அழியா புகழ்தரும் ஆவராணி ஆபரணதாரி

திருமங்கை மன்னன் எனும் திருமங்கையாழ்வார் திருவரங்கனிடம் அளவிலா பக்தி கொண்டவர். அரங்கனுக்கு திருப்பணி செய்வதைத் தவிர இவ்வுலகில் வேறென்ன வேலை எனக்கு என்று திடச்சித்தம் கொண்டிருந்தார். சொல்லாண்ணா இந்தத் தாபம் அவரைத் தூங்கவிடாது செய்தது. எல்லாமும் அவன்தானெனில் இங்கிருப்பது அனைத்தும் அவனுக்குரியதுதானே. ஏன் அவனிடமே சேர்க்கக்கூடாது என்று யோசித்தார். அதனால், திருப்பணிக்குப் பொன் வேண்டு மெனில் அதையும் எடுத்துக் கொள்வோம். ஆனால், தடுப்பார்களே; கொடுக்கத் தயங்குவார்களே. அப்போது, ‘பெருமாளுக்குரியதை நீ வைத்துள்ளாய்’ என்போம். புரியாது விழிப்பார் எனில் அவர் அறியாது அதைக் கவர்ந்து கொள்வோம் என்று தீர்மானித்தார். நாகப்பட்டினம் செல்ல திட்டமிட்டார்.

நாகை புத்தவிஹாரத்திலுள்ள பொற்சிலை அவரை மிகவும் கவர்ந்தது. அதைக் கவர்ந்தாலே போதுமே, எத்தனை கோபுரங்கள் எழுப்பலாம் என்று எண்ணினார். நடுநிசியில் நாகை அடைந்தார். புத்தவிஹாரத்திலுள்ள பொற்சிலையைக் கவர்ந்தார். இரவு முழுதும் பதுங்கிப் பதுங்கி பயணம் மேற்கொண்டார். ஓரிடத்தில் பொற்சிலையை மறைத்து வைத்தார். (‘பொருள் வைத்தசேரி’ என்று இவ்விடம் வழங்கப்பட்டு ‘பொரவச்சேரி’ என்று தற்போது அழைக்கிறார்கள்.) தொடர் ஓட்டத்தால் களைத்தார். எங்கேனும் அமர்ந்து கண்ணயரலாம் என நினைத்தார். கருணைக் கடலான பரந்தாமன் அந்தப் பெரும் பக்தனுக்கு தன்னை காட்ட தருணம் பார்த்துக் காத்திருந்தார். பலா மரத்தினடியில் சரிந்து அமர்ந்தார், திருமங்கை மன்னன். சட்டென்று அவர் கண்ட காட்சி அவரின் இதய இயக்கத்தையே நிறுத்துவதுபோல் இருந்தது.

பாம்பணையின் மீது பரந்தாமன் பள்ளி கொண்டி ருந்தார். பெருமாளின் மீது சர்வ ஆபரணங்களும் பொன்னொளியாக வீசி அவன் மீது புரண்டு தவழ்ந்து கொண்டிருந்தன. ஆதிசேடன் எனும் பெருநாகம் ஏழு தலைகளோடு படமெடுத்து மெல்லியதாக ஆடிக் கொண்டிருந்தன. ஸ்ரீதேவிப்பிராட்டியார் எம்பெருமானுக்கு பாத சேவகம் புரிந்து கொண்டிருந்தார். வியாசரும், பிருகு மகரிஷியும் பணிவாக அமர்ந்திருக்க அவ்விடமே வைகுண்டமாக ஜொலித்தது.‘ஆஹா… இது பெருமாள் உறையும் திருக்கோயிலல்லவா… எத்தனை அழகான கோயில்’ என்று பரவசமானார். சந்நதியை நோக்கி ஓடினார். இன்னும் நெருங்கி வெகு அருகே வைத்த கண் வாங்காது திருமேனியழகை பருகினார். சட்டென்று காட்சி மறைய, கண் விழித்தார். ‘உனக்குத் திருப்பணி செய்யவே நான் போகிறேன்’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு புறப்பட்டார்.

வானத்தில் மின்னல் வெட்டியது, விடியல் வேளையில் இதென்ன பேரொளி என்று ஊரார் வெளியே வந்து பார்த்தனர். அந்தக் கோயிலுக்குள் மணிச் சத்தம் கேட்டது. போய்ப் பார்க்க, பேரொளி ஒன்று அரங்கனுக்குள் மெல்ல ஒடுங்கிற்று. எம்பெருமானின் ஆபரணங்கள் பொன்னொளியால் பளபளத்தன. அன்றிலிருந்து அவ்வூர் ‘ஆபரணதாரி’ என்றழைக்கப்பட்டது. பிறகு ‘ஆவராணி’ என்று திரிந்து இப்போது அதுதான் வழக்கு மொழியிலுள்ளது. திருமங்கையாழ்வார் அடுத்து, திருக்கண்ணங்குடிக்குச் சென்றார். இறையருளால் அங்கும் பல திருவிளையாடல்கள் நிகழ்ந்தேறின. திருக்கண்ணங்குடியிலுள்ள தாமோதர நாராயணனே ஆபரணதாரி எனும் ஆவராணியில், அனந்த நாராயணப் பெருமாளாக கிடந்த கோலத்தில், அதாவது சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறான் என்றும் அதிசயித்துக் கூறுகிறார்.

ஆபரணதாரி கிராமம், திருக்கண்ணங்குடியின் அகரம் என்பதற்கும், திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தேரோடும் வீதிகளுக்கு உட்பட்டது என்பதற்கும் அரசு பத்திரப் பதிவுச் சான்று உள்ளது என்கிறார்கள். கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டுச் சான்றுப்படி இவ்வூர் வாசிகள் நான்கு வேதங்கள் பயின்றவர்கள்.அதனாலேயே ‘சதுர்வேதிமங்கலம்’ என்று அழைத்தார்கள். விஜயநகர மன்னன் திப்பய்ய தேவ மகாராயரின் கி.பி. 1474ம் ஆண்டின் கல்வெட்டில் ‘ஆபரணதாரியான உத்தரானந்தபுரம் பள்ளிகொண்ட பெருமாள் கோயில்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருமங்கை மன்னன், ‘‘எரிமூன்றும் செம்மையுடைய கைகளால் சர்வேஸ்வரனுடைய மார்க்கத்தில் சலியாத மனம் உடையவர்கள்’’ என்று பாடுகிறார். அக்னி வளர்த்து ஹோமம் செய்த சதுர்வேதி மங்கலம் என்று தெளிவுபடக் கூறுகிறார்.

திருமங்கையாழ்வார் மெய்சிலிர்த்துத் தரிசித்த ஆவராணியை நாமும் தரிசிப்போமா…கோயிலுக்கு முன்பு இயற்கை எழில் சூழ்ந்த பரவசம் தரும் பச்சை வண்ண வயல்கள். அதன் மத்தியில் குடியிருக்கிறார் ஆவராணி அனந்த நாராயணப் பெருமாள். கோயிலின் தலைவாயிலைக் கடந்து மகாமண்டபம் செல்லும் முன்பு பெருமாளை நோக்கி கைகூப்பியபடி இருக்கும் கருடாழ்வார் தனி சந்நதியில் அமைந்துள்ளார். அவரை சேவித்து கருவறை நோக்கி நகர்கிறோம். பச்சைக் கற்பூரத்தின் வாசமும், துளசியும் சேர்ந்த கலவை மனதை ஒருமுகமாக்குகிறது. சாந்நித்தியத்தின் அதிர்வுகள் சூழ நம்மையறியாது ஓர் பேரமைதி நம் மீது கவிழ்கிறது. கருவறையின் சிறிய வாயிலிலிருந்து பள்ளி கொண்டருளும் பரந்தாமனைப் பார்க்க ஒரு கணம் மூச்சு நின்றுதான்போகிறது. என்னவொரு பேரழகு! 21 அடி நீளமாக, தென்திசை முடியை வைத்து வடதிசை பாதம் நீட்டி சயனித்திருக்கும் கோலம் காண உள்ளம் குழையும். திருமேனி முழுதும் புரளும் ஆபரணங்களை மிக நுணுக்கமாக காட்டியிருக்கும் அழகில் மனம் கரையும்.

ஏழுதலை ஆதிசேஷனும், அந்தக் கூர்மையான பார்வையும், மெல்ல தலை தாழ்த்தி எம்பெருமானைப் பணியும் விதம் பார்க்க ஆச்சரியம் பெருக்கும். ஒரு கரம் தலையைத் தாங்க, மற்றொரு திருக்கரம் முழங்கால் வரை நீண்டிருக்கும் ஒய்யாரம் உயிரை நெருடும். நீருண்ட மேகம் போன்ற மேனி. தைலக்காப்பில் மின்னுகிறார். சிரத்தின் மேல் மணிமகுடம். காதுகளில் அசைந்தாடும் குண்டலம். எப்போதும் புன்னகை உதிர்க்கும் பவளவாய். திருமார்பில் நலங்கிளர் எனும் ஹாரம், உத்தரியம், தண்டை என அணிந்து சாந்த ஸ்வரூபியாக உலகனைத்திற்கும் படியளக்கும் பெருமாளின் அந்த சயனத் திருக்கோல அழகு காணுதற் கரியது. நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா வளர்ந்துள்ளார். ஸ்ரீதேவி தாயார் பாத சேவை செய்யும் விநயப் பாங்கு காண சகல வினைகளும் தீரும். இப்பெருமாளை வேத வியாசரும், பிருகு முனிவரும் தலைப் பகுதியிலும், திருப்பாதத்தருகிலும் முறையே அமர்ந்து சேவிக்கிறார்கள்.

இத்தலப் பெருமாளை முழுமையாக தரிசித்த நிறைவு ஏற்படவேயில்லை. கண் இமைக்காது பார்த்துக் கொண்டே இருக்க மாட்டோமா என்ற ஏக்கம்தான் அதிகரிக்கிறது. நம்போன்ற சாமான்யருக்கே இத்தனை உள்ளக் கிளர்ச்சி இருக்குமானால், திருமங்கையாழ்வார் எப்படி இத்தலத்தில் கரைந்து போயிருப்பார் என்று பிரமிப்பு ஏற்படுகிறது. அனந்த நாராயணனை தரிசித்த அந்தக் கணமே நம் வாழ்க்கையை அவன் தன் கையில் ஏந்திக் கொள்கிறான். அவன் கிடந்த கோலத் திருவழகையும் அதனின்று பொங்கும் அருளையும் மனதில் தேக்கி, நகர மனமில்லாது அடுத்த சந்நதிக்குச் செல்கிறோம்.அர்த்த மண்டபத்தில் வரப்பிரசாதியான ஆஞ்சநேயர் அருளாட்சி புரிகிறார். சாதாரணமாக எல்லா பெருமாள் கோயிலிலும் அமாவாசையன்று முதல் திருமஞ்சனம் பெருமாளுக்குத்தான் செய்வார்கள். ஆனால், இங்கு பெரிய திருவடி என்று சொல்லக்கூடிய கருடாழ்வாருக்கும், சிறிய திருவடியான ஸ்ரீபத்மாஞ்சநேயருக்கும் திருமஞ்சனம் செய்துவிட்டு, மூன்றாவதாகத்தான் அனந்த நாராயணப் பெருமாளுக்கு செய்விக்கிறார்கள்.

இதை ‘பஞ்சவர்த்தினி திருமஞ்சனம்’ என்கிறார்கள். அதாவது, மாதப் பிறப்பு, அமாவாசை, ஏகாதசி, திருவோணம், சனிக்கிழமை போன்ற தினங்களில் திருமஞ்சனம் ஆகும். மேலும், பத்மாஞ்சநேயரை மிக விசேஷமாக இங்கு ஆராதிக்கின்றனர். ஆதி நாட்களிலிருந்து இந்த பத்மாஞ்சநேயருக்கு ‘கட்டமுது கட்டுதல்’ என்கிற விசேஷ பிரார்த்தனையை செய்விக்கிறார்கள். கட்டமுது என்பது தயிர் சாதத்தை புதிய வஸ்திரத்தில் முடிந்து இடுப்பில் முடிந்து விடுவார்கள். வியாழன், சனி, அமாவாசை தினங்களில் காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் பெயர், நட்சத்திரம், பிரார்த்தனைக்கான விளக்கத்தை மனுவாக எழுதி அந்தக் கட்டமுதுடன் சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள். அன்று மாலை கால பூஜையின் போது, அந்த சாதத்தை நிவேதனப் பிரசாதமாக கொடுத்து உண்ணச் சொல்கிறார்கள். அந்த கட்டமுது தயிர்சாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

பிரார்த்தனை செய்து கொண்டோரால் மாலை வரை இருக்க இயலவில்லையெனில் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக கொடுத்துவிடுவார்கள். கோயிலை வலமாகச் சுற்றிக்கொண்டு வரும்போது தென்பிராகாரத்தில் தனி சந்நதியில் ஸ்ரீஅலங்கார வல்லித் தாயார் எனும் திருநாமம் பூண்டருளுகிறாள். ஆபரணதாரிக்கு நிகரான அலங்காரவல்லி இவள். அழகையும், செல்வத்தையும் வாரி வழங்குவதில் நிகரில்லாதவள். கைகூப்பி அவளைப் பணிந்து பிராகாரத்தை வலம் வரும்போது தல விருட்சமான பலா மரம் காணப்படுகிறது. சிறிய கோயிலாயினும் கீர்த்திமிக்க கோயில். நேர்த்தியான கோபுரங்கள். கோயிலை வலம் வந்து பலிபீடத்திற்கு முன்பு நமஸ்கரித்து நிமிர, நீண்ட பெருமாள் நமக்குள்ளும் பள்ளி கொண்டு விடுகிறான்.ஆவராணி எனும் இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com