சபரிமலையில் மண்டல பூஜை: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மண்டல பூஜையின் போது பக்தர்களுக்கு தந்திரி கண்டரரூ ராஜீவரு பிரசாதம் வழங்கிய போது எடுத்த படம்.
உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள், நெய் அபிஷேகம் நடந்து வந்தது.

மண்டல பூஜை நடைபெறும் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். அதற்காக கடந்த 23-ந் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் சபரிமலை வந்து சேர்ந்தது. அன்று இரவு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 9 மணி வரை நெய் அபிஷேகமும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு களபாபிஷேகமும் நடந்தது.

தொடர்ந்து 11.55 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கண்டரரூ ராஜீவரு தலைமையில் மண்டல பூஜை நடந்தது. பூஜையில் தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தேவஸ்தான தலைவர் பத்மகுமார் மற்றும் அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பூஜையில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து இருந்தனர். குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் எரிமேலியில் இருந்து நிலக்கல் வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மண்டல பூஜைக்கு பிறகு நடை அடைக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு பு‌ஷ்பாபிஷேகம், 10.30 மணிக்கு அத்தாள பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதற்காக வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. 31-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், நெய் அபிஷேகம் நடைபெறும்.

மகரவிளக்கு பூஜை நடைபெறும் நாளன்று மாலையில் பந்தளத்தில் இருந்து பக்தர்கள் திருவாபரணங்கள் ஊர்வலமாக கொண்டு வருவார்கள். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

அப்போது பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருவார். 20-ந் தேதி பந்தளம் பிரதிநிதியின் தரிசனத்துக்கு பிறகு காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2018-2019-ம் ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு பெறும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com