கருட விரத வழிபாடு

மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி திதி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும் கருட விரத வழிபாடு செய்ய ஏற்ற திதி. நட்சத்திரமாகும்.

கருட விரத வழிபாடு
கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். மற்ற தெய்வங்களின் சிறப்பு வழிபாடு போல கருட பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. இதை பக்தர்கள் அனைவரும் சிரத்தையோடு கடை பிடித்து ஸ்ரீ கருடபகவானின் அருளாசிக்குப் பாத்திரமாக வேண்டும்.

‘கரு’ என்பதற்கு சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர். சிறகுகளைக் கொண்டு பறப்பவர் என்பதே இத்திரு நாமத்திற்குப் பொருள். அனைத்து பறவைகளும் சிறகுகளைக் கொண்டே பறக்கின்றன. ஆனால் அவற்றிற்கு இப்பெயர் ஏற்படாமல் போக, கருடனுக்கு மட்டும் அமையக் காரணம், இவரே சிறகுகளைக் கொண்டு நினைக்கவும் இயலாத அதிவேகத்தில் பறக்கும் திறனைப் பெற்றிருக்கிறார்.

பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம் சொல்லில் அடங்காது. அவருக்கென்றே ‘கருடபஞ்சமி’ என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமி கர்நாடகாவில் பெண்களால் விரதம் இருந்து மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்திய ரக்சாபந்தன் போல தன் சகோதரர்களின் நலன் வேண்டிச் செய்கின்ற பண்டிகை கருடபஞ்சமி.

கருடன் என்று போற்றப்படும் பறவையை ராஜபட்சி- பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை.

நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். மகளிர் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகிவிடும்.

ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம்.

ஸ்ரீ கருட வழிபாட்டை ஒவ்வொரு மாதத்திலும் அவரின் திதி, நட்சத்திரத்தில் கொண்டாடலாம். மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி திதி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும் கருட வழிபாடு செய்ய ஏற்ற திதி. நட்சத்திரமாகும்.

மேலும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் கருட வழிபாட்டை செய்து அவரின் அருளாசியால் சகல நன்மைகளையும் பெறலாம். கருட பகவானுக்கு பிடித்தமான அபிஷேக ஆராதனைகள், பலகார பட்சணங்கள் போன்றவற்றைச் சிறப்பாக சமர்பித்து அவரது அருளைப் பெறலாம்.

நாம் வெளியில் செல்லும் போது கருட பகவான் வலமிருந்து இடம் போனால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. இடமிருந்து வலம் போனால் வருத்தம் உண்டாகும். கருடன் வட்டமிடுவது நலத்தையும், நன்மைகளையும் கொடுக்கும்.

கருடன் இரையைத் கவ்வியபடி வலமிருந்து இடம் போனால் ஆதாயம், வெற்றி உண்டாகும். அத்துடன் பகைகள் அழியும். கருடனை நாம் எந்தத் திசையில் காண்கிறோமோ அந்தத் திசையில் இருந்து லாபம் ஏற்படும்.

ஒவ்வொரு ஸ்ரீ விஷ்ணு கோவில்களிலும் மதில் சுவற்றின் நான்கு மூலைகளிலும் இந்த கருடாழ்வார், தனது இறக்கைகளை விரித்துக் கொண்டும், ஒரு காலை முன்வைத்து புறப்படும் நிலையில் தயாராகவும் இருக்கின்றார். இந்த முன்னேற்பாடுகள் அனைத்தும் நமக்காகத்தான்.

நமக்கு ஏதேனும் இடர் ஏற்படும்போது, அதனை நீக்குவதற்கு ஸ்ரீ கருடாழ்வார் புறப்பட்ட நிலையில் தயாராக உள்ளார் என்ற எண்ணமும் நம் மனதில் ஓட வேண்டும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com