ஐந்து முக முருகன்

Murugar special Temple
இந்த கோயிலில் முருகப்பெருமான் ஐந்து முகத்துடனும், எட்டு கரங்களுடனும் அபூர்வமாக காணப்படுகிறார்.
பிரம்ம தேவரை இரும்புச் சிலையில் அடைத்த பகுதி என்பதால் இந்த இடம் இரும்பொறை என்றும் வழங்கப்படுகிறது.திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும்.
தல வரலாறு:

படைப்பின் ஆதாரமான “ஓம்’ என்ற பிரணவத்தின் பொருள் பிரம்மாவுக்குத் தெரியாததால், முருகன் அவரை சிறையில் அடைத்து விட்டார். தானே படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். தனது தந்தைக்கும் அந்த பிரணவத்தின் பொருளை ஓதினார். எனவே, இவருக்கு “ஓதிமலையாண்டவர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

விசேஷ முருகன்:

சிவனுக்கு ஐந்துமுகங்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவை அவை. இந்த முகங்களின் மூலமே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார். அதனடிப்படையில், அவரது பிள்ளையான முருகனுக்கும் முதலில் ஐந்து முகங்களே இருந்தது. இதை மனதில் கொண்டு, இங்குள்ள சிலை வடிக்கப்பட்டது.

சிறப்பம்சம்:

ஐந்து முகமும், ஆயுதங்களும் கொண்ட முருகனை “கவுஞ்ச வேதமூர்த்தி’ என்று அழைப்பர். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். ஓதிமலை அடிவாரத்தில் சுயம்பு விநாயகர் உள்ளார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நிதிகளுக்கு நடுவே முருகன் இருக்கும்படியாக, சோமாஸ்கந்த அமைப்பில் இக்கோயில் உள்ளது. இடும்பன், சப்தகன்னியர் சந்நிதிகளும் உள்ளன.

பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் “இரும்பறை’ எனப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு உள்ள கல்யாண சுப்பிரமணியரை வழிபடுகிறார்கள். ஓதிமரம் இத்தலத்தின் விருட்சம்.

பூ பிரார்த்தனை:

பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன், ஒரு வெள்ளைப் பூவையும், சிவப்பு பூவையும் தனித்தனி இலைகளில் வைத்துக் கட்டி முருகன் முன்னிலையில் வைக்கிறார்கள். அர்ச்சகர் அல்லது குழந்தைகள் மனதில் நினைத்த பூ பொட்டலத்தை எடுத்துத் தந்தால், அந்தச் செயலைத் தொடங்கலாம் என முடிவெடுக்கின்றனர். இந்த சடங்கிற்கு “வரம் கேட்டல்’ என்று பெயர். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறவும், அறியாமல் செய்த தவறால் ஏற்பட்ட பாவம் நீங்கவும் சுவாமிக்கு பாலபிஷேகமும், சந்தனக்காப்பும் செய்கிறார்கள்.

இருப்பிடம்:

கோவை- சத்தியமங்கலம் ரோட்டில் 48 கி.மீ., தூரத்தில் புளியம்பட்டி. அங்கிருந்து பிரியும் சாலையில் 10 கி.மீ., சென்றால் இரும்பறை.

திறக்கும் நாட்கள்:

திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, அமாவாசை நாட்களில் காலை 10- மாலை 6 .

போன்:04254- 287 418.