குறைவற்ற செல்வமருளும் குன்றத்தூர் குமரன்

Murugar

அந்தப் பிரதேசம் முழுவதும் பச்சைப் பசேலென வயலும், நீர்ச்சுனைகளும் நிரம்பி வழிந்தன. வயல்களின் மத்தியில் வைராக்கிய சீலர்போல் தவத்தால் சிவந்த கண்களாக தலைதாழ்த்தி விநயமாக பத்மாசனத்தில் அமர்ந்த யோகிபோல ஒரு குன்று பெருஞ்சக்தியை தம்மிடத்தே தேக்கிக் கொண்டிருந்தது. எப்போது வருவார் எந்தன் கந்தன், என் சிரசில் அவர்தம் திருவடிபடும் நாள் என்று நிகழும் என்பதாக ஒரு அடக்கம் இருந்தது. யாக சாலையின் மண்போல சிவப்பேறிய கருப்பு மணலாக அந்தச் சிறு குன்று விளங்கியது. சிவசக்தியின் சாந்நித்தியமும் ஒருங்கே அமையப்பெற்ற வில்வ மரங்களின் தளிர் இலைகள் அழகாக விரிந்து மூன்று வேளைகளிலும் பசு பாலைச் சொரிவதுபோல குன்று முழுதும் குவிந்தது. அந்தமலை குளிர்ந்தது. மலை அருகே வசிக்கும் மானிடர்களை ஈர்த்தது. ஏதோ ஒரு சக்தி மையம் கொண்டதை அறிந்தவர்கள் தங்கள் அறியாது மலை நோக்கி கை தொழுதனர். வயல்களை உழுதனர். நெல்மணிகள் பொன்மாரியாக பொழிந்தது. ஊர் நிறைந்தது.

அந்தக் குன்று மட்டும் தாரகனை கவனத்தோடு கவனித்தது. குன்று கவனித்ததை குமரன் தன் திருக்கண்களால் பார்க்க வில்வமரங்கள் சிலிர்த்தது. இன்னும் கம்பீரமாக நிமிர்ந்தது. அந்த வில்வவனத்தின் வனப்பும், ஈர்ப்பையும் கண்ட மாமுனிகள் அந்தத் திருமலையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வெகுதொலைவே முத்துக்குமரன் முப்படைகளோடு திருக்கூவம் எனும் தலத்தில் மறைந்திருக்கும் தாரகனை தாக்க தொடர்ந்து நடந்தார். தாரகன் மாயம் செய்து மறையப் பார்த்தான். மாமுருகனின் அண்மையில் இவன் விளையாட்டு பலிக்காமல் போனது. தான் பெற்ற சகல இந்திர ஜாலத்தையும் செய்து காட்டினான். ஒரு சிறிய அளவு கூட செந்தில் வேலனை அசைக்க முடியவில்லை. பதுங்கிய தாரகப்படைகள் சட்டென்று திருப்போரூர் எனும் தலத்தில் மிக பலமாக முளைத்தெழுந்தது. மால்மருகன் போரூர் அடைந்தான். போர் தொடங்கியது.

அசுரப்படைகள் கந்தனின் ஆறுமுகமும் எண்புறமும் நின்று அநாயாசமாகப் போர்புரியும் காட்சி யைப்பார்த்து மிரண்டது. முருகன் பிழம்பானார். தழலாகமாறி அசுரக்கூட்டத்தையே புரட்டிப் போட்டார். பெரும்புயலுக்கு மத்தியிலும் சீர்வளச் செல்வனின் இதயத்தில் குன்றுவின் நினைவு மிக பலமாக வளர்ந்தது. கண்கள் மூடி இதமாக அகத்தில் வளர்ந்த மலையை வருட எங்கேயோ இருந்த குன்றின் மீது வானம் மெல்லிய சாரலாக மழையைப் பொழிந்தது. சட்டென்று எதிரே கொக்கரிப்போடு நின்றிருந்த தாரகனைப்பார்த்தவர் சற்றெ தயங்கினார். தனது மாமனான நாராயணனின் பக்தியால் குழைந்துகிடந்த உள்ள பார்த்தார். இவன் வதம் புரியத் தக்கவன் அல்லன். இவனிடம் தனியே துருத்திக்கொண்டு தெரியும் அகங்காரம் எனும் சிரசை அறுத்தால் போதும் என கருணையோடு பார்த்தார். தாரகன் அருகே வந்தான். கந்தன் தமது ஞானக்கனலை அவன் மீது வீச அசுரன் திக்குமுக்காடினான்.

வேல் எனும் கூர்மையான ஞானத்தை அவன் இதயத்தில் பாய்ச்ச மாபெரும் சப்தத்தோடு அலறி பூமியில் சரிந்தான். புத்தம் புது மலர்போல மாறியவன் குமரனின் திருப்பாதத்தில் பரவினான். பிழம்பாக நின்றவர் தன்னிலவாக குளிர்ந்தார். ஞானமெனும் அருளை மழையாகப் பொழிந்தார். வெற்றிக் கோலத்தோடு கம்பீரமாக காட்சியளித்தார். நானிலமும் அவரின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தது. மாமுருகனைக் காணமாட்டோமோ என்று தாபத்தால் தவித்தது. இச்சா என்கிற வள்ளியோடும், கிரியா என்கிற தெய்வானையோடும் புரண ஞான சொரூபனான கந்தன் அந்தத் திருக்குன்று நோக்கி நடக்க ஆயிரமாயிரம் தேவர்கள் புடை சூழ தொடர்ந்தனர். குன்று இன்னும் தாழ்ந்து, வாகாக அவரை ஏற்க தயாரானது. குமரன் எனும் சொல்லுக்கு உச்சி என்று ஒரு பொருளுண்டு. எனவே, பூவுலகில் எங்கெல்லாம் உச்சி காணப்படுகிறதோ அங்கெல்லாம் குமரன் குடி கொள்வார்.

அதுபோல சிவசக்தி ஒருமித்த பிரிக்க முடியாத அற்புதக் கணத்தில் உதித்தவர் கந்தர். அதாவது ஞானத்தின் உச்சியில் பூரணமாக உதித்தவர். எனவே எப்போதும் பூமியின் உச்சியிலும் தம்மை இருத்திக் கொள்கிறவர். ஸ்கந்தர் என்றால் துள்ளிக் குதித்து வெளிப்பட்டவர் என்றொரு பொருளுண்டு. அதுபோல துள்ளலோடு குன்றின் அடிவாரத்தை நெருங்கினர். மகரிஷிகள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று எம்பெருமானைக் காணத் தவித்தார்கள். குன்று செய்த தவம், பாக்கியத்தால் திருமுருகன் வள்ளி, தெய்வானையோடு மெல்ல தமது பூவடிகளை குன்றின்மீது பதிக்க நெகிழ்ந்தது. நடந்து உச்சிக்கு செல்ல தம்மை மறந்தது. தேவக்கூட்டமும், மாமுனிகளும், மாந்தர்களும் அரோகரா… அரோகரா… என்று பிளிற ஈரேழு உலகமும் அதிர்ந்தது. ஞானமூர்த்தியான முருகப்பெருமான் திடமாக நிரந்தரமாக தமது அருட்திறத்தை, பதித்தார். திருக்கண்களால் அப்பிரதேசத்தை அளந்தார். கருணை விழிகளால் அணைந்தார்.

வெற்றிக்கோலம் காட்டி நின்றார். எம்பெருமான் ஒரு முகூர்த்தகாலம் எனும் நேர அளவு குன்றில் நின்று மெதுவாக கீழிறங்கி திருத்தணிகை எனும் திருத்தணி நோக்கி நடந்தார். ஆயினும் அவர் முழு உள்ளத்தின் பேரன்புக் கருணை வடிவம் தனித்தோற்றம் கொண்டு அழகன் முருகனாக அம்மலையில் நிரந்தர வாசம் புரிந்தது. சுப்ரமணியசுவாமியின் வாசம் அருணகிரிநாதரின் அகத்தில் தோய அந்த மகான் குன்றின் திசை நோக்கி ஓடோடி வந்தார். சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையோடு நின்ற கோலம் பார்த்து களிப்புற்றார். அகத்தில் பொங்கிய ஞானப்பிரவாகத்தை அழகிய வார்த்தைகளாக வடித்தெடுத்து பதிகங்கள் செய்தார். கண்டேன்… கண்டேன்… என இளங்குமரனின் எழிற்கோலத்தை இமைகொட்டாது கண்டு களித்தார். குன்றின் அழகைக் கண்டு தம்மை மறந்தார். மெல்லிய பூங்காற்றினில் அலையும் வில்வத்தின் வாசத்தை தம் இதயம் முழுதும் தேக்கி அழகன் உறையும் அடுத்த தலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

குன்றத்தூரின் மையமாக இருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து சற்று முன்னே வர நகரின் பழமையும், வரலாற்றுச் சிறப்பை விளக்கும் விஷயங்களும் ஒவ்வொன்றாக கண்முன் விரிகிறது. சென்னையின் விஸ்தீரம் இந்த மலையிலிருந்து பார்க்கும்போது மலைக்க வைக்கிறது. ராஜ கோபுரத்திற்கு நேரே கல்லால் ஆன கொடிமரமும் அதன் கீழ்ப் பகுதியில் செதுக்கப்பட்ட சிற்ப உருவங்களும் எப்படி ஒரே கல்லில் சாத்தியமானது என்று பிரமிப்பூட்டுகிறது. அதன் அருகேயே இன்னொரு கொடிக்கம்பமும் பலிபீடமும் உள்ளது. அருகேயே ஸ்தல விருட்சமான வில்வம் குடைபோன்று கவிழ்ந்திருக்க அதன் குளிர் நிழலில் விநாயகர் அருட்கோலத்தோடு முதல்வனாக தரிசனம் தருகிறார். கோயிலுக்குள் நுழைய வெளிமண்டபத்தில் இன்னொரு சிறிய விநாயகர் தரிசனம் தருகிறார். அதன் வலப்புறத்தேயே சிறிய காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நதிகள் உள்ளன.

எல்லாத் தலங்களிலும் இம்மாதிரி ஒரு காசிநாதர் இருப்பது தொன்று தொட்டு வரும் மரபு. அவ்விருவரையும் கங்காதரராக அகத்தில் ஏந்தி நேரே உள்ளுக்குள் பார்க்க சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுந்தரக்கோலம் கண்ணை நிறைக்கிறது. அருகே செல்லச் செல்ல மனதையும் தன் வசம் இழக்க வைக்கிறது. இந்த சந்நதியில் விபூதியின் மணம் அகமும், புறமும் பாய சிவமைந்தன் செங்கதிர்வேலனாக திகழ்கிறான். போறைமுடித்து வெற்றித் திருமகனாக திரும்பியவன் வடக்கு நோக்கி திருத்தணியின் திக்கான வடக்குநோக்கி நிற்கிறான். நான்கு கரங்களில் ஒரு கரத்தில் வேலையும், மறு கரத்தை சற்றே முன்புறம் மடித்து ராஜகம்பீரத்தோடு திகழும் கோலம் காணக்கிடைக்காத ஒன்று. மேலிரு கரங்களில் ஆயுதங்கள் தரித்திருக்கிறான். யந்திரஸ்தாபனம் செய்திருக்கிறார்கள். இதற்கும் அபிஷேகம் புரிகிறார்கள். தனித்தனியாக பூசை செய்கிறார்கள்.

நாளொன்றுக்கு ஒவ்வொரு அலங்காரமாக காட்சியளிப்பவன் விபூதி அலங்காரத்திலும், சந்தனக்காப்பிலும் அதிகம் மணக்கிறான். பேரழகுச் சுந்தரனாக விளங்குகிறான். வெற்றிக் களிப்பில் நின்றருளும் நாயகனின் சந்நதியில் சிறிது நேரம் நிற்க வாழ்வின் தோல்வியை தூளாக்கி வெற்றியை கைமேல் கனியாக கொடுத்து விடுவான், சிங்காரச்செல்வன். அவன் நின்ற கோலம் பார்க்கும்போது ஏனோ, பயம் மறந்து நம் வீட்டுக் குழந்தையல்லவா இது எனும் எண்ணமே மேலோங்கியிருக்கிறது. கர்ப்பக்கிரகத்தின் வாயிலில் நின்று ஒரு நேரத்தில் மூவரையும் தரிசிக்க முடியாது. ஒரு புறத்தில் நின்று பார்க்க முதலில் வள்ளியையும், மறுபுறம் நின்று பார்க்க தெய்வானையையும் பார்க்கும் அமைப்பில் கட்டியிருக்கிறார்கள். செந்திலாண்டவன் இத்தலத்தி மணக்கோலம் பூண்டருளியதால் இன்னும் மணமாகவில்லையே என்று வருந்துவோர் இத்தலத்திற்கு வந்து தரிசிக்க வெகுசீக்கிரம் தம்பதியராக வந்து வணங்குவதை இங்கு சகஜமாகக் காணலாம்.

இந்த குன்றுக் குமரனை நாடியோர் பலர் மலையளவுப் புகழும் பெருஞ்செல்வமும் பெற்று நிறைவுற வாழ்கிறார்கள் என்பது சுப்ரமணியரின் முன்பு கைகூப்பி வணங்கி ஆனந்தக் கண்ணீர் சொரியும்போது புரியும். ஏனெனில் ‘‘செல்வமாகுன்றத்தூர் செப்பரிய குன்றைப்பதி’’ என்றும், ‘‘மெய்ம்மையை விரித்துத் தெரிந்தருள் செய் குன்றத்தூர்’’ என்று பல்வேறு புலவர்கள் இவன் புகழைப் பாடுகிறார்கள். பார்க்கப் பார்க்க அலுக்காத பரவசம் தந்திடும் எழில் வடிவினன் குன்றத்தூர் முருகன். வற்றாத ஜீவநதியாகப் பெருக்கெடுக்கும் அந்தச் சந்நதியில் அழகையும் அருளையும் ஒருசேரப் பருகி வெளிவந்து பிராகாரம் நோக்கி நகரும்போது மனம் வானமாக மாறிவிட்டிருக்கிறது.

மீண்டும் கொடிமரத்தைச் சுற்றிக்கொண்டு பைரவர் சந்நதி, நவகிரக சந்நதி, தீர்த்தக் கிணறு, வேம்பு அரசு மேடை, தட்சணாமூர்த்தி, துர்க்கை அம்மன் சந்நதி என்று பிராகாரத்தில் வலம் வந்து கொடிமரத்தின் முன்பு தண்டனிட்டு நிமிர சுப்ரமணியசுவாமியின் அருட்சாரல் சுகமாக இதயம் வரை வேலாகப் பாய்கிறது.
தைப்பூசம், சஷ்டி, கிருத்திகை என்று வருடாந்திர விழாக்காலங்களில் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரளாய் கூடுவார்கள். குன்றத்தூர் செல்லுங்கள். குன்றாத செல்வமும், குற்றமற்ற நல்வாழ்வும் பெறுங்கள். இத்தலம் சென்னை பூந்தமல்லியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேநேரம் சென்னை தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் மார்க்கத்திலும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.