சுபிட்சம் தரும் சுக்கிர ஏகாதசி

ஏகாதசி நாள்  அன்று, வேங்கடவனைத் தரிசியுங்கள். துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தவர்கள் , பெருமாளை விரதமிருந்து வணங்கி வழிபடலாம். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் தவழும்; ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இன்று 12.7. 19 வெள்ளிக்கிழமை…. ஏகாதசி. இதனை சுக்கிர ஏகாதசி என்பார்கள்.ஏகாதசி என்பது பெருமாளுக்கு உரிய திதி.  அதனால்தான் வைகுண்ட ஏகாதசி என்று போற்றுகிறோம்.  விரதம் இருந்து கொண்டாடுகிறோம். மாதங்களில் நான் மார்கழி என்று மாலவன் சொன்னதால், மார்கழி ஏகாதசி, மகத்துவம் வாய்ந்ததாக ஞானநூல்கள் விவரிக்கின்றன.

பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். நம்மில் நிறைய பேர், மாதந்தோறும் வருகிற  ஏகாதசியில், தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை ஸேவிப்பவர்கள் இருக்கிறார்கள்.ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த அற்புதமான நன்னாளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது உறுதி.

அந்த வகையில், ஆடி மாத ஏகாதசி ரொம்பவே சிறப்பு. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடுங்கள்.

முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து, பசித்திருப்போருக்கு வழங்குங்கள். உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் உங்களுக்குப் பிடித்தமான உறவுக்காரர்கள் நண்பர்கள் என யார் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் கூட  உணவுப் பொட்டலம் வழங்குங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் வழங்குங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் சீரும் சிறப்புமாக வாழ்வது உறுதி.

 

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com