சௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது செளம்ய நாராயணர் திருக்கோயில். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இத்தலத்து மூலவர் செளம்ய நாராயணராகவும், தாயார் திருமாமகளாகவும் அருட்பாலிக்கின்றனர். உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இத்தலத்திற்குண்டு. ராமானுஜருக்கு வைஷ்ணவ சித்தாந்தங்கள் பலவற்றையும் போதித்து அருளிய பெரிய நம்பிகள், வைஷ்ணவ மந்திரத்தை திருக்கோஷ்டியூரில் வாழும் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். உடனே கோஷ்டியூருக்குப் புறப்பட்ட ராமானுஜர், நம்பிகளை அணுகித் தம்மை அறிமுகம் செய்து கொண்டார். நம்பிகளோ துளியும் விசாரிக்காமல், கண்டும் காணாதவர்போல இருந்து விட்டார். தம்மை குரு சோதிக்கிறார் என்பதை அறிந்து ராமானுஜரும் திருவரங்கம் திரும்பினார்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு பெருமாளை தரிசிக்க திருவரங்கம் வந்த திருக்கோஷ்டியூர் நம்பிகளை ராமானுஜர் தரிசிக்க, நம்பிகள் அவரை நோக்கி, நம் ஊருக்கு வாரும்,” என்று சொல்லிப் போய்விட்டார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, ‘யார்?’ என்று கேட்க, ‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,’ என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, ‘நான் செத்த பின்பு வா!’ என்றார் . இப்படி பதினெட்டு முறை திரும்பத்திரும்ப திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டார். எனினும், ராமானுஜரின் உள்ளம் தளரவில்லை, ஊக்கம் குறையவில்லை, கோஷ்டியூர் நம்பிகளைக் குறைகூறலாம் என்ற எண்ணம்கூடத் தோன்றவில்லை. ஒரு நாள் உனக்கு மட்டுமே உபதேசம். வேறு எவருக்கும் சொல்லிவிடக் கூடாது,” என்ற கட்டளையுடன் அஷ்டாக்ஷர மந்திரத்தை விளக்க ஆரம்பித்தார் நம்பிகள். இந்த ஞானம் குரு பரம்பரையில் வந்துள்ளது, இதை நீரும் ரகசியமாக வைத்துக் கொண்டு, பாத்திரம் அறிந்து பக்குவமாக வழங்க வேண்டும்.” அவ்வாறே செய்வதாகத் தம் தலையைத் தொட்டு சீடர் உறுதியளிக்க வேண்டும் என்றார் நம்பிகள். ராமானுஜரும் அவரடிகளில் தாழ்ந்து திருவடிகளை தொட்டு, குருவின் ஆணையை மீறினால் நரகம் புகுவேன்!” என்று உறுதியளித்தார்.

இறுதியில் நம்பிகள் வாழ்த்த, ராமானுஜர் சிரம் தாழ்த்தி தண்டம் சமர்ப்பித்து வணங்கி விடைபெற்றார். மறுநாள், காலைக் கதிரவன் கதிர்களை வீச, திருக்கோஷ்டியூரில் திருவிழா ஒன்றிற்காக மக்கள் கூட ஊரே களைகட்டியது. அனைவரின் முன், ராமானுஜர். ஆசையுடையோர் அனைவரும் கேட்டு அனுபவிக்கலாம்,” என்று அறிவித்து, அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் வைஷ்ணவ மந்திரத்தை எடுத்துரைத்தார் என்று குரு பரம்பரையின் கதைகள் கூறுகின்றன. கோபுரத்தில் ஏறி நின்று முழங்கினார் என்றும் சிலர் கூறுகின்றனர். எப்படி நோக்கினும், ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தையும் அதன் விசேஷ அர்த்தங்களையும் அனைவருக்கும் வாரி வழங்கினார் ராமானுஜர். செய்தி கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பிகள் உடனடியாக ராமானுஜரை தமது இடத்திற்கு வரவழைத்தார், ஊருக்கெல்லாம் உபதேசித்து என்ன பெற்றாய்?”நரகம் பெற்றேன், ஸ்வாமி!” என்று பணிவுடன் உரைத்தார் ராமானுஜர். ஒப்புக்கொள்கிறீரா?” ஆம், ஆச்சார்யரின் ஆணையை மீறி விட்டேனே!” அறிந்தும் இவ்வாறு செய்யலாமா?”அறிந்தே செய்தேன், ஸ்வாமி!

நான் ஒருவன் நசிந்தாலும் ஊரார் அனைவரும் பேரின்பம் அடைவரே என நினைத்துவிட்டது என் உள்ளம்.” தமது சீடனின் மொழிகளைக் கேட்டு நம்பிகள் திகைத்தார், மகிழ்ந்தார், வாழ்த்தினார். ராமானுஜரின் கருணையான உள்ளத்தை எண்ணி எண்ணி நெகிழ்ந்த நம்பி ‘நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்’ என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார். தாம் நரகம் புகுந்தாலும் எண்ணற்றோர் வைகுண்டம் சென்றால் நன்று என்ற எண்ணம் அவ்வளவு எளிதான எண்ணமா? இவ்வாறு கருணையே வாழ்வாகக் கொண்ட ராமானுஜரை காரேய் கருணை ராமானுஜா!” என்று திருவரங்கத்து அமுதனார் போற்றுகிறார். கோயிலினுள் நுழைந்ததுமே இடப்பக்கத்தில் ஸ்ரீராமானுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் (இவருடன் இவரது திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன் சீதைலட்சுமணன்அனுமனும்) தனித்தனி சந்நதிகளில் காட்சி தருகிறார். மயன் என்ற அசுரத் தச்சனும், தென்பகுதியை விஸ்வகர்மா என்ற தேவதச்சனும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர்.

‘ஓம்’, ‘நமோ’, ‘நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் செளம்யநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என திருமால் நான்கு நிலைகளில் அருள்கிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சந்நதி இருக்கிறது. இவளுக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு.
அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருவரும் இருப்பது வித்தியாசமான தரிசனம். பிராகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.

நான்முகனிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி திருமாலிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். திருமாலும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, திருமாலின் தரிசனம் வேண்டி கடுந்தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் திருமால். அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் திருமால்.
அதனால் அகமகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை அப்போதே தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார்.

இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியருளும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் ‘திருக்கோட்டியூர்’ என்றும் பெயர் பெற்றது. இத்தலத்தில் திருவருட்பாலிக்கும் பெருமாள் பேரழகு கொண்டவர் என்பதால் செளம்யநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக ஆலயங்களில் உற்சவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம். திருமால் இரண்யனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த செளம்ய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது. இங்கே ஒரு சிவ சந்நதியும் இருக்கிறது. இந்தத் தலத்தில் இரண்ய வதம் பற்றிய திட்டத்தைத் தீட்டும்போது ஈசனும் அதில் பங்கேற்றதன் சாட்சி! இவரை ‘சரபேஸ்வர லிங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். தனி சந்நதிக்கு முன்னால் ஈசனைப் பார்த்தபடி நந்தி அமர்ந்தி ருக்க, சந்நதிக்குள் சிறு உருவில் இந்த லிங்கம் அருட்பாலித்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு முன்னால், சந்நதிக்குள் வேல் தாங்கிய முருகன், சனகாதி முனிவர்கள், நாகர் சிலைகளும் தரிசனமளிக்கின்றன. அடுத்து, சக்கரத்தாழ்வார் தரிசனம் நல்குகிறார். சற்றுப் பக்கத்தில் ருக்மிணி சத்யபாமா சமேத நர்த்தன கிருஷ்ணன் அழகே வடிவாய் காட்சியளிக்கிறார். இதே திருத் தோற்றத்தையும், கண்ணனின் இன்னும் பல வான அழகுத் தோற்றங்களையும், இந்தத் தலத்தில் தரிசித்து மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அவருக்கு திருக்கோஷ்டியூர், ஆயர்பாடியாகவே தெரிந்தது.

மேலே சில படிகள் ஏறிச் சென்றால் பெருமாள் சயன கோலத்தில் அற்புத வடிவில் தரிசனம் அளிக்கிறார். இவரது கருவறைக்குள் தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள். வழக்கம்போல ஸ்ரீதேவிபூதேவி பிரதானமாக அங்கம் வகிக்க, வழக்கம்போல இல்லாமல் பிரம்மா இடம் பெற்றிருக்கிறார். பிரம்மாவுடன் அவரது பத்தினிகளான சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி மூவரும் உடன் அமைந்திருக்கிறார்கள்! இம்மூவரும் வீணா கானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். இந்தத்தலத்தில் பெருமாள் உறையக் காரணமாக இருந்த கதம்ப மகரிஷியும் இருக்கிறார். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்று பெயர். மழலை பாக்கியம் இல்லாதவர்கள், இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், விரைவில் அவர்களுக்கு மழலை வரம் கிடைப்பதாக நம்பிக்கை. பெருமாளின் திருவடியருகே அடங்கிப்போன மதுகைடப அரக்கர்கள், தேவேந்திரன், காசி மகாராஜா மற்றும் சந்திரனின் பேரனான அதாவது புதனின் மகனான புருரூப சக்கரவர்த்தி என்று ஒரு திருமாலடியார் பெருங்கூட்டமே காட்சி தருகிறது.

இவ்வாறு தேவர்கள் நடுவே தோன்றியமையால் ‘ஸ்தித நாராயணன்’ என்றும் திருமால் பெயர் கொள்கிறார். பாற்கடல் காட்சிபோல இங்கும் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டதால், ‘உரக மெல்லணையான்’. உரகம் என்றால் பாம்பு. மெல்லணை என்பது அதன் மிருதுவான உடல் படுக்கை. உரக மெல்லணையான் கொலுவீற்றிருக்கும் கருவறை விமானம், அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது. 108 திவ்ய தேசங்களிலேயே இங்கும், அருகே, மதுரையைச் சேர்ந்த திருக்கூடல் தலத்திலும்தான் இத்தகைய, ஆகம விதிகளுக்குட்பட்ட அஷ்டாங்க விமானத்தைக் காண முடியும்! அடுத்து, இரண்டாவது தளத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற நாராயணனாக சேவை சாதிக்கிறார். மூன்றாவதான பரமபதநாதன் கொலுவிருக்கும் தளத்திற்கு செல்ல குறுகலாக மேலேறும் படிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் மேல் விதானம் தலையில் இடிக்க, சற்றே குனிந்து, உடலைக் குறுக்கிக் கொண்டுதான் போக முடியும்.

கோபுரத்தின் இந்த உச்சியிலிருந்துதான் ராமானுஜர் உலகோர் அனைவரும் உய்வடைய அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும், அதன் பலனையும் பகிரங்கமாக அறிவித்தார். ஊரைப் பார்த்தவண்ணம் அவரது திருவுருவச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுர உச்சியிலிருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பிகளும், ராமானுஜரும் வாழ்ந்த வீடுகள் அமைந்திருந்த பகுதியைக் காணலாம். இந்த வீடு ‘கல்திருமாளிகை’ என்றழைக்கப்படுகிறது. நம்பியின் வம்சாவழியினர் இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள். கீழிறங்கி வந்தால் தாயார் திருமாமகள் நாச்சியாரை தரிசனம் செய்யலாம்.
புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார்.

பிராகாரத்தில் உள்ள இந்தக் கிணறை ‘மகாமகக் கிணறு’ என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, பெருமாள் கருட வாகனத்தில் ஆரோகணித்து இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார். இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாத தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தம். அப்போது பக்தர்கள் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள படிகட்டுகளில் அகல்விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொள்வார்கள். புதிதாக வேண்டிக் கொள்பவர்கள் இந்த விளக்குகள் எரிந்து முடியும்வரை காத்திருந்து பிறகு அந்த விளக்கை எடுத்துச் செல்வார்கள். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.

இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர். மறுவருடம் அவர்கள் கோரிக்கை நிறைவேறியவுடன் அந்த விளக்கை கொண்டு வந்து தெப்பக்குளத்தில் ஏற்றிவைத்து விட்டுச் செல்வது வழக்கம். குறிப்பாக திருமணம் நடைபெற வேண்டும் எனும் கோரிக்கையுடன் வரும் கன்னியர்கள் ஏராளம். இதனால் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பெண்கள் கூட்டமே நிறைந்திருக்கும்! இங்கு வந்து தெப்ப விளக்கு ஏற்றினால், நல்ல மண வாழ்க்கை ஏற்படுவது உறுதி. மேலும் ஏராளமான பக்தர்கள், தெப்ப மண்டபத்தை சுற்றி அன்னதானம் செய்வதும் வழக்கம். ஆலயம் காலை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com