சுசீந்திரம் கோவிலில் 15-ந்தேதி சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை விஷூ (கேரள புத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சித்திரை புத்தாண்டு கனி காணும் நிகழ்ச்சி 14-ந் தேதி நடக்கிறது. ஆனால், கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ( கேரளபுத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இதையொட்டி மூலஸ்தானமான தாணுமாலயசாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் சிவனின் முழு உருவ படத்தை பெரிய அளவில் கலர் கோலமாக வரைவார்கள். அதனை சுற்றிலும், அனைத்து விதமான காய், கனிகள் படைக்கப்பட்டு பெரிய அளவில் நிலை கண்ணாடியும் வைக்கப்படும்.

மூலவராகிய தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குடங்கள், தங்கத்தால் ஆன பழங்கள் பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் அன்று ஒருநாள் மட்டும் அடுக்கி வைக்கப்படும். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடுவார்கள். மேலும், கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் கை நீட்டமாக காசும், காய்-கனிகளும் பிரசாதமாக வழங்கப்படும்.

தமிழ்ப்புத்தாண்டையொட்டி 14-ந் தேதி சுசீந்திரம் கோவிலில் தோரணங்கள் கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். காலை மற்றும் மாலை வேளைகளில் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் அமரும்படி செய்து சிறப்பு ஸ்ரீபலி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com