சிறுமி ரூபத்தில் வந்த தையல் நாயகி

திருச்சி அருகில் உள்ள அரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது வைத்தியநாத சுவாமி கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் தையல் நாயகி, சிறுமி ரூபத்தில் வந்து விபத்தை தடுத்து நிறுத்தி பக்தனுக்கு அருள் புரிந்தாள். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி ரயில்வேயில் எஞ்ஜின் டிரைவராகப் பணியாற்றி வந்த அரிய மங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு சகலமும் தையல் நாயகி அம்மன்தான் என வாழ்ந்து வந்தார். அந்த அம்மன் மேல் தீராத பக்தி கொண்டிருந்தார். அந்த அம்மனை தரிசிக்க வாரம் தவறாமல் வைத்தீஸ்வரன் கோயில் சென்று வருவார். ஒருநாள் பணியில் இருந்த அவர் எதிரே உள்ள ரயில் பாதையைப் பார்த்துக் கொண்டே ரயிலை ஓட்டிக் கொண்டிருந்தார். ரயில் விரைவாக ஒடிக்கொண்டிருந்தபோது எதிரே சற்று தொலையில் தண்டவாளத்தின் அருகே ஒரு சிறுமி ஒரு சிவப்பு துணியை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். அதைக்கண்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார்.

பின்னர், அவசர அவசரமாக ரயிலை நிறுத்தினார். அந்தச் சிறுமியின் அருகே வந்ததும் ரயில் நின்றது. உடன் கீழே இறங்கினார் அவர். என்ன பயங்கரம்? அந்தச்சிறுமி நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே தண்டவாளம் உடைந்து வளைந்து அலங்கோலமாகக் கிடந்தது. ரயில் நின்றதும் பயணிகள் பலரும் இறங்கி ஓடிவந்தனர். நடக்க இருந்த விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. ரயில் அந்த இடத்தை கடந்திருந்தால் பல பெட்டிகள் கவிழ்ந்திருக்கும். பல உயிர்கள் பலியாகியிருக்கும். கூட்டத்தினர் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டினர். மனதாறப்புகழ்ந்தனர். சிறிது நேரத்தில் டிரைவர், பயணிகள் உள்பட பலரும் விபத்து தவிர்க்கப்பட காரணமான அந்தச் சிறுமியை கூட்டத்தில் தேடினார். காணவில்லை. அன்று இரவு அவர் கனவில் வந்தாள் அந்தச் சிறுமி. “நான் வேறுயாரு மில்லை. நீ வணங்கும் தையல் நாயகிதான்” என்றாள் அந்தச் சிறுமி.

மனம் சிலிர்த்த அந்த டிரைவர் கண்ணீர் வடித்தார். கரங்கூப்பி வணங்கினார். “தாயே நான் என்ன செய்ய வேண்டும் சொல்”என்றார்.“எனக்கு இங்கே ஓர் ஆலயம் கட்டு” என்றாள் அந்த சிறுமி. “அப்படியே செய்கிறேன் தாயே. ஒரு சிலை செய்து உன்னை இங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டுகிறேன்.”
“வேண்டாம். நீ எனக்காக சிலை செய்யவேண்டாம். நீ நேராக மாட்டு வண்டியில் கொல்லிமலை செல். போகும்போது உன்னுடன் நெல் மூட்டையை கொண்டு செல். அங்குள்ள சித்தரிடம் பணத்திற்கு பதில் நெல் மூட்டையைக் கொடு. அவர் தரும் சிலையை உன்னுடன் வண்டியில் கொண்டு வா. வரும் வழியில் உன் மாட்டு வண்டியின் அச்சு முறியும். எந்த இடத்தில் அச்சு முறிகிறதோ அதே இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்”என்று கூறியவாறு சிறுமி மறைந்தாள். அவர் விழித்தார். கனவு கலைந்தது.

மறுநாளே தான் கண்ட கனவின்படி அவர் கொல்லிமலைக்குப்புறப்பட்டார். அந்தச் சிறுமி சொன்னபடியே எல்லாம் நடந்தது. வனப்பகுதியாக இருந்த ஒரு இடத்தில் அச்சு முறிந்தது. அந்த இடத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்து, தகரக் கொட்டகையில் ஆலயம் அமைத்தார். அந்த ஆலயமே தற்போது அரியமங்கலத்தில் உள்ள அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம். ஆடி வெள்ளிகளில் அன்னை தையல் நாயகிக்கு நடக்கும் விசேஷ ஆராதனைகளில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வர். நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னையை விதம் விதமாக அலங்கரிப்பர். இந்த அலங்காரத்தைக் காணவே ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம்.

அர்ந்த மண்டபமும் நுழை வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகன், வள்ளி தெய்வானையும் அருட்பாலிக்கின்றனர். மகாமண்டப தென்திசையில் துர்க்கை அருட்பாலிக்கிறாள்.அடுத்துள்ள கருவறையில் அன்னை தையல்நாயகி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னை மேல் இரு கரங்களில் தாமரை மலரைத்தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்கிறாள். அன்னையின் தேவக் கோட்டத்தின் வடபகுதியில் ஆஞ்சநேயர் அருட் பாலிக்கிறார். அன்னையின் ஆலயத்தின் வலதுபுறம் அருள்மிகு வைத்தீஸ்வரன் தனிக்கோயிலில் அருள்கிறார். இறைவனின் முன் மகாமண்டபத்தில் நந்தியும் பலி பீடமும் உள்ளன. மகாமண்டபத்தின் கீழ் திசையில் கால பைரவரும், தெற்கில் நால்வரும் அருட்பாலிக்க, தேவக் கோட்டத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரரின் தனி சந்நதி உள்ளது. இந்த ஆலயத்தின் தென் திசையில் நாகம்மாவுக்கும் கருப்பண்ணசாமிக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன.

மாத பௌர்ணமி நாட்களில் மாலையில் அன்னையின் சந்நதியில் நடைபெறும் கும்பபூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய் வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராகு தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சந்நதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமி அன்று ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்று காவேரியிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் பால் குடம், தீர்த்த குடம், காவடிகளுடன் அன்னையின் சந்நதிக்கு வருவார்கள். இரவு அன்னைக்கு பால் அபிஷேகம் உள்பட பல அபிஷேக ஆராதனைகள் நடந்து, அன்னைக்கு வெள்ளி அங்கி சாத்துவார்கள். அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள். முகப்பரு நீங்க அன்னைக்கு முன் மகாமண்டபத்தில் உள்ள தனியிடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால் அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு 5 செவ்வாய்க் கிழமைகள் பிரார்த்தனை செய்தால் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

இந்த பிரார்த்தனைப் பொருட்களை நிர்வாகத்தினர் அவ்வப்போது காவிரிக்கு கொண்டுபோய் நீரில் கரைத்து விடுகின்றனர். குழந்தை பேறு வேண்டுவோர் நாகம்மா சந்நதியில் இருக்கும் அரசமரத்தில் தொட்டில் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறதாம். திருமணத்தடை உள்ளவர்கள் அன்னைக்கு அபிஷேகம் செய்து தாலி காணிக்கை செலுத்துகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கின்றனர். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயத்தில் கற்பூரம் பயன்படுத்துவது கிடையாது. தீபம் மட்டுமே. ஆலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ள அரியமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். தஞ்சை , துவாக்குடி, பெல் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த வழியே
செல்லும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com
Facebook Auto Publish Powered By : XYZScripts.com