சித்தத்தை சீராக்கும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்!

சதுரகிரியில் கருணையால் மலர்ந்த ஈசனுக்கு எதிரே சட்டை முனியும், சுந்தரானந்தரும் பரவசமாக நின்றிருந்தனர். பச்சைமால் எனும் பக்தனை ஆட்கொண்ட கோலத்தை கண் இமைக்காது கண்டனர். கடந்து செல்லும் மேகமும், தொடர்ந்து வீசும் தென்றலும், பரமனின் பொங்கும் பரமானந்த அலையின் நடுவில் அந்த இரு சித்தர்களும் தம்மை மறந்திருந்தனர். ஆசைகளற்ற சித்தர்களின் சித்தத்தில் உலகம் உய்வதற்காக வேண்டி ஆசை பிறந்தது. இதோ கண்ணெதிரே தோன்றிய பிரான் மறைந்து விடுவரோ, ஐயனின் காட்சி எங்களுக்கே கிடைத்தது எனச் சொல்வது நியாயமாகுமோ என ஓராயிரம் எண்ணங்கள் சித்தத்தில் சுழன்றன. ஈசனும் அவர்களின் கருணைச் சுழலின் ஆழமறிந்தான். ‘‘முனிவர்களே, உங்களுக்கு என்ன வரம் வேண்டும்‘‘ என்று ஈசன் கேட்டார்.  ‘‘பரமசிவனாரே உடம்பெடுத்து இந்த சதுரகிரியில் தங்கி பச்சைமாலை ஆட்கொண்டீர். எங்களிடத்தில் ஸ்நேகிதர் போன்று பழகினீர்கள்.

இது நாங்கள் செய்த பாக்கியம். எல்லோரும் உய்யும் பொருட்டு சதுரகிரியில் லிங்க சொரூபமாக எழுந்தருள வேண்டும். வாழ்வின் துயரங்களாலும், தீவினைப் பயன்களாலும் அவதியுறுவோரை ஆற்றுப்படுத்த வேண்டும். ஞான நிழலை பரவச் செய்து அதில் எல்லோரையும் இளைப்பாறச் செய்தல் வேண்டும். தாங்களின் திருவுருவத்தை பூஜிக்கும் பாக்கியத்தை எங்களுக்கு அருள வேணும்’’ என்று பணிந்து கேட்டனர். சித்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க, சிவபெருமான் சுயம்புவாக லிங்க வடிவத்தில் பொங்கி நிமிர்ந்தார். எழும்போது மகாலிங்க சொரூபமாக தோன்றி சிறுலிங்கத்தில் தன் பேரருளையும் பொதித்து ஒடுங்கினார். பேரொளிப் பெருவெள்ளம் தாரை தாரையாக பாய்ந்து ஒடுங்குவதை கண்ட சித்தர்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.

தேவர்கள் பூச்சொரிந்தனர். தேவ துந்பிகள் முழங்கின. சட்டைமுனியும், சுந்தரானந்தரும் ஆனந்தமாக ஆடியும், பாடியும் களித்தனர். ஆச்சரியமான ஆச்சரியம் என்ன வெனில் பெருமானின் லிங்கம் சற்று சாய்ந்தே காணப்பட்டது. எல்லோருமே ஏதோ முன் வினைப் பயனாலோ, இந்த ஜென்மத்து வினையாலோ அறியாமையில் வாழ்ந்து வருகிறோம். உடலெடுத்து உடலெடுத்து ஜீவன் தளர்ச்சியுறுவதை விட ஈசனோடு கலப்பதே பேரானந்தம் என இந்த தலபுராணம் அழகாக விளக்குகிறது. வாழ்க்கையின் வெம்மையான வேதனைகளுக்காகவும், வேண்டிய விஷயங்கள் ஈடேறுவதற்காக சதுரகிரிக்கு வந்தாலும் சரி, சுந்தரமகாலிங்கத்தை தரிசித்த மாத்திரத்தில் நம்மை நிச்சயம் மாற்றுவார். கேட்டதை மட்டும் தருவதோடு மட்டுமல்ல, ஏதோ கொஞ்சம் வேதனையை ஊதித் தணிக்கும் மட்டோடு இத்தல ஈசன் இருப்பதில்லை. ஆன்மிகத்தின் இறுதி நிலையான ஜீவன் முக்தி எனும் ஞானத்தை அளித்து தன் பதம் சேர்த்துக் கொள்கிறார்.

இப்படித்தான் ஒவ்வொரு தலத்திலும் ஈசன் எழுந்தருளுகிறார். கலியுகத்தின் மிகப் பெரிய பொக்கிஷமே இந்த ஆலயங்கள்தான். ஏனெனில், ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமாக ஈசனை ஆராதித்து பல பிரயத்தனங்களுக்கு பிறகு ஈசனை அடைகின்றனர். ஒரு யுகத்தில் வெறும் யாகங்கள் செய்வதன் மூலமே அடைய முடியும் படியாக இருந்தது. வேறொரு யுகத்தில் கடுமையான தியானத்தின் மூலமாக ஈசனை தரிசித்தனர். அப்படிப் பார்க்கும்போது கலியுகத்தில் மட்டும் தான் நாம சங்கீர்த்தனம் எனும் எம்பெருமானின் மீது பாடல்களை பாடி மட்டும் ஈசனை அடையலாம் என்று வகுத்திருக்கிறார்கள். சுந்தர மகாலிங்கா…. எனும் நாமம் மட்டுமே நமக்குப் போதும். கலியுகத்தில் அர்ச்சாவதாரம் என்று சொல்லப்படும் அங்காங்கு கோயில்களில் சிலைகளாக எழுந்தருள்வதே கலியுகத்தின் தர்மமாக இருக்கிறது. அதனால்தான் நாயன்மார்களும், ஆழ்வார்களும், இன்ன பிற ஞானிகளும் கோயில் கோயிலாக ஓடி பதிகங்களையும், பாசுரங்களையும் பாடித் துதித்தனர்.

‘‘நீங்களும் அங்கு செல்லுங்கள் அங்குதான் இறைவன் இருக்கிறான்’’ என்று உறுதி கூறினார்கள். அதைத்தான் சதுரகிரி சித்தர்களும் சுந்தரமகாலிங்கத்தை இங்கு நமக்குக் காட்டுகிறார்கள். சுந்தரானந்தர் இந்த மகாலிங்கத்திற்கு பூஜை செய்து வந்ததால், சுந்தரமகாலிங்கர் என்று அழைக்கப்பட்டது. அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கும் இவரே பூஜை செய்து வந்ததால் சுந்தரலிங்கம் எனப்பெயர் பெற்றதை ஏற்கனவே அறிந்தோம். இந்த சுந்தரமகாலிங்கம் வீற்றிருக்கும் தலமே சதுரகிரி என்று குறிக்கப்படுக்கிறது. சுந்தரானந்தரின் குகையும் இங்கு இருப்பதாகவே கோரக்கர் சுட்டிக் காண்பிக்கிறார். ‘யூகி முனிவர் வனத்திற்கு நேர்மேற்கே வந்து, தெற்கே போகிற பாதையில் அரை நாழிகை வழி தூரம் வந்தால் ஓர் ஆறு வருகிறது. அந்த ஆற்றில் இறங்கி மேடேறினால் பளிஞர் குடிசையும், அதன் பக்கத்தில் சுந்தரலிங்கர் சந்நதியும் உள்ளன. ஆற்றுக்கு அப்பால் சுந்தரானந்தர் குகை இருக்கிறது. அந்த பாதையில் கூப்பிடு தூரம் போனால் மகாலிங்கர் சந்நதி இருக்கிறது.

சந்நதிக்கு பின்புறம் கற்பகத்தரு மரம் இருக்கிறது.‘ என்று தம்முடைய நூலில் சொல்கிறார். கற்பகத்தரு எனும் மரத்தை மட்டும் இதுதான்… அதுதான்… என்று அடையாளம் காட்டுகிறார்கள். இன்று சுந்தரானந்தரின் குகை கூட சரியான அளவில் அடையாளம் காண முடியாமல் இருக்கிறது. பளிஞர் எனும் ஆதிகுடிகளின் குடிசைகளை பார்க்கலாம். மேலும், கோரக்கர் சஞ்சீவி மூலிகை இருக்கும் இடத்தையும் தெரியப் படுத்துகிறார். கற்பகத்தரு மேல்பக்கம் கூப்பிடு தூரத்தில் வட்டச்சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு மேல்பக்கம் போகும் பாதையிலுள்ள ஓடையை காணலாம். ஓடையின் மேல்பக்கம் கானல் இருக்கிறது. அந்த கானலுக்கு கீழ்பக்கம் கரும்பாறை உள்ளது. பாறைக்கு அருகே செங்கடுக்காய் மரத்திற்கு சற்று எட்டி சஞ்சீவி மூலிகை வளருகிறது என்கிறார். கோரக்கர் சில மூலிகை சொல்லும்போது அருகேயே குறிப்பிட்ட மரத்தையும் சொல்கிறார். ஏனெனில், அந்த மரத்திற்கு அருகில்தான் இந்த மூலிகைகளால் வளர முடியும் என்கிறார்.

ஆனால், நம்மால் எந்த குகையையும் மூலிகைகளையும் அடையாளம் காணமுடியாது. சில மூலிகைகளை சித்தர்களின் அருளில்லாது பார்க்கக் கூட முடியாது என்கிறார்கள். சித்தர்கள் எந்த உலகத்திலிருந்தாலும் சதுரகிரியில் வசிப்பதில் தனித்த ஆனந்தமடைகின்றனர். சதுரகிரிக்குள் அங்குலம் அங்குலமாக நடந்திருக்கின்றனர். ஒரு சித்தர், இரு சித்தர் என்றல்லாமல் பல நூறு சித்தர்கள் இங்கு வசித்ததாகவும், தற்போதும் வசித்துக் கொண்டிருப்பதாகவும் தல புராணங்கள் மாய்ந்து மாய்ந்து பேசுகின்றன. மலையேறும்போது எங்கேனும் பெரிய பாறைகள் அடுக்கப்பட்டிருப்பின் அதற்குள் சென்று தரிசித்தால் சிவலிங்கம் காணப்படும். ஆனால், பாதைபற்றிய தெளிவில்லாது செல்வது அபாயம். சதுரகிரியின் பாதையில் காணப்படும் சில சிவலிங்கங்களும், சில சந்நதிகளும் தவிர ஒவ்வொரு மலையிலும் குறிப்பிட்ட இடத்தில் சித்தருடைய ஆஸ்ரமம் இருந்துள்ளது.

சதுரகிரி புராணங்களில் சாணாங்கிய முனிவர் சதுரகிரியிலேயே வசித்த நாகார்ஜுன முனிவருக்கு எந்த இடத்தில் எந்தெந்த சித்தர்கள் வாசம் செய்கின்றனர் என்று சுட்டிக் காட்டுகிறார். நாகார்ஜுன பாதையை அறிந்து சென்று ஒவ்வொரு சித்தராக தரிசிக்கிறார். நாகார்ஜுன முனிவரின் ஆன்மிக தாகமும், ஒவ்வொரு சித்தர்களிடமும் சென்று என்னென்ன வித்தையை கற்றார் என விளக்குகிறது. மலையின் ஒவ்வொரு திசையிலும் உள்ள அபூர்வ விஷயங்களை சொல்கிறார். விதம் விதமான மூலிகையைக் காட்டி ஒவ்வொன்றும் எந்தெந்த விதத்தில் யோக சாதனைக்கும், அஷ்டமா சித்திகளுக்கும் உதவும் என்று விவரிக்கிறார்.  இன்றும் மலையின் சில வனங்களை கைகாட்டி இதுதான் அத்ரி வனம், இதுதான் கோரக்க வனம் என்று காட்ட முடியும். மேலும் பல சித்தர்களின் வனங்கள் அறியப்படாமல் ஆனால், இன்றும் உள்ளது.

சதுரகிரியில் நீங்கள் எங்கு நோக்கினாலும், நீங்கள் பார்க்கும் திசையிலோ, நீங்கள் நிற்கும் மலைக்கு பின்புறம் மலையிலோ ஏதேனும் சித்தர்கள் ஆஸ்ரமங்கள், செடிகொடிகளின் மறைவில் குகைகளாக இருக்கலாம். ஆனால், இருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை போகர் சித்தர் ‘‘மறைப்பு மைதிரை போட்டு கோரக்கர் மைந்தரோடு இருக்கிறார்’’ என்கிறார். அதாவது நம் கண்களுக்கு தெரியாமல் மறைப்பு போட்டு அமர்ந்திருக்கிறார். இங்கு மைந்தர்கள் என்பது சீடர்களை குறிக்கும். அப்போது நாம் என்ன செய்வது. எதுவும் செய்ய வேண்டாம். இறை நாமத்தை உச்சரித்தபடி சுந்தரமகாலிங்கத்தை தரிசித்தாலே போதும். ஆஹா… அதோ அந்த மலையில் பாறைகள் அடுக்கியபடி இருக்கிறதே… அதற்குள் சித்தர்கள் இருப்பார்களோ… ஏதோ சிறு உருவம் நகர்கிறதே… அந்த உருவம் சித்தராக இருக்குமோ… என்ற தேடலும் தவிப்பும் இருந்தால் போதும்.

அந்த வியப்பே சித்தர்களின் அருளை உங்களுக்கு கிடைக்கும்படி செய்து விடும். அந்த மலையில் நீங்கள் எங்கு நின்றாலும் சித்தர்களை வணங்க வேண்டுமென்று தோன்றுகிறதா. உடனே இரு கைகூப்பி வணங்குங்கள். மீண்டும் நடக்கத் துவங்குங்கள். வருடாவருடம் ஆடி அமாவாசை அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கின்றனர். சரி, இந்த மலைக்கு எப்படிச் செல்வது? மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லும் வழியில் கிருஷ்ணன் கோயில் என்கிற இடத்தில் இறங்கி, வத்திராயிருப்புக்கு செல்ல வேண்டும். வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மீ. தொலைவில் தாணிப்பாறை என்கிற இடம் வரும். இதுவே சதுரகிரியின் அடிவாரம். இங்கிருந்து சுந்தர மகாலிங்கம் கோயில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தப் பாதைதான் எளிதானது; பாதுகாப்பானது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com