ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் 9 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற இருப்பதையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடங்குகிறது. புனித நீர் ஊர்வலத்தில் சங்கராச்சாரியார் பங்கேற்றார்.

காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்த போது எடுத்த படம்.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 9 மற்றும் 12-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள் ளது. 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியில் இருந்து 8.15 மணிக்குள் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகமும், 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து 7.15ணிக்குள் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. 2 கட்ட கும்பாபிஷேகங்களும் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.


கும்பாபிஷேகத்தையொட்டி யாக குண்டங்கள் கோவில் வளாகத்தில் நவராத்திரி மண்டபம், சுந்தரபாண்டியன் கோபுரம் ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு பரிவார மூர்த்திகள் யாகசாலை பிரவேசமும், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு 8.15 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைக்கு புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்பாக காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமியை யானைகள் புடை சூழ அழைத்து வந்த போது எடுத்த படம்.

இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குவதையொட்டி நேற்று காலை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாம்பழச்சாலை பழைய காவிரி படித்துறையில் இருந்து புறப்பட்ட புனிதநீர் ஊர்வலத்தை காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்து பக்தர்களுடன் நடந்து சென்றார்.

ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட 4 யானைகள் வந்தன. அதில் ஒரு யானையின் மீது அமர்ந்திருந்த அர்ச்சகர் தங்க குடத்தில் புனித நீர் எடுத்து சென்றார். மேலும் பல பக்தர்கள் வெள்ளி, பித்தளை குடங்களில் புனித நீரை சுமந்து சென்றனர். ஊர்வலத்தின் முன்பகுதியில் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், ஒட்டகங்களும் சென்றன. மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலை அடைந்தது.

இன்று யாகசாலை பூஜை தொடங்குவதையொட்டி நேற்று மாலை 5-ம் பிரகாரம் ஈசானிய விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவல் தெய்வமான கும்பகோணத்தான் சாலையில் உள்ள இரணியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com