கருவூர் சித்தருக்கு, நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம்

மானூரில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்த போது எடுத்த படம்.
நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவுக்கு தனி வரலாறு உண்டு. திருவளரும் கீரனூரில் அந்தணர் குலத்தில் சூரியன் அருளால் பிறந்தவர் கருவூர் சித்தர். கருவூர் சித்தர் நல்வரங்கள் பெறுவதற்காக சிவபெருமான் எழுந்தருளிய தலமான நெல்லைக்கு வந்தார்.

நெல்லையப்பரை தரிசிக்க வந்த வேளையில் நெல்லையப்பரிடம் இருந்து பதில் ஒன்றும் கிடைக்காததால் வெகுண்டு கோபம் அடைந்த அவர், ஈசன் இங்கு இல்லை. எருக்கும் குருக்கும் எழுக என சாபமிட்டுவிட்டு மானூரை சென்றடைந்தார்.

இதையடுத்து சாப விமோசனம் பெறுவதற்காக நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் ஏறி ஆவணி மூல திருநாளில் அதிகாலை மானூருக்கு சென்று சித்தருக்கு காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா நெல்லையப்பர் கோவிலில் கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுரு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.

10-ம் நாள் திருநாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் நெல்லையப்பர் கோவிலில் இருந்து சந்திரசேகர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகளுடன் பல்லக்கிலும், சப்பரத்திலும் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளையும் சுற்றி, ராமையன்பட்டி, ரஸ்தா வழியாக மானூர் அப்பலவாண சுவாமி கோவிலை நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்றடைந்தனர். அங்கு கருவூர் சித்தருக்கு, நெல்லையப்பர் ஜோதி மயமாக காட்சி கொடுத்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இந்த காட்சியை காண்பதற்காக மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மானூரில் திரண்டனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு மானூரில் மிட்டாய் கடைகள் மற்றும் வளையல் மற்றும் பாத்திர கடைகள், குழந்தைகளை மகிழ்விக்க பல வகையான ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தாழையூத்து ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு ஆலோசனைப்படி மானூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருவிழா ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com