சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று, ஆனி திருமஞ்சன மகா தரிசன உற்சவ தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன மகா தரிசன உற்சவம், கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு, தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கின்றன. நேற்று, ஆனி திருமஞ்சன தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.

சித்சபையில் இருந்து, சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் புறப்பாடாகி, மஞ்சத்தில் அமர்ந்து, காலை, 6:30 மணிக்கு ஆனந்த நடனமாடியவாறு, 7:30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 9:20 மணிக்கு பக்தர்கள், பொன்னம்பலத்தானே; தில்லை கூத்தானே என, கோஷம் எழுப்பியபடி, வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஐந்து தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. அங்கு, திருவெண்பாவை பாடப்பெற்று, மகா தீபாராதனை நடந்தது.