எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்க துர்க்கை வழிபாடு

துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும். எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள். துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும். அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம். எழுமிச்சம்பழக் கிண்ண விளக்கில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார். அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும். ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றிஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

திருமணம் ஆகவேண்டிய பெண்கள் விரதமிருந்து இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும். எலுமிச்சம்பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள். அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள். அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள். பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள். தீபாராதனை முடித்து-அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார். அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும். பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கி விட்டு வர வேண்டும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com