சாயிபாபாவின் பேரன்புக் கரங்கள் அற்புதம் வாய்ந்தவை

Future News Saibaba

சாயிபாபா முதன்முதலில் நமக்கு எவ்வாறு அறிமுகமானார், எவ்வாறு அவரின் பேரன்பிற்குப் பாத்திரமானோம் என்பதை நாம் நினைத்துப் பார்த்தால், அது வியப்பாக இருக்கும். மிக எளிய முறையில் தாம் நம்மிடம் வந்து சேர்ந்திருப்பார். காலண்டர் வடிவிலோ, பாக்கெட் சைஸ் படமாகவோ, யாரோ ஒரு பக்தர் மூலம் விக்ரகமாகவோ, பரிசுகள் மூலமாகவோ நம்மிடம் வந்து சேர்ந்திருப்பார். நாமும் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு நம் வேலைகளில் மூழ்கி இருப்போம். எப்போது பாபா நம்மிடம் வருகிறாரோ அப்போது முதலே அவரின் பாதுகாப்பு வளையத்திற்குள் நாமும், நம் குடும்பமும் வந்துவிடுவோம். அதை நாம் உணரும் தருணத்திற்காக அவர் காத்திருப்பார், வருடக்கணக்கில் கூட.

நம் வாழ்வின் இக்கட்டான தருணத்திதில், திகைத்துப் போயிருக்கும் சூழலில், நிர்கதியாக நிற்கும் சமயத்தில் அவரின் பேரன்புக் கரங்கள் நம்மை கை தூக்கி விடும். நானிருக்கிறேன் என்று அபயமளிக்கும். இந்த பேரன்பிற்காக அவர் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை, நம்பிக்கையையும் பொறுமையையும் தவிர. பகவான் சாயிபாபாவின் அற்புதங்கள் எல்லாமே அவர் தெய்வீகத்தை உணர்த்தி, மகிழவும் நெகிழவும் வைத்தபடியே, நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. உலகெங்கிலும் நாளுக்கு நாள், ஸ்வாமி பாபா புரிந்து வரும் அதிசயங்களைச் சொல்லி மாளாது. நம்பமுடியவில்லை என்று சொல்பவரின் கண்முன்னே, கணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்து விடுகிறது. ஸ்ரீ சாயிபாபா, உலகெங்கிலும் பேரன்பும் பெருங்கருணையும் பொழியும் பெருந்தெய்வமாய் ஒளிர்ந்தபடி, நம்மோடு நடமாடிக் கொண்டிருக்கிறார்.