சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 14-ந்தேதி தொடங்குகிறது

Future News Sivan

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த 2 திருவிழாக்களின் போதும் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் பந்தல் போடும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசனவிழா வருகிற 14-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி அன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

தொடர்ந்து 15-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.

சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 23-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

விழாவையொட்டி கோவில் கிழக்கு கோபுர வாசலில் பந்தல் போடும் பணி நடைபெற்று வருகிறது.