ஆசையை நிறைவேற்றும் தைப்பூச விரதம்

தைப்பூசம் அன்று விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ ஓரிரு நாள் முன்பின் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்திமிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

கருணைக்கடலாம் சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப் பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டிக் கோலத் தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு விரதமிருந்து காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு விரதமிருந்து காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று விரதமிருந்து காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீயசக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

தை மாதம் பூச நட்சத்திரமன்று, உலகெங்கும் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் ஓம் என்ற பிரணவத்தின் பொருளைப் போதித்த முருகப் பெருமானை வழிபட்டால், சேமிப்பு உயரும், செல்வாக்கு அதிகரிக்கும். ஆசைகள் நிறைவேற வேண்டு மானால், பூசத்தில் வழிபாடு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழி பாடுகள்தான். நமது ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையை அறிந்து, அதன் பலம் அறிந்து, நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும், ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் உடனுக்குடன் நற்பலன்களைக் காணலாம்.

அந்த அடிப்படையில் தைப்பூசம் திருநாளில் முருகப்பெருமானை கொண்டாட வேண்டும். அன்று காலை, மாலை இருவேளைகளிலும் குளித்து கவசப் பாராயணங்களைப் படித்து வழிபட வேண்டும். “வேலை வணங்குவதே வேலை” எனக்கொண்டவர்களுக்கு நாளும், பொழுதும் நல்லதே நடைபெறும். பூசத்தன்று கந்தப்பெரு மானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், உலகம் போற்றும் வாழ்க்கை அமையும்.

நடந்து செல்ல இயலாதவர்கள், உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு வரலாம். பூசத்தன்று பழனிக்கு சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனி வரும் சண்முகநாதப் பெருமானை கோடானு கோடி பேர் தரிசித்து வருகின்றனர். குன்றக்குடி, பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற ஆலயங்களுக்கும், அறுபடை வீடுகளின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கும் பாத யாத்திரையாக சென்று வழிபட்டு வந்தால் இன்னல்கள் விலகி அமைதியான, வளமான வாழ்க்கை அமையும்.

தைப்பூசத்திருநாளில் எளிய முறையிலாவது பழனி ஆண்டவரை வேண்டித் துதியுங்கள். தைப்பூச விரதம் வறுமை போக்கும், தடைகளை தகர்க்கும், குழந்தைப்பேறுகள் கிடைக்கச் செய்யும், ஆரோக்கியம் அளிக்கும், வாழ்வு வளம் பெறச் செய்யும். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து முருகப் பெருமானை வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற மூன்றுவகை சக்திகளையும் பெற்று வளமுடன் வாழலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

நெல்லையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்து இறைவனின் திருவருளினை பார்வதி பெற்றாள். அந்த நாள் தைப்பூசம். எனவே இந்தப் புனித நாளில் சுபகாரியங்கள் நடத்தினால் தம்பதிகள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக கொண்டாடப்படும் விழாவாகவும் தைப்பூசத் திருநாள் அமைந்துள்ளது.

பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். அன்றைய தினம் முழுநாளும் விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

தைப்பூச விரத முறை :

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com