கந்தனை விரதம் இருந்து வழிபட்டால் சிந்தனை ஜெயிக்கும்

கார்த்திகை மாதம் வரும் கார்த்திகைத் திருநாளைக் விரதம் இருந்து கொண்டாடினால், எந்த நாளும் இனிய நாளாக மாறும். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் முன்னேற்றம் கூடும்.

கந்தனை விரதம் இருந்து வழிபட்டால் சிந்தனை ஜெயிக்கும்
‘வழிக்குத் துணை வேலும் மயிலும்! நம் மொழிக்குத் துணை முருகா என்னும் நாமம்’ என்று முன்னோர்கள் கூறி வைத்திருக்கின்றனர். எனவே கந்தன் புகழ்பாடி, கார்த்திகை மாதம் வரும் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடினால், எந்த நாளும் இனிய நாளாக மாறும். திருக்கார்த்திகை நாளில் முருகனை வழிபட்டால் முன்னேற்றம் கூடும்.

‘வந்த வினையும், வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே’ என்றும், ‘கந்தன் பேரை எந்த நாளும் சொல்லிப்பாருங்க! நம் கவலையெல்லாம் தீரும் இது உண்மைதானுங்க!’ என்றும் கவிஞர்கள் பாடி வைத்துள்ளார்கள். அந்த அடிப்படையில் ஐப்பசி மாதம் சூரனை சம்ஹாரம் செய்து வெற்றிகண்ட வடிவேலனை, கார்த்திகை மாதம் கைகூப்பித் தொழுதால் நேர்த்தியான வாழ்க்கை நமக்கு அமையும்.

ஐப்பசி மாதக் கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கண்ட வேலன், வெற்றிக்களிப்போடு இருக்கும் மாதம் கார்த்திகை ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனென்றால் அதை தான் நாம் ‘திருக்கார்த்திகை’ என்ற அடைமொழியுடன் அழைக்கின்றோம். ‘பெரிய கார்த்திகை’ என்று கூட சிலர் அழைப்பார்கள். கார்த்திகை நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில் மட்டும் தான்.

திருக்கார்த்திகை நாளன்று முருகப்பெரு மானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு, விரதமும் இருந்து வழிபட்டால் அந்த முத்துக் குமரன் முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான். அப்படிப்பட்ட இனிய திருக்கார்த்திகை திருநாள், கார்த்திகை மாதம் 7-ந் தேதி (23-11-2018) வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அதற்கு முதல் நாள் பரணி தீபமாகும். பாவங்கள் போக்கும் பரணிதீப வழிபாட்டினையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

‘பரணி தரணி ஆளும்’ என்பார்கள். எனவே பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை வழிபட்டால் தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும். அதாவது புகழ், கீர்த்தி, செல்வாக்கு, பட்டம், பதவி ஆகிய அனைத்தும் வந்து சேரும். பிறருக்கு மனதால் கூட தீங்கு நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக் கிறார்கள். கலியுகத்தில் பாவங்கள் அதிகரிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் செய்த பாவங்கள் எல்லாவற்றுக்கும் பரிகாரமாகத் தான் ஆலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றோம்.

அந்த வகையில் தீபம் ஏற்றுவதன் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள் தான் திருக்கார்த்திகை. முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று, 22-ந் தேதி (வியாழக் கிழமை) மாலையில் நம் இல்லங்களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமையும். மறுநாள் ஆலயம் சென்று முருகப்பெருமான் சன்னிதியில் வழிபடவேண்டும். கவச பாராயணம் பாடுவது நல்லது. வீட்டில் நல்லெண்ணெயிலும், ஆறுமுகப்பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெயிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மரபு.

வீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும். ‘ஒளி கொடுத்தால் வழி கிடைக்கும்’ என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். திருக்கார்த்திகையன்று பூஜை அறையில் முழுமுதற் கடவுள் விநாயகப் பெரு மானின் படத்தோடு, அவரது தம்பியான முருகப்பெரு மானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண்டும்.

பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண்ணெய் ஊற்றி, கந்தனுக்கு பிடித்த கந்தரப்பத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும். பிறகு கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றைப் பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும். இரவு வரை விரதமிருந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.

கார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகம் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும். ஜோதி வடிவான இறைவனை நினைத்து சிவாலயங்கள் தோறும் சொக்கப் பனை கொளுத்தி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்தால் செடிகள் வளரும். தோட்டத்தில் காய்கனிகள் அதிகம் காய்க்கும்.

இந்த விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெற்றார். இழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். கந்தனை வழிபட்டால் சிந்தனைகள் வெற்றி பெறும்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com