செவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்

vinayagar

செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை நீங்கும்.

செவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்
திருமணத்துக்கு ஜாதகப்பொருத்தம் பார்ப்பவர்களை பெரும்பாலும் கலங்கடிப்பது செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷத்தால் நிறைய பேரின் திருமணம் தாமதம் ஆகி விடுவதுண்டு. செவ்வாய் தோஷத்தை விரட்டும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

விநாயகரின் பரமபக்தரான பரத்துவாச முனிவர் தலயாத்திரை’ சென்றபோது நர்மதை நதியில் நீராடினார். அங்கே ஒரு கந்தர்வ மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார். இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. செந்நிறம் கொண்டிருந்ததால் ‘அங்காகரன்’ என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் ‘பூமி குமாரன்’ என்ற பெயரும் உண்டு.

அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர். அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் பெற்றார். அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.

செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும். திருமணத்துக்கு ஜாதக பொருத்தங்களைப் பார்க்கத் தொடங்கும் போது முதலில் ஆயுள் பலத்தைக் கண்டறிய வேண்டும். பிறகு பெண், பிள்ளை இருவருடைய தசாபுத்தி அந்தர காலங்களைப் பார்க்க வேண்டும்.

இருவருக்கும் திருமண பாக்கியம் வந்திருக்கிறதா? களத்திர தோஷம் உண்டா? மாங்கல்ய தீர்க்கும் இருக்கிறதா? என்பன போன்ற முக்கியமான அம்சங்களைப் பார்க்க வேண்டும். பிறகு பொருத்தங்கள் பார்க்கும்போது பெண் அல்லது பிள்ளை ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். குறிப்பாகச் செவ்வாய் தோஷத்தை அறிவது அவசியமாகும். பெண் அல்லது பிள்ளையின் ஜாதகத்தில் லக்கனத்திறகு 2, 4, 7, 8, 12 ஆகிய இல்லங்களில் செவ்வாய் தங்கினால் தோஷமாகக் கருதப்படுகிறது.

அடுத்து சந்திரன் தங்கிய ராசிக்கு 2, 4, 7, 8, 12 இல்லங்களில் செவ்வாய் நின்றாலும் தோஷமாகும்.

மூன்றாவதாக சுக்கிரன் நின்ற ராசிக்கு 2, 4, 7, 8, 12 ராசிகளில் செவ்வாய் தங்கினாலும் தோஷமடைகிறார்.

ஆனால் 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் தங்கினால் மாத்திரம் தோஷமடைந்து விட்டதாகக் கூற இயலாது.

ஜாதகத்தில் மேஷம், விருச்சிகம் போன்ற ஆட்சி வீடுகளில் செவ்வாய் தங்கினால் அதுதோஷமாகாது. அதேபோல மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றாலும் தோஷம் இல்லை.

கடக ராசியில் செவ்வாய் தங்கி நீச்சமடைந்தாலும் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை. செவ்வாய் தோஷ அமைப்பில் இடம் பெற்றுள்ள போது அந்த கிரகத்தை குரு, சனி, ராகு, கேது பார்த்தாலும் அல்லது அந்த கிரகங்களும் சேர்ந்து தங்கினாலும் செவ்வாய் தோஷம் பரிகாரமடைந்து விடுகிறது.

அங்காரக தோஷம் உண்டாகும் வண்ணம் ஜாதகத்தில் அமைந்து அது கடகம் அல்லது சிம்ம ராசியானாலோ, லக்கனமானாலோ அதை செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத முடியாது. கடகம், சிம்மம் லக்கனமாக அல்லது சந்திரா லக்கனமாக உள்ள ஜாதகரைச் செவ்வாய் தோஷமுடையவராகக் கூறுவதற்கில்லை.
செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்கு பரிகாரமாகவும் சாந்தி செய்வது போன்றும் சிலவற்றை செய்வதன் மூலம் திருமணம் கைகூடும். சுபம் நடைபெறும்.

செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரத நாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி, சிவந்த வஸ்திரம் உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு வஸ்திரம், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.