சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் படைத்து அம்மனை வழிபட்டனர்.

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தியதை படத்தில் காணலாம்.
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இங்கு அம்மன் எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் காட்சி அளிக்கிறார்.சக்குளத்துக்காவு பகவதி அம்மனின் அருளைப் பெற பெண்கள், இருமுடி கட்டி விரதம் இருந்து தரிசிக்க வருகிறார்கள். அதேபோல் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் இங்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இந்த ஆண்டின் பொங்கல் வழிபாட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். காலை 9.30 மணிக்கு கோவிலின் தலைமை பூசாரி ராதாகிருஷ்ணன் திருமேனி பொங்கல் அடுப்பில் தீ மூட்டி வழிபாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் சாலை ஓரங்களிலும், வீட்டு முற்றங்களிலும் அடுப்பு வைத்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பிற்பகலில் பொங்கல் நிவேத்தியம் நடைபெற்றது. இதில் 300 கீழ்சாந்திமார் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழாவையொட்டி கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 300- க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com