ஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு

மேட்டூர்: காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிப் படுகைகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு தினமான இன்று, காவிரியில் நீராடினால் புண்ணியம் என்பது ஐதீகம். கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் காவிரி நதியில் வெள்ளம் பெருகி ஓடி வருகிறது. எனவே தமிழக மக்கள் உற்சாகமாக இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.

பவானி கூடுதுறை

ஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு ஈரோடு பவானி கூடுதுறையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், காவிரித்தாய்க்கு நன்றி தெரிவித்து பூஜை செய்தனர். இல்லறம் செழிக்க புதுமணத் தம்பதிகளும் பூஜை செய்தனர். அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து ஆற்றில் மூழ்கி குளித்துவிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.

கன்னிப்பெண்கள்

திருமணமாகாத கன்னிப் பெண்கள் காவிரியில் குளித்து வழிபட்டு தங்களுக்கு விரைவில் மணமாகவும், மனதுக்கு பிடித்த மணமகன் அமையவும் வேண்டினார்கள். இதற்காக அவர்கள் வீட்டில் நவதானியங்கள் போட்டு வளர்த்து வந்த முளைப்பாரிகளை காவிரி ஆற்றில் விட்டனர். கொத்து கொத்தாய் பச்சை பசேல் என்று மிதந்து சென்ற அந்த முளைப்பாரிகள் நீரலையில் அசைந்தாடி சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

புதுமணத் தம்பதிகள்

புதுமணத்தம்பதிகள் தங்கள் வாழ்வில் வளமும், நலமும் பெருக வேண்டும் என பிரார்த்தனை செய்து திருமண நாளில் தாங்கள் அணிந்திருந்த மணமாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய மஞ்சள் கயிறுகளை புதுப்பித்து அணிந்து கொண்டனர். ஆண்களும் இந்த வழி பாட்டில் கலந்து கொண்டு காவிரி தாயை வேண்டி கையில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டனர்.

ஸ்ரீரங்கத்திலும் கோலாகலம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இருந்து ஸ்ரீநம்பெருமாள் காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளினார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் திரண்ட ஏராளமானோர், மஞ்சள், வளையல், அரிசி, வெல்லம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com