திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று தாயுமானசுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நலுங்கு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் மட்டுவார் குழலம்மை நந்தவனத்தில் உள்ள முக்குளம் சென்று தவசு பூஜை செய்து காத்திருந்தார். தொடர்ந்து தாயுமானசுவாமி சீர்வரிசை பொருட்களுடன் முக்குளம் சென்று அம்பாளுக்கு கொடுத்து, அலங்காரம் செய்தவுடன் மலைக்கோட்டை உள்வீதியில் திரு வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 12.45 மணிக்கு மேல் தாயுமானசுவாமி-மட்டுவார் குழலம்மை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் 1 மணிக்கு மேல் திருக்கல்யாண சடங்குகள் நடந்தன. அதையடுத்து தருமை ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திரு நாணை தொட்டு வணங்கியவுடன் சுவாமி அம்பாளுக்கு திரு நாண் பூட்டுதல் (திருக்கல்யாணம்)நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பக்தர்கள் தாயுமானசுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் மொய் செய்தனர். பின்னர் அப்பளம், வடை, பாயசத்துடன் கல்யாண விருந்து நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 5.53 மணிக்கு மேல் மீன லக்னத்தில் திருத் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com