செல்வம் அருளும் வெங்கடேசப் பெருமாள் கோவில்

சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள மாரிச் செட்டித் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளது. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த பத்மசாலியர் குலத்தவர்கள், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் சிறிய சன்னிதியில் மூலவர் வெங்கடேசப் பெருமாளை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர்.

சில காலங்கள் கழித்து, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் உற்சவ சிலைகளை மூலவர் சன்னிதியில் எழுந்தருளச் செய்தனர். இதையடுத்து துவஜஸ்தம்பமும், பலிபீடமும் ஏற்படுத்தப்பட்டது. பெரிய திருவடி (கருடன்) மூலவர் விக்கிரகம், அலர்மேல் மங்கைத் தாயார், ஆண்டாள் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளை தனிச் சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்தனர். அனுமனுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் 30 வருடங்களுக்கு முன் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டன.

இந்த ஆலயத்தில் பேயாழ்வார், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகளும் உள்ளன. தவிர ஆண்டாள் சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் திருமேனிகள் காணப்படுகின்றன. 2001-ம் ஆண்டு ஆலயத்திற்கு நேர்த்தி சேர்க்கும் வகையில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.

ஆலயத்தின் ராஜகோபுரம், பலிபீடம், துவஜஸ்தம்பம், கருடாழ்வார் சன்னிதியைக் கடந்து சென்றால், அர்த்த மண்டபம் உள்ளது. கல் கட்டடமான இந்த மண்டபத்தின் மேற்கூரையில், சதுரமான அமைப்பில் 12 ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறை முன்பு துவாரபாலகர்களை நாம் தரிசிக்கலாம். கருவறை முகப்பில் திருமால் சயனக் கோலம், வலது பக்கம் பாவணா மகரிஷி, இடது பக்கம் மார்க்கண்டேய ரிஷி ஆகியோரது சுதைச் சிற்பங்களை நாம் காணலாம். இதையடுத்து நாம் கருவறையில் மேற்கு திருமுகமாக நின்ற திருக்கோலத்தில் சதுர்ப்புஜங்களுடன் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு முன்னால் உற்சவ மூர்த்தியாய் பெருமாள், ஸ்ரீதேவி – பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.

சுவாமி கருவறையை விட்டு வெளியே வந்தால், வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அலர்மேல் மங்கைத் தாயார் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயார் மூலவர் மற்றும் உற்சவராக எழுந்தருளியுள்ளார். முகத்தில் புன்னகை மலர நான்கு கரங்களுடன், இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடன் காணப்படுகிறார். தாயாரின் கனிவான பார்வையில் நமது மனக் குறைகள் நீங்குகிறது.

தென்கிழக்கு மூலையில் ஆண்டாள் சன்னிதி உள்ளது. ஆண்டாள் இரு திருக்கரங்களுடன் ஒரு திவ்யமான சேவையை அளிக்கின்றார். ஆண்டாளுக்கு சற்று முன்னால் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ராமர் சன்னிதிக்கு நேர் எதிரில் தென்மேற்கு மூலையில் ஆஞ்சநேயர் சிறிய உருவ வடிவில் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். வட மேற்கு மூலையில் தனிச்சன்னிதியில் மூலவராக முன்புறம் சக்கரத்தாழ்வாரையும், பின்புறம் யோக நரசிம்மரையும் கண்டு சேவிக்கலாம்.

இந்த ஆலயத்தில் திருமணம் கைகூடுவதற்கும், வாழ்வில் மேன்மை பெறவும் பெருமாள் சன்னிதியில் வழிபாடு செய்கிறார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லை அகலவும், பயம் நீங்கவும் சக்கரத்தாழ்வாரை வழிபடுகிறார்கள். செல்வம் பெருக அலர்மேல் மங்கை தாயாரையும், வியாபார தடை நீங்குவதற்கு ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்கிறார்கள்.

பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், சித்திரை மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று ராமானுஜருக்கும், புனர்பூசம் நட்சத்திர நாளில் முதலியாண்டானுக்கும் சாற்றுமுறை நடக்கிறது. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் நம்மாழ்வார் சாற்றுமுறை நடைபெறும். ஆடி மாதம் ஆடிப்பூர விழாவும், ஆண்டாள் அவதார உற்சவமும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் சாற்றுமுறை, பூராடம் நட்சத்திரத்தில் சேனைமுதலிகள் சாற்றுமுறை, சதய நட்சத்திரம் அன்று பேயாழ்வாருக்கும், திருவோணம் நட்சத்திரத்தில் பொய்கையாழ்வாருக்கும், அவிட்டம் நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாருக்கும் சாற்றுமுறை நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, பாஞ்சராத்ர தீபம் ஏற்றப்படுகிறது. மார்கழி மாதத்தில் தனுர் மாத பூஜையும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, போகிப் பண்டிகை போன்றவையும், ஆண்டாள் திருக்கல்யாண சேர்த்தி உற்சவமும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் சங்கராந்தி உற்சவம், கனுப் பண்டிகைகளும், மாசி மாதத்தில் மகம் திருமஞ்சனம் மற்றும் சமுத்திர தீர்த்தவாரி, பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், சேர்த்தி உற்சவம், ராமநவமி மற்றும் 10 நாள் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்புடன் நடக்கிறது.

இவ்வாலயத்தில் எந்த ஆலயத்திலும் நடைபெறாத தீப்பந்தத் திருவிழா பக்தஜன சபையினரால் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com