ஆற்காடு, வாலாஜா அருகே வளம் தரும் ஷடாரண்ய ஷேத்திரங்கள்

History of temples Sivan story

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. மேலும் பக்தர்களின் குறைகள் நீங்கி, வாழ்வில் வளம் கொழிக்கும்.

தல வரலாறு:  

ஆதியில் அன்னை பார்வதிதேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதிதேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணம் முடிக்க காஞ்சிபுரத்தில் எழுந்தருளினார். இறைவனின் திருமண விழாவை காண மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர். காஞ்சி மாநகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தினசரி பூஜைகளை செய்வதற்கு அமைதியான இடம் தேடினர்.

அதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த காடுகளில் தங்கினர். இவ்வாறு ரிஷிகள் தங்கி லிங்கங்கள் அமைத்து பூஜைகள் செய்த இடங்கள் பிற்காலத்தில் ஷடாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுயம்பு லிங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் மற்றும் மேல்விஷாரம், புதுப்பாடி ஆகிய இடங்களில் பாலாற்றின் தென்புற கரைகளிலும், அவரக்கரை, காரை, வன்னிவேடு, குடிமல்லூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் வடபுற கரைகளிலும் அமைந்துள்ளன.

காரைக்காடு : ஆற்காட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் காரைக்காட்டில் கவுதமேஸ்வரர் ஏகாந்தமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். கவுதமரிஷி வழிபட்ட ஈசன் இவர்.

வன்னிக்காடு : காரைக்காட்டிலிருந்து 5.5 கி.மீ. தொலைவில் பாலாற்றின் வடகரையிலேயே பயணித்தால் வருகிறது வன்னிவேடு. இது முன்னர் வன்னிக்காடாக இருந்துள்ளது. அகத்திய மகரிஷி வணங்கிய ஈசன் இவர். புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இங்கு கோயில் கொண்டுள்ளார்.

 குடிமல்லூர் : வன்னிவேடு கோயிலிலிருந்து பாலாற்றங்கரையின் இடது கரையில் உள்ளது குடிமல்லூர். வன்னிவேட்டிலிருந்து 5.8 கி.மீ. தொலைவில் அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த ஆலயம் உள்ளது. திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அத்திரியீஸ்வரர் இங்கு அருள்புரிகிறார். அத்திரி ரிஷி வழிபட்ட தலம் இது.
புதுப்பாடி:  குடிமல்லூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் ஆற்காடுசெய்யாறு சாலையில் இந்த ஊரும், ஊருக்குள் ஆலயமும் அமைந்துள்ளது. பரத்வாஜ ரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டதால், ஈசன் பரத்வாஜேஸ்வரர் என்று  அழைக்கப்படுகிறார்.
வேப்பூர்:  புதுப்பாடியிலிருந்து 5.2 கி.மீ. தொலைவில் பாலாற்றின்  தென்கரையில் வேப்பூர் அமைந்துள்ளது.  இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், வசிஷ்டேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார்.
மேல்விஷாரம்: வேப்பூரிலிருந்து தென்கரையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் விஷாரம். வால்மீகி முனிவர் இந்த எட்டிமரக்காட்டில் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் ஈசன் வால்மீகீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். இந்த ஆறு தலங்கள்தாம் ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்’’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்களுடன், காஷ்யபர் வழிபட்ட ஆவாரங்காட்டு இறைவனையும் வழிபடவேண்டும் என்பது மரபு.
அவரக்கரை: காஷ்யபர் ஆவாரங்காட்டில் சிவபெருமானைக் குறித்து தவமியற்றினார். அவர் மனதில், ஈசன் என்ன தனக்கு உபதேசிப்பது’’ என்பதாக ஒரு கர்வம் சிறுபொழுது ஏற்பட்டு மறைந்தது. அதன் காரணமாக ஈசன் அவருக்கு நீண்ட காலம் சென்றே தரிசனம் தந்தார். கல்ப மூலிகை ரகசியங்களையும் எடுத்துரைத்தார். ஆற்காட்டில் இருந்து கார், ஆட்டோ அல்லது இரு சக்கர வாகனத்தில் சென்று கோயில்களை தரிசிக்கலாம். பேருந்து வசதிகள் எல்லா கோயில்களுக்கும் இல்லை. ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை பகுதிகளில் சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த கோயில்கள் அமைந்துள்ளன.