அருளை அள்ளித் தரும் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில்

History of temples VISHNU

கரூரில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயம். இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

கண்ணுக்கு எட்டியவரை பச்சைப் பசேல் வயல் வெளிகள். நங்கவரம் ஊரின் உள்ளே நுழைந்ததுமே கிராமத்துக்கே உரிய மண்வாசனை. நம் மனதை மயக்கும் பெரிய கிராமம். சோழநாட்டை ஆண்ட முதலாம் ராஜராஜனின் கடைக்கண் பார்வை இந்த ஊரின் மேல் பட்டது. விளைவு ?

ஊரில் மூன்று ஆலயங்களை அமைத்தான் மாமன்னன். சைவப் பெருமக்களுக்காக சுந்தரேஸ்வரர் திருக்கோவில், வைணவப் பெருமக்களுக்காக சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில், பெண் தெய்வ வழிபாட்டுக்கு சாத்தாயி அம்மன் ஆலயம் என மூன்று ஆலயங்கள் ஊரின் ஒவ்வொரு திசையிலும் அமைந்துள்ளன.

சுந்தரராஜப் பெருமாள் ஆலயம், ஊரின் நடுவே கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம் உள்ளது. இரண்டு சிங்க சிலைகளுக்கு நடுவே விளக்குத் தூணும், பீடமும் உள்ளன. வலது புறம் தல விருட்சமான மகிழம்பூ மரமும், அதனடியில் நாகர் மற்றும் ஆதிசேஷன் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சமும் மகிழ மரம் தான்.

அடுத்துள்ள கருடாழ்வார் சன்னிதியை தாண்டியதும் மகா மண்டபம் உள்ளது. அதற்கடுத்த முன் மண்டபத்தில் லட்சுமி நாராயணர், காளிங்க நர்த்தனர், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமானுஜர், விசுவசேனர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

உள்ளே கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியர் இருபுறமும் துணையாக நிற்க சேவை சாதிக்கிறார். பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்த, வலது முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இடது முன் கையை மடியில் இருத்தியிருக்கும் பெருமாளின் இடையை பட்டாடை அலங்கரிக்கிறது. ஸ்ரீதேவியும் பூதேவியும் ஒரு கையில் மலர் ஏந்திய கோலத்தில் பெருமாளின் அருகே இருபுறமும் நிற்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் கல்தூணில் ஆஞ்சநேயரின் உருவம் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்கள் தரையில் ஊன்றாமல், அந்தரத்தில் தாவிச் செல்லும் கோலத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேயரை வணங்கினால் விரைந்து வந்து நலன் வழங்குவார் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்தக் கோவிலில் நான்கு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் மூன்று தமிழிலும், ஒன்று வடமொழியிலும் காணப்படுகிறது. தமிழ் கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சோழ மாமன்னன் முதலாம் ராஜராஜன் காலத்தவை எனத் தெரிகிறது. எனவே இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயம் என்பதில் சந்தேகமே இல்லை.

‘அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்’ என்பது, நங்கவரத்தின் அப்போதைய பெயர் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்தக் கல்வெட்டுகளில் இருந்து ராஜராஜன் ஆட்சியின் செயல்பாடு தெளிவாகத் தெரிகிறது.

இந்த ஊரில் ஓடம் இயக்கும் அளவிற்கு பெரிய குளம் ஒன்று இருந்துள்ளது. ஓடத்தை இயக்குவது முதல் பிற வேலைகள் செய்யும் பணியாளர்களுக்கு எவ்வளவு நெல் தானியம் ஊதியமாகத் தரவேண்டும் என்பன போன்ற தகவல்கள் இந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆலய வழிபாடு, படையல் செலவுகள், பூஜை செய்த அர்ச்சகரின் ஊதியம், திருக்கோவில் ஊழியர்களுக்கான ஊதியம், கோவில் படையலுக்கு சட்டிகள் செய்து தந்த குயவருக்கு ஊதியம், நந்தவனத்தை பராமரிக்கும் பணியாளர், பூத்தொடுப்போர் ஊதியம் என அனைத்து செலவினங்களுக்கும் நிலம் ஒதுக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் இந்த செலவினங்கள் மேற்கொள்ளப்பட்ட தகவலும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.

இந்தக் கோவிலில் சித்திரை முதல் நாளான தமிழ் வருடப் பிறப்பு, தை முதல் நாளான தமிழர் திருநாள், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதத்தின் 30 நாட்களும் காலை 4.30 மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு பூஜைநடைபெறுகின்றன. தினசரி இங்கு இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.

வைகாசி ஏகாதசியில் பெருமாள் புறப்பட்டு வீதிஉலா செல்வதுண்டு. மார்கழி மூல நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தங்கள் வேண்டுதல் பலிக்க பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுவது, வழக்கமாக இங்கு நாம் காணும் காட்சி.

நவராத்திரி திருநாளின் கடைசி நாளான விஜயதசமி அன்று பெருமாள் அற்புத அலங்காரங்களுடன் குதிரை வாகனத்தில் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வீதிகள் பூராவும் மக்கள் நீர் தெளித்து மாக்கோலமிட்டு பெருமாளை வரவேற்று அளவில்லா மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

பொதுவாக பெருமாள் நவராத்திரி உற்சவத்தின் போது வீதியுலா வருவது அபூர்வம். இங்கு பெருமாள் வீதியுலா வரும் காட்சி பக்தர்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்கிறது. தவிர சைவ, வைணவ பாகுபாடின்றி மக்கள் இந்த விழாவை இங்கு கொண்டாடுகிறார்கள்.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு அருள்புரியும் சுந்தரராஜப் பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியையும் நங்கவரம் சென்று நாமும் ஒருமுறை தரிசிக்கலாமே.

அமைவிடம் :

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நங்கவரம் திருத்தலம், திருச்சியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. திருச்சி- குளித்தலை சாலையில் பெருகமணி வரை பயணித்து, நச்சலூர் சாலையில் இரண்டு கி.மீ பயணம் செய்ய வேண்டும். திருச்சியிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.