கடவுள் கையெழுத்திட்ட ஓலைச்சுவடி எங்கே?’: தில்லையைச் சுற்றும் புதுச் சர்ச்சை

Future News

‘கடவுள் இருக்கிறார்’ என்கிறார்கள் பலர். ‘ இல்லை’ என்கிறார்கள் சிலர். ‘இருந்தால் நல்லாயிருக்குமே’ என்கிறார்கள் ஒரு சிலர். நாம் சொல்லப்போகும் விஷயம் இதற்கெல்லாம் ஒருபடி மேல்.

ஆம், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மனித உருவில் கடவுளே வந்து ஓலைச்சுவடியில் திருவாசகத்தை எழுதி ஒப்பமிட்டார். அந்தச் சுவடி இப்போது புதுச்சேரியில் உள்ள அம்பலத்தாடி மடத்தில் இருக்கிறது. அதை மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – இப்படியொரு புதுச் சர்ச்சை இப்போது தில்லையைச் சுற்றுகிறது.

இந்தச் சர்ச்சையை எழுப்பியிருப்பது சாமானிய மனிதரல்ல.. தமிழக அறநிலையத் துறையின் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன். நடராஜப் பெருமானே எழுதி ஒப்பமிட்ட இந்த ஓலைச்சுவடிகள் சிதம்பரம் கோயிலின் மதிப்பற்ற சொத்து. இதை மீட்க வேண்டும் என்று கோரி, சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், கடலூர் ஆட்சியர், அறநிலையத் துறை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, புதுவை ஆளுநர் கிரண்பேடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார் சுவாமிநாதன். இவரது கடிதத்தை விசாரணைக்காக புதுச்சேரி காவல்துறை தலைவருக்கு அனுப்பியிருக்கிறார் கிரண்பேடி.

புராணம் என்ன சொல்கிறது?

இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடரும் முன்பாக ஒரு செய்தி. சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்த மாணிக்கவாசகர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் வந்து அங்கே சிவபெருமானை தரிசித்துவிட்டு அங்கேயே குடில் அமைத்து தங்கினார். அப்போது, மாணிக்கவாசகரின் தவக்குடிலுக்கு வந்த பெரியவர் ஒருவர், சிவபெரு மான் ஆணைக்கினங்கவே தான் வந்ததாகக் கூறி, மாணிக்கவாசகரின் பக்தியை மெச்சினார். பிறகு, ‘பாவை பாடிய வாயால் சிவபெருமானை தலைவனாகக் கொண்டு கோவை பாடுக’ என வேண்டினார். மாணிக்கவாசகரும் திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற நூலைப் பாடினார்.

அவர் பாடப் பாட அந்த 400 பாடல்களையும் ஏடுகளில் எழுதிக் கொண்ட பெரியவர், அவற்றை கையோடு எடுத்துச் சென்று விட்டார். மறுநாள் காலையில் நடராஜர் கோயிலுக்கு பூஜைக்கு வந்த அர்ச்சகர், நடராஜர் சந்நிதி படிக்கட்டில் ஓலைச் சுவடிகள் இருப்பதைப் பார்த்துவிட்டு ஊராருக்குத் தகவல் கொடுத்தார்.

அந்தச் சுவடிகளில் திருவாசகச் செய்யுள்களும், திருக்கோவையாரின் 400 செய்யுள் களும் இருந்தன. திருக்கோவையார் முடியும் இடத்தில், ‘இவை திருவாதவூரன் பாட, அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் எழுதியவை’ என்று ஒப்பமும் இருந்தது. உடனடியாக, திருவாதவூராரான மாணிக்கவாசகர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். இறைவன் முன் நின்று அந்தச் சுவடிகளைப் பாடிய அவர், ‘நான் எழுதிய பாடல்களுக்குப் பொருள் இவரே’ என இறைவனைக் காட்டிவிட்டு சிவஅருள் ஒளியில் கலந்தார். சிதம்பரம் கோயில் குறித்து இப்படியொரு புராணச் செய்தி உண்டு.

சுவடி எழுதியது நடராஜரே!

நடராஜரே கையெழுத்திட்டதாக சொல்லப்படும் 25 அதிகாரங்களும் 400 பாடல்களும் கொண்ட அந்த திருக்கோவையாரும் அத்தோடு இருந்த திருவாசக ஓலைச்சுவடிகளும்தான் தற்போது புதுச்சேரி அம்பலத்தாடி மடத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய வி.வி.சுவாமி நாதன், “மாணிக்கவாசகர் பாடப்பாட அதை எழுதியது சாட்சாத் நடராஜப் பெருமானேதான்.

இறைவனே கையெழுத்திட்ட அந்த ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டிருந்த பேழையை பல வருடங்களுக்கு முன் சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளியில் காட்சிக்கு வைத்திருந்தபோது நான் பார்த்திருக்கிறேன். மிகப் பழமையானதும் அபூர்வமானதுமான அந்த ஓலைச் சுவடிகளை தமிழக அரசு உடனடியாக மீட்டு பொக்கிஷமாகப் பாதுகாப்பதுடன் பக்தர்களின் பார்வைக்கும் வழிபாட்டுக்கும் அதை வைக்க வேண்டும்” என்கிறார்.

அம்பலத்தாடி மடத்தில் நடராஜரின் பாதத்துக்கு அருகில் சுமார் ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட வெள்ளிப்பேழை வைக்கப் பட்டுள்ளது. அதில்தான் திருவாசக ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கூறுகிறார் மடத்தின் 33-வது பீடாதி பதியான கனகசபை சுவாமிகள்.

”மேலும் கீழும் செப்புப் பட்டயங்கள் கோர்க்கப்பட்டு, வெண்பட்டுச் சுற்றி பாதுகாப்புடன் ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டுள்ளன. இதை எக்காரணம் கொண்டும் பிரிக்கவோ, சோதிக்கவோ கூடாது என்பது எங்கள் முன்னோர் அறிவுரை. மாசி மகா சிவராத்திரியின் போது இரவு 11 மணியளவில் பேழை திறக்கப்பட்டு ஓலைச் சுவடிகள் பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படும். அதுவும் ஒரு மணி நேரத்துக்குத்தான்.

அதன்பின், பழையபடி பேழைக்குள் வைக்கப்பட்டு விடும்” என்கிறார் கனகசபை சுவாமிகள். 350 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கர்நாடகப் போரின்போது சிதம்பரம் மடத்தில் இருந்த நடராஜர் விக்கிரகம், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை பாதுகாப்பு கருதி புதுச்சேரிக்கு எடுத்துவரப்பட்டதாக அம்பலத்தாடி மடத்தின் தலபுராணம் கூறுகிறது. இங்குள்ள ஓலைச்சுவடிகளை திருவாசக ஓலைச் சுவடிகளே என்று கனகசபை சுவாமிகளூம் பூஜகரும் தெரிவிக்கின்றனர்.

இதன் நகல்கள் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் கோயில்களில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரம் குறித்து சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் சபாவைச் சேர்ந்த உமாநாத் தீட்சிதரிடம் பேசினோம். “ நடராஜர் கையெழுத்திட்டதான ஓலைச்சுவடிகள் இக்கோயிலில் இருந்ததற்கான சான்றுகளோ, ஆவணங்களோ இல்லை. அதனால், புதுவை அம்பலத்தாடி மடத்தில் இருக்கும் ஓலைச் சுவடிகள் குறித்து கோயில் நிர்வாகம் கவலை கொள்ளவில்லை.

அதேசமயம், இங்கே நால்வர் சந்நிதியில் உள்ள தேவார, திருவாசக ஓலைச் சுவடிகள் பாதுகாப்புடன் உள்ளன. அவற்றிற்கு தினமும் உரிய முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்கிறார் உமாநாத் தீட்சிதர். இந்த விவகாரம் குறித்து தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடமும் பேசினோம். முழு விவரங்களையும் கவனமாக கேட்டுக் கொண்ட அவர் “இப்போதுதான் இந்த விவகாரம் எனது கவனத்துக்கே வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளைக் கொண்டு முழுமையான விசாரணை நடத்திய பிறகு உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார் அமைச்சர்.