ஆடி மாதம்- தினமும் தீபம் ஏற்றுங்கள்

தினமும் தீபம் ஏற்றுங்கள்
ஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்பதால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.
குறிப்பிட்ட எண்ணெய் மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.
தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.

தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப் படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.

அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

தீபம் ஏற்றுவதற்கான விதிமுறைகள்

தீபம் ஏற்ற முதலில் விளக்கினை நன்கு துலக்கியோ அல்லது புதுவிளக்கையோ பயன்படுத்த வேண்டும். விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூவினைச் சூட்ட வேண்டும். (அகல் விளக்காயின் வெளிப்புறத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு பூவினை விளக்கினைச் சுற்றி வைக்கவும்.)

நெய் அல்லது எண்ணெயை விளக்கில் ஊற்றும்போது விளக்கு நிறைய ஊற்ற வேண்டும். (அதாவது குளம் போல). அதன் பின்தான் திரி இடவேண்டும்.
நெய் அல்லது எண்ணெய் விளக்கில் எத்தனை திரிகள் போட்டுள்ளோமோ அத்தனையையும் ஏற்றிவிட வேண்டும்.

இரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கி திரி இடவேண்டும். இவ்வாறு செய்வது வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமையைக் குறிப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

திரியை நன்கு நெய்யிலோ, எண்ணெயிலோ நனைத்து பின் நுனியை கூராக்கி தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றும் திசைகளும் அவற்றின் பலன்களும்

கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.

தென்கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.

தெற்கு: வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது. மரண பயம் உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.

தென்மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.
மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.

வடமேற்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.

வடக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

வடகிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

தீபம் ஏற்றும் முறை

ஒருமுகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்.
இரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும்
மூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர தோசம் நீங்கும்.
நான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சர்வ பீடை நிவர்த்தியாகும். ஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் ஐஸ்வரியமும் கிடைக்கும்.

தீபம் ஏற்றும் எண்ணெயின் பலன்கள்

நெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கைகூடும். செல்வம் பெருகும்.
நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். நம்மை விட்டு எல்லா பீடைகளும் அகலும். நவகிரக தோச நிவர்த்தி தரும்.
எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணெய் ஏற்றது.
விளக்கு எண்ணெய் தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும்.
குலதெய்வத்தின் முழு அருள் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற வசீகரம் கூடும்.

இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
வேப்பெண்ணை தீபம் ஏற்றினால் கணவன் மனைவி உறவு நலம் பெறும். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.
வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும். மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.
நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மன் அருள் கிட்டும். மந்திர சக்தியையும் பெறலாம். கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய், காய்ச்சிய எண்ணெய், அசுத்தமான எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com