கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்

Future News Murugar

சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை காண்பதற்காக திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்து நிற்கும் பக்தர்கள்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப் பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

இதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்த‌து. இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

கோவில் முன் திரண்ட பக்தர்கள்.

மதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார்.

பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிஅம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப் பட்டு உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்த வந்த வண்ணம் உள்ளனர்.


கடலில் புனித நீராட கடற்கரையில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 300 துப்புரவு பணியாளர்கள் பணியில் உள்ளனர். 100 தற்காலிக கழிப்பறைகள், 8 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றது. சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.


கோவில் கிரிபிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள்.

சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், கடற்கரை முழுவதும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருச்செந்தூர் – பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடிரோடு, கன்னியாகுமரி ரோடு, சாத்தான்குளம் ரோடு ஆகியவற்றில் புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். #Soorasamharam