கருடன் வழிபட்ட 9 நரசிம்ம வடிவங்கள்

நரசிம்மர் கோவில் கொண்டுள்ள சிறப்பான தலங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. அதில் ஆந்திர மாநிலத்திலுள்ள அகோபிலம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம் இதுதான்.

இரண்யன் ஆண்ட இடம், பிரகலாதன் வாழ்ந்த இல்லம், கல்வி கற்ற இடம் போன்றவை இங்கு உள்ளன. இரண்யன் வதை நடைபெற்ற அரண்மனையில் நரசிம்மர் வெளிப்பட்ட தூண் உக்கிர ஸ்தம்பம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார்.

கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டார். புகழ் பெற்ற இந்த அகோபிலம் தலம் அமைந்துள்ள மலைப்பகுதி ஆதிசேஷன் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. இம்மலைத் தொடரின் ஒரு பக்கம் திருமலை அமைந்திருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரீசைலம் விளங்குகிறது. கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே! அவை வருமாறு:-

1. அகோபில நரசிம்மர்: உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.

2. பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)

3. யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள் ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

4. சத்ரவத நரசிம்மர்: கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.

5. க்ரோத (வராக) நரசிம்மர்: பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக் கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.

6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

7. மாலோல நரசிம்மர்: “மா’ என்றால் லட்சுமி. “லோலன்’ என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

8. பாவன நரசிம்மர்: பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

9. ஜ்வாலா நரசிம்மர்: மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com