அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா தொடங்கியது

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்றுச்சிறப்பு மிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு நேற்றுகாலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது கொடிமரத்திற்கு மெருகேற்றப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. நேற்று காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை மற்றும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

பின்னர் கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேதபாராயணம் நடந்தது. சிவாச்சாரியார்கள் முன்னிலையில் பக்தர்கள் கோவில் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெங்களூரு ஆகம பாடசாலை மாணவர்கள் வேத மந்திரங்களுடன் காலை 9 மணியளவில் அதிர்வேட்டுகள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com