கள்ளழகர் தங்கப்பல்லக்கில் இன்று மாலை மதுரை புறப்படுகிறார்

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவி லாகும்.

இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் உலக அளவில் பிரசித்தி பெற்றது, அழகரின் சித்திரை பெருந்திருவிழாவாகும்.

Related image

இந்த திருவிழா கடந்த 15-ந் தேதி மாலை தொடங்கியது. இன்று (புதன் கிழமை) காலை சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்கப் பல்லக்கில் 18-ம் படி கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி மதுரை நோக்கி புறப்பட்டு செல்கிறார்.

வழி நெடுகிலும் உள்ள பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 18-ந் தேதி அன்று அதிகாலையில், புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளியதும், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் ஆண்டாள் சூடிகொடுத்த திருமாலையை பெருமாளுக்கு சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.45 மணிக்குமேல் 6.15 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பார்.

தொடர்ந்து காலை 7.25 மணிக்கு வீரராகவ பெருமாளுக்கு மாலை சாத்துதல் நடைபெறும்.

20-ந் தேதி காலையில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சே‌ஷ வாகனத்தில் கள்ளழகர் காட்சி தருவார்.

பின்னர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்குதல் நடைபெறும். அன்று இரவு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெறும்.

21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, பூப்பல் லக்கு விழா நடைபெறும். 22-ந் தேதி இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும்.

23-ந் தேதி காலையில் கள்ளழகர் அழகர் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 24-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

கள்ளழகர் எழுந்தருளும் 445 மண்டகபடிகளும் தயார் நிலையில் உள்ளது. அழகர் கோவில் முதல் வண்டியூர் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com