உத்தமர்கோவிலில் நடராஜர்-சிவகாமி அம்பாள் வீதியுலா

Future News Sivan

உத்தமர் கோவிலில் சாமிகள் தனித்தனி கேடயத்தில் புறப்பட்டு கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வீதியுலா வந்து, கோவில் வெளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசன புறப்பாடு நடைபெற்றது. இதையொட்டி காலையில் ராமர் சன்னதியில் உள்ள மண்டபத்தில் உற்சவர்களான நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் நால்வர் சிறப்பு பூ அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அலங்கார, கும்ப ஆரத்தி உள்ளிட்ட தீபாராதனை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது.

இதையடுத்து சாமிகள் தனித்தனி கேடயத்தில் புறப்பட்டு கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வீதியுலா வந்து, கோவில் வெளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து நடராஜரிடம் கோபித்து கொண்டு சென்ற அம்பாளை நால்வர் சமாதானம் செய்த ஆன்மிக கதையின் சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்று சாமிகள் கோவில் மூலஸ்தானத்தை சென்றடைந்தனர்.

இதில் பிச்சாண்டார்கோவில், கூத்தூர், பனமங்கலம், தாளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் உள்ள மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் நால்வர் புறப்பட்டு, கோவிலை சுற்றி வீதி உலா வந்து மூலஸ்தானம் சென்றடைந்தனர். பனமங்கலம் கிராமத்தில் உள்ள வாரணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.