஹத்தி தோஷம் விலகியது. “தங்களை நான் எப்போது தரிசிப்பது.”? என அங்காளபரமேஸ்வரி உருவில் உள்ள பார்வதி, சிவனிடம் கேட்க, “உன் நெற்றிப்பொட்டில் நான் எப்போதும் வாசம் செய்வேன்” என சிவபெருமான் சொல்ல “தங்களோடு நான் எப்பொழுது சேர்வது”? என பார்வதி மீண்டும் கேட்க, “மாசி மாத சிவராத்திரியின் போது என்னுள் நீ கலப்பாய்” என கூறினார் சிவபெருமான்.

சிவராத்திரியின் போது பார்வதிதேவி சாப விமோசனம் பெற்று சிவபெருமானுடன் இணைந்தாள். சக்தியின் ரூபமான அங்காளபரமேஸ்வரி பூலோகத்தில் பல்வேறு இடங்களில் எழுந்தருளியுள்ளார். அவ்வாறு எழுந்தருளியுள்ள தலங்களில் திருக்கடையூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்து மூலவர் அங்காளபரமேஸ்வரி, தன்னை நாடி வரும் பக்தர்களின் அங்க குறை பாடுகளை நிவர்த்தி செய்து பக்க துணையிருக்கிறாள். நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ.தொலைவில் காரைக்கால் செல்லும் சாலையில் உள்ள திருக்கடையூரில் இக்கோயில் அமைந்துள்ளது. தென் திசை நோக்கி அமைந்திருக்கும் கோயிலின் முகப்பைத் தாண்டியதும் விரிந்த பிராகாரமும் அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத் தூண்களில் கண்களைக் கவரும் வண்ணங்களில் சுதை வடிவ அஷ்டலெட்சுமிகளின் திருமேனிகள் உள்ளன.

மகாமண்டபம் நடுவில் பீடமும் நந்தியும் இருக்க அர்த்த மண்டப நுழைவாயிலில் இரு துவார பாலகர்கள் காவல் காக்க கருவறையில் அன்னை அங்காள பரமேஸ்வரி அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் தென் முகம் நோக்கி அருள் பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் சூலம் உடுக்கையை சுமர்ந்து இருக்க கீழ் இரு கரங்கள் கத்தியையும் கபாலத்தையும் தாங்கியுள்ளன. இங்கு ஒவ்வொரு மாத பெளா்ணமி அன்று நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் மணமாகாத பெண்களுக்கு திருமண தடை விலகும். வேலை வாய்ப்பு வரும். வியாதிகள் குணமாகும். குழந்தை பேறு கிடைக்கும் என நம்புகின்றனர் பக்தர்கள். இங்கு ஆடி மாதம் நடைபெறும் திருவிழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரியின் போது மயானத் திருவிழா இங்கு வெகு அமர்க்களமாக நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் இரண்டாம் நாள் மாலை அங்காள பரமேஸ்வரியாய் வேடம் அணிந்து மருளாளி சூலத்தோடு ஆவேசத்துடன் ஆடுவார்.

ஆலயம் முன்பு ஏராளமான ஆடுகள் பலியிட காத்திருக்கும். மருளாளி ஒரு ஆட்டை சூலத்தால் பலியிட்டு அந்த ரத்தத்தைக் குடிக்கும் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கும். பின் அந்த ஆட்டின் குடலை மாலையாக அணிந்து கொள்வார். பிறகு இரவு 2 மணிக்கு மயானத்திற்கு செல்லும் மருளாளி அங்கேயே படுத்துக் கொள்வார். பின் விருத்தம்பாடி அவரை ஆலயம் அழைத்து வருவார். ஆலயம் வந்த பின் வேசம் கலைப்பார். மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறும். ஆலய முகப்பை ஒட்டி தல விருட்சங்களான அரசும் வேம்பும் உள்ளன. இந்த ஆலயத்தில் கபால வடிவ கிண்ணத்தில் விபூதி பிரசாதம் தருவது சிறப்பு அம்சம். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் அச்சத்தை போக்கி அவர்களது அங்க குறைகளை நீக்கி அருள் பாலிக்கிறாள் அங்காள பரமேஸ்வரி. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உண்டு. திருக்கடையூர் பஸ் நிறுத்தத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com