ஞானத்தின் அடையாளம் கந்தக்கடவுள்

கந்தபெருமானின் திருநாமங்கள் ஒவ்வொன்றும், அடியார்கள்மீது அவர் காட்டுகிற கருணையையும் அடியார்களுக்காக அவர் எடுக்கும் வடிவங்களையும் பிரதிபலிப்பவை.

ஆறுமுகன், ஷண்முகன், ஷடானனன் (ஷட்=ஆறு, ஆனனம்=முகம்) – மூவிரு முகங்கள் கொண்டவர்;

அக்னிபூ – நெருப்பு வடிவான நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர்;
சிவகுமாரன், குமாரன் – சிவனாருடைய மகனாகத் தோன்றியவர்;
பார்வதி நந்தனன், பார்வதிப் பிரியன் – அம்பிகைக்கு மகிழ்ச்சியைத் தருபவர்;
காங்கேயன் – கங்கையின் மகன் அல்லது கங்கையால் தோற்றுவிக்கப்பட்டவர் (கங்கைக் கரையில் நெருப்புப் பொறி குளிர்ந்ததால்);
சரவணன், சரவணகுமாரன் – நாணல் காட்டில் உருவெடுத்தவர்;

கார்த்திகேயன் – கார்த்திகைப் பெண் களால் வளர்க்கப்பட்டவர்;
ஷாண்மாதுரன் – ஆறு தாயர்களைக் கொண்டவர்;
விசாகன் – (வைகாசி) விசாகத் திரு நாளில் தோன்றியவர்;
முருகன் – அழகானவர்;

சேயோன் – குழந்தை வடிவானவர்; செம்மையானவர்;
செவ்வேள் – செந்நிறத்தவர்;
கந்தன் – முழுமையானவர்; ஆதாரமானவர்;
ஸ்கந்தன் – தொகுக்கப்பட்டவர்; தீமையை அழிப்பவர்;

குஹன் – இதய குகையில் வழிப்பவர்;
தகப்பன்சுவாமி, சுவாமிநாதன் – தந்தைக்கு (அதாவது, சிவனாரான சுவாமிக்கு) உபதேசம் செய்த நாதர்;
இளம்பூரணர் – முழுமையானவர், ஆனால், இளமை வடிவம் கொண்டவர்;
தண்டபாணி, தண்டாயுதபாணி – கையில் கோல் கொண்டவர்;

வேலன், வடிவேலன், வேலவன், வேலாயுதன் -வேல் என்னும் ஆயுதம் தாங்கியவர்;
சேனானி, சேனாபதி, சேனாதிபதி – இந்திரனின் படைகளின் தலைவர்;
முத்துக்குமரன் – முக்தியைத் தருகிற குமாரர்; முத்து போன்றவர்;
சேனாபதி – தேவசேனையான தெய் வானையின் மணாளர்;

வள்ளீசன், வள்ளிமனாளர், வள்ளி நாயகம் – வள்ளியின் மணாளர்;
மயில் வாஹனன், சிகி வாஹனன் (சிகி-=மயில்), மயூரநாதர் – மயிலை வாகன மாகக் கொண்டவர்;
கஜ வாஹனன் – (சில சமயங்களில்) யானையை வாகனமாகக் கொண்டவர்;
அஜ வாஹனன் – (சில சமயங்களில்) ஆட்டை வாகனமாகக் கொண்டவர்

சேவற்கொடியோன், குக்குடத்வஜன் – சேவலைத் தம்முடைய கொடியில் கொண்டவர்;
தாரகாரி – தாரகாசுரனை அழித்தவர்;
கிரௌஞ்சாரி, கிரௌஞ்சபித் – கிரௌஞ்ச மலையைப் பிளந்தவர்;
சூராரி, சூரஜித் – சூரனை வென்றவர்

இப்படிப்பட்ட ஏராளமான திரு நாமங்களில் முக்கியமான 16 திருநாமங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஜபிப் பவர்களுக்கான நற்பலன்களையும் வடமொழியிலுள்ள ஸ்காந்தமஹாபுராணம் நவில்கிறது. ஞான சக்தி ஆத்மா, ஸ்கந்தன், அக்னிபூ, பாஹலேயன், காங்கேயன், சரவண உத்பவன், கார்த்திகேயன், குமாரன், ஷண்முகன், குக்குடத்வஜன், சக்திதரன், குகன், பிரம்மசாரீ, ஷாண் மாதுரன், கிரௌஞ்சபித், சிகிவாஹனன்

-இந்தத் திருநாமங்களை நாள்தோறும் ஓதினால் என்ன கிட்டும்? விவாஹே துர்கமே மார்கே துர்ஜயே கவித்வே மஹா சாஸ்த்ரே வின்ஞானார்த்தீ பலம் லபேத் – திருமணம் நடைபெறும், திரு மணம் நற்பலனைத் தரும்; செல்லும் வழி நன்மையைப் பயக்கும்; செயல்கள் வெற்றி பெறும், வெல்ல முடியாததாகத் தோன்றியதும் வெற்றியைக் கொடுக்கும்; அறிவும் ஞானமும் பாண்டித்யமும் கைகூடும்; நல்ல நெறிகளின் பயன் கிட்டும். மொத்தத்தில், யாவும் நன்மை யாகவே அமையும்.

பார்வதியும் பரமேச்வரனும் முருகப் பெருமானின் பெருமைகள்குறித்து உரையாடியபோது, கந்தன் எடுத்துக் கொண்ட திருவடிவம் குறித்தும் குறிப்பிடுகிறார்கள். ஷட்வக்த்ர, துவாதச புஜ, அஷ்டாதச லோசன, அநுக்ரஹாய லோகானாம் ரூபம் அங்கீக்ருதம் சுபம் – ஆறுமுகங்கள், பன்னிரு தோள்கள், பதினெட்டுக் கண்கள் என்னும் அழகுத் திருக்கோலத்தை முருகப்பெருமான் ஏன் கொண்டாராம் தெரியுமா? இந்த உலகைக் காப்பதற்காகவும் அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காகவும்!

ஆறுமுகங்களும் பன்னிரு தோள்களும் சரி, பதினெட்டுக் கண்கள் எப்படி? முருகப்பெருமான், சாட்சாத் சிவ அம்சம். சிவனாகத் தோற்றம் தருகிற பரம்பொருள், சிவகுமாரராகவும் தோற்றம் தருகிறது. பரம்பொருளுக்கே ‘பூரணர்’ என்று பெயர். இதே பரம்பொருள், இளமையான வடிவம் கொள்வதால், ‘இளம்பூரணர்’ ஆகிறார். சிவனுக்கு நெற்றிக்கண் இருப்பது போலவே, முருகருக்கும் உண்டு. ஆகவே, ஆறு முகங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்று திருவிழிகள் என்பதால், மொத்தம் 18 கண்கள்.

இந்த 18 திருவிழிகளைப் பற்றி முருகரே மொழிந்ததாகவும் தகவல் ஒன்றுண்டு. ‘பதினெட்டுக் கண்களோடு அவதார வடிவம் கொள்ளவேண்டுமா?’ என்று வினவினார்களாம். கந்தக்கடவுள் கூறினாராம்: இரு விழிகள் உள்ள் வடிவத்தில் அவதாரம் எடுத்தால், பூவுல கிற்குப் போதாது. அடியார்கள் ஒவ் வொருவரும் கடைக்கோடிப் பார்வையைக் கொடு என்றுதான் அடிபணிகிறார்கள். அனைவருக்கும் பார்வையை வீசவேண்டு மானால்,நிறைய கண்கள் இருந்தால் வசதி. குறைந்தபட்சம், பதினெட்டுக் கண்களாவது இருக் கட்டுமே!

அடடா, அடியார்கள்மீதுதான் இந்தக் கலியுக வரதனுக்கு எத்தனை கருணை! அருணகிரிநாதருக்காக கோபுரத்தின் மீது தோன்றி காட்சி கொடுத்தது, இராமலிங்க வள்ள லாருக்குக் கண்ணாடியில் காட்சி கொடுத்து அருளி யது, கச்சியப்பருக்காக இலக்கணம் செப் பியது, குமரகுருபரருக்குச் சொல் கொடுத்தது என்று முருகப்பெருமான் செய்திருக்கும் திருவிளையாடல்களும் அநேகம்.

முருகப்பெருமானின் அடியார்களின் வரிசையில், சமீப கால வரலாற்றில், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இராமேச்வரத்தில் தோன்றிய பாம்பன் சுவாமிகள், உடலுக்கும் உள்ளத்துக்கும் முருகப்பெருமானே பாதுகாப்பு என்னும் பொருள்படும்படியாக ஷண்முகக் கவசம் என்னும் தோத்திரத்தை இயற்றினார். இவருடைய வாழ்க்கையில் கந்தபிரான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை.

இவருடைய மகள் ஒருநாள் வயிற்று நோயால் அழுதுகொண்டேயிருந்தாள். வைத்தியரிடம் போகலாம் என்று மனைவி சொல்ல, அதனை மறுதலித்த இவர், முருகரைப் பிரார்த்திக்கச் சொன்னார். அன்று மாலை; குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க.என்ன என்று இவர் வினவ. முருக தியானத்தில் இவர் அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் சந்நியாசி ஒருவர் வந்து குழந்தைக்குத் திருநீறு பூசியதாகவும் அதன் பின்னர் குழந்தை அழுகையை விடுத்துச் சிரித்து விளையாடி உறங்கிவிட்டதாகவும் மனைவி கூறினார். வந்தது முருகனோ?

இவருக்காகச் செருப்புத் தைக்கச் சொன்னது, குமரகோட்டத்திற்கு வழி காட்டியது, பழனியாண்டியாகத் தோன்றி உபதேசம் தந்தது என்று தொடர்ந்து நடைபெற்ற அற்புதங்களில் தலையாயது, 1923-ல் நடந்த சிகிச்சை. சென்னையில் தங்கியிருந்த காலத்தில், 1923, டிசம்பர் 27ஆம் நாள், தம்புச் செட்டித் தெருவில், குதிரை வண்டி ஒன்றினால் கீழே தள்ளப்பட்டார் பாம்பன் சுவாமிகள். இடது கணுக்காலில் கடுமையான காயம். வண்டிச் சக்கரம் காலில் ஏறிவிட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரணம் சரியாக ஆறாத நிலையில், எலும்புகளிலும் உடைப்பு ஏற்பட்டிருந்ததால், 73 வய தான இந்த நோயாளிக்கு எலும்புகள் கூடுவதற்கு வாய்ப்பில்லை, ஆகவே இடது கணுக்கால் அளவில் வெட்டி எடுத்துவிடவேண்டும் என்று மருத்து வர்கள் கூறினர்.

இவருடைய சீடராகவும் நண்பராகவும் விளங்கிய சின்னசுவாமி என்பவர், பிறருக்கு உதவிய ஷண்முகக் கவசம் இவருக்கே உதவலாகாதா என்னும் ஆதங்கத்துடன் அதனை ஓதத் தொடங்கினார். அறுவை சிகிச் சைக்கு உடன்படாத சுவாமிகள், எது நடந்தாலும் அது இறைவன் சித்தம் என்று கூறிவிட்டு, முருகப்பெருமான் திருநாமத்தை ஜபித்தபடி இருந்தார். மருத்துவமனையில் சுவாமிகள் அனு மதிக்கப்பட்ட 11–வது நாள் மாலை, மயில் அகவும் குரல் கேட்டது. சுவாமிகள் சாளரத்தைத் திரும்பிப் பார்க்க, தோகை விரித்த மயிலொன்று வானை மறைத்தபடி நின்றது.

அருகில் மற்றொரு மயில் தோகை விரித்தாடியது. மயூரநாதரே வந்துவிட்டார் என்று சுவாமிகள் மகிழ்ந்த வேளையில் காட்சி மறைந்தது. கண்விட்டு மறைந்தாயே என்று சுவாமிகள் வருத்தப் பட்டார். சிறிது நேரத் தில் குழந்தை ஒன்று இவருடைய கட்டிலில் சிரித்தது. சிவந்த அக்குழந்தையே செவ்வேள் என்று ணரும் தருணத்தில் மறைந்தது. மறுநாள் சுவாமிகளைப் பரிசோதித்த மருத்து வர்கள், உடைந்துபோன எலும்புகள் ஒன்றுகூடி விட்டதாகவும் காலை வெட்டவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மயில்வாகனன் மயிலாகவும் குழந்தையாகவும் காட்சி கொடுத்துப் பிணி போக்கிய அந்நாளை நினைவுகூரும் விதத்தில், சுவாமிகளின் ஆணைப்படியே மயூர வாகன சேவன விழா கொண்டாடப் படலானது. சுவாமிகள் அனுமதிக்கப்ப ட்டிருந்தது அப்போதைய மன்ரோ வார்டு (பின்னாட்களில், இது வார்டு-11 என்றானது). சுவாமிகளின் படுக்கை எண் 11. மயில்கள் ஆடிய சம்பவம் நடந்தது 6.1.1924 (அனுமதிக்கப்பட்ட 11-வது நாள்). பூராட நட்சத்திரமும் பிரதமைத் திதியும் கூடிய அந்நாளை ஒட்டி, இப்போதும் சென்னை பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில் மார்கழி மாத வளர்பிறைப் பிரதமையில் மயூர வாகன சேவன விழா நடைபெறுகிறது.

நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படையில், இரண்டாவது படைவீடாக இடம்பெறுவது திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர். இங்கு, இன்றளவும் சூர சம்ஹாரப் பெருவிழா வெகு கோலாகலமாக நடைபெறுகிறது. வீரமகேந்திரபுரியில் சூரனை அழித்து, வீரமகேந்திரபுரியையே கடலுக்குள் அமிழ்த்திவிட்டு (அப்படியரு ஊரும் ஆணவமும் வேண்டாமென்று), வெற்றிவீரராகக் கந்தக் கடவுள் திருச்செந்தூர் திரும்பினார்; இங்கு,கைகளில் ஜபமாலை ஏந்திச் சிவபெருமானை வணங்கித் துதித்தார்.

எனினும், என்றைக்கோ ஆணவ மொழித்த சூரனை நினைவு கூர்வதுபோலவும், இப்போது ஆணவ மொழிப்பதற்காகவும், திருச்செந்தூரில் சூர சம்ஹாரப் பெருவிழா நிகழ்த்தப் பெறுகிறது.

ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று

– கந்தக் கடவுளின் ஆறு திருமுகங்களுக்கும் அழகு கூறுகிறார் அருணகிரியார். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாகக் கந்தர் அனுபூதியில், ‘உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப வினோதனும் நீயலையோ’ என்றும் பாராட்டுகிறார்.

சூரசம்ஹாரப் பெருவிழாவில் ஆறாம் நாள் (கந்த சஷ்டி ஆறாம் நாள்) சூரன் சம்ஹரிக்கப்பட்டபின்னர், ஏழாம் நாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். தன்னுடைய செல்வங்களையும் பதவியையும் தேவலோகத்தையும் முருகப்பெருமான் மீட்டுத் தந்தார் என்பதால், தன்னுடைய மகள் தெய்வானையைத் திருமணம் செய்து தந்தானாம் தேவேந்திரன். இந்தத் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. பின்னர், பரிபூரணம் என்றழைக்கப்படும் தணிகை மலையில் எழுந்தருளி, அன்பின் நாயகியாம் வள்ளியைச் சந்தித்து அவளையும் கைப்பிடிக்கிறார் கந்தபிரான்.

திருமாலின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளிலிருந்து தோன்றியவர்கள் அம்ருதவல்லியும் சௌந்தரவல்லியும். இருவரும் கந்தனையே மணாளனாக வரிக்க, உள்ளத்து ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இருவரையும் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பினார் அந்தப் பரந்தாமன். அம்ருதவல்லி, தேவேந்திரன் மகளாக வளர்வதற்குச் சென்றாள். சௌந்தரவல்லி, வள்ளிக் கொடியின் கீழ் குழவியாகத் தோன்றி, வேடுவத் தலைவன் நம்பிராஜன் மகளாக வளரத் தலைப்பட்டாள். ஒருத்தி தேவமகளானாள்; ஒருத்தி ஜீவ மகளானாள்.

இந்திரனின் ஐராவத யானை, இந்திரன் மகளைச் செல்லமாகப் பார்த்துக் கொண்டதாம்; எனவே, யானை வளர்த்ததால் அவள் ‘தெய்வ யானை’ ஆனாள். தேவசேனா என்றும் அழைக்கப்பட்டாள். முருகர்-தெய்வானை திருமணம் பல்லோரும் புடைசூழ விமரிசையாக நடந்தேறியது.

ஆனால், வள்ளி கதையோ வேறு. அவளைக் கரம்பிடிக்க வேண்டுமென்று பற்பல வேடங்களிட்டார் பரிபூரண நாயகர். வேடன் ஆனார், மரம் ஆனார், கிழவர் ஆனார். இதன் பின்னரும், வள்ளியை அழைத்துக் கொண்டு சென்றபோது, அவளுடைய சொந்தக் காரர்கள் சண் டைக்கு வந்தனர். அவர்களோடு போரிட்டு வெல்ல, அவர்களைக் காப்பாற்றும்படி வள்ளியே அழுதாள். அவளையே அவர்களை நோக்கச் சொன்னார்; அவர்கள் உயிர்த்தனர்.

வள்ளி தெய்வானை ஆகிய இருவரும் இருபுறம் திகழ, நடுநாயகமாகக் காட்சி தரும் கந்தக் கடவுள், ஞானத்தின் அடையாளம். ஞான சக்தி. வள்ளியே இச்சா சக்தி; தெய்வானை கிரியா சக்தி. எந்தச் செயலைச் செய்யவேண்டு மானாலும், அதற்கான ‘ஆசை, விருப்பம்’ உள்ளத்தில் எழவேண் டும். அதுவே இச்சா சக்தி. ஆசை எழுந்தால், அதனை நிறைவேற்ற செயலுக்கான உத்வேகம் தோன்றும்; அதுவே கிரியா சக்தி. இச்சா சக்தி நேர்மையாக அமைய, கிரியா சக்தி முறையாகச் செயல்பட, நிறைவான வெற்றி ஞானம் தரும். இதுவே வள்ளி-தெய்வானை-கந்த தத்துவம்.

வள்ளி என்பவள் ஜீவமகள். ஜீவாத் மாவின் அடையாளம். இந்த ஜீவாத்மாவைத் தம்முடன் இணைத்துக்கொள்வதற்காகப் பரமாத்மா பற்பல வேடங்கள் தாங்குகிறார். பற்பல வடிவங்களில் வந்து நிற்கிறார்; காத்திருக்கிறார்; அழைக்கிறார். இருப்பினும், குலம் என்றும் குடும்பம் என்றும் சுற்றம் என்றும் உறவு என்றும் பலவற்றையும் காட்டிக் காட்டி இந்த ஜீவன் உலகாயதத்தில் அழுகிறது. ஜீவனை உயர்த்தி, ஜீவன் வழியாகவே பிற ஜீவன்களுக்கும் உய்வு தருகிறார் கலியுக வரதன்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com