தடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்

வடசெந்தூர், காட்டுப்பாக்கம், சென்னை

செந்தூர் எனப்படும் அலைகடல் ஆர்ப்பரிக்கும் நகரில் செந்திலாண்டவன் அருள்வதைப் போல வட தமிழ்நாட்டிலும் முருகன் திருவருள் நிலைபெறச் செய்ய பக்தர்கள் சிலர் எண்ணினர்.காஞ்சி முனிவரிடம் சென்று தம் எண்ணத்தைத் தெரிவித்தனர். “நீங்கள் குறிப்பிட்ட இடத்தில்  திருச்செந்தூர் செந்திலாண்டவனை தாராளமாக பிரதிஷ்டை செய்யலாம்” என்று அவர் அருளாசி வழங்கினார். கூடவே, சுமார் 6 அடி உயரமுள்ள அழகான முருகன் சிலையை வைக்க ஏற்பாடும் செய்து கொடுத்து, இத்தலத்தின் அமைப்பு எப்படி இருக்கலாம் என்றும் ஆலோசனையும் தெரிவித்தார். அவருடைய அறிவுரைப்படி, இன்று கிழக்கு நோக்கும் திருமுக மண்டலத்துடன் முருகப்பெருமான் வலது கையில் வஜ்ரம், இடது கையில் ஜபமாலை மற்றும் அபய வரதக் கரங்களோடு வரப்பிரசாதியாக அருட்பாலிக்கிறார்.

வேத நாயகனின் திருமகன் அந்த முருகன் என்பதால் மூன்றடுக்கு வேத விமானத்தின் கீழ் அவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். முதலில் ஆலய நுழைவாயிலில் முருகவேளின் திருமணக் கோலம்      நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றால் பதினாறு வண்ணத் தூண்களோடு சந்தான மண்டபமும், வேலவன் சந்நதி முன்னால் மயில் வாகனமும் நம்மை ஈர்க்கின்றன. ஆறடி முருகனை உளமாற தரிசித்து விட்டு திருச்சுற்றை மேற்கொண்டால், சக்தி கணபதியும், அடுத்ததாக தனித்தனி கருவறையில் அனுமன், விஷ்ணு துர்க்கை, வடபாகத்தில் கோஷ்ட மேகலையை ஒட்டினாற்போல சுயம்புலிங்க மூர்த்தியாக கைலாசநாத சுவாமி, அருகே சண்டிகேசர், தெற்கு நோக்கி தர்மாம்பிகை ஆகியோர் அற்புத அருட்காட்சி அருள்கிறார்கள். திருச்சுற்றின் முடிவில் தட்சிணாமூர்த்தியும், நவகிரகங்களும் கொலுவீற்றிருக்கின்றனர்.

வடசெந்தூர் முருகன் சந்நதியில் செய்யப்படும் பிரார்த்தனையும் வித்தியாசமாக இருக்கிறது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதி, இந்த செந்தூர் முருகன் சந்நதிக்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு, சஷ்டி அல்லது கார்த்திகை என ஏதேனும் ஒருநாளில் வந்து, அர்ச்சனை, பூஜைகள் செய்து தினைமாவும் தேனும் கலந்த பிரசாதத்தை நிவேதனம் செய்கிறார்கள். பிறகு இந்த பிரசாதத்தினை அங்கேயே இருவரும் சிறிதளவு உட்கொள்கிறார்கள். இந்த ஆலயத்திற்கு வந்திருக்கக் கூடிய குழந்தைகளுக்கும் இந்த பிரசாதத்தை தருகிறார்கள். அழகே உருவான இந்த முருகனை வழிபட்டால் குலம் தழைக்க வழி செய்வான் என்று முழு மன நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்பக்தர்கள். தமக்கு பிள்ளைப்பேறு வரம் அளித்த முருகனுக்கு தவறாமல், முறையாக நன்றியும்தெரிவிக்கிறார்கள்.

வளமோடும், புகழோடும் வாழும் சில மனிதர்களுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படுவது உலக இயல்பு. அந்த எதிர்ப்பை விலக்கும்படி நியாயமாக கோரிக்கை வைத்து, முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதிரிகள் எளிதாக விலகுவர் என்பது பலரது அனுபவம். இக்கோயிலில் அரச மரத்துக்குக் கீழே புற்று ஒன்று தானாக வளர்ந்து வருகிறது. முருகனின் படைக்கலன்களில் நாகரும் உண்டென்பதை மெய்ப்பிக்க, அரவம் ஒன்று இங்கே யாருக்கும் தொல்லை தராமல் வாழ்ந்து வருகிறது. அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்ற ஒரு பெண்மணி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருசமயம் இவ்வழியே சென்ற அவள், வழியில் ஆறு குழந்தைகள் விளையாடிக்    கொண்டிருந்ததை கண்டாள். ஒரு குழந்தை அவளிடம் வந்து வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்தது. 

அதை வியப்பு கலந்த அன்போடு பெற்றுக்கொண்ட அந்தப் பெண், அதில் பாதியைத் தான் சாப்பிட்டுவிட்டு மீதியை அந்தக் குழந்தைக்கே கொடுத்துவிட்டாள். பிறகு அந்த ஆண் குழந்தையை ஆசையோடு முத்த மிட்டு, “எங்கள் வீட்டுக்கு வருகிறாயா?’’ என்று கேட்டாள். “நிச்சயமா ஒருநாள் உங்கள் மகனாகவே வருவேன்’’ என்றதாம் அந்தக் குழந்தை. குழந்தை பேறில்லாத அவள் கண்களில் நீர் பெருகிட அந்தக் குழந்தையை அள்ளி உச்சி முகர்ந்தாள். பிறகு அந்த இடத்தைவிட்டுச் செல்ல அவள் முயன்றபோது அவளுடைய புடவை ஒரு முள் செடியில் சிக்கியது. அதை விடுவித்துவிட்டு திரும்பினால், அந்தக் குழந்தைகளை காணவில்லை. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகனே அப்படி ஆறு குழந்தைகளாய் வந்தானோ! இந்த அதிசயத்தை அவள் ஊர்ப் பெரியோர்களிடம் தெரிவித்தாள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண் தனக்காக ஒரு வீடு கட்டும் பணி தொடங்கிய போது, அங்கே முருகன் சந்நதி அமையப் போகிறது என்ற அசரீரி உத்தரவும்அவளுக்கு கிடைத்தது.

பொட்டல் காடாகக் கிடந்த இந்த இடத்தில், சித்தர் ஒருவர் வந்து வீடுகளில் உணவு வாங்கிச் சென்று குறிப்பிட்ட ஓர் இடத்தில் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டிருக்கிறார். பொதுமக்கள் அவரிடம் சென்று, “ஏன் இப்படி மதிய வெயிலில் இந்த இடத்திற்கு வந்து சாப்பிடுகிறீர்கள்?’’ என்று கேட்டபோது, “என் அப்பன் கந்தனின் வீடு இது. இங்கே உண்டால் எனக்கு சாப்பாடு ருசியாக, நிறைவாக இருக்கிறது’’ என்று சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து ஏட்டில் எழுதி வைத்துள்ளார்கள், இந்த ஆலயத்தில் மகாமண்டபம் எழுப்பி முருகனுக்கு கருவறை அமைத்த பக்த கோடிகள்.
செந்தூர் என்றால் ‘வாசனை மிகுந்த’ என்றும், ‘மங்களகரமான’ என்றும் பொருளுண்டு. மங்களகரமான வாழ்வையும், மதிப்பையும், புகழையும் தரும் இக்கந்தவேளுக்கு கிருத்திகை அன்று ராஜ அலங்கார உடையும் சஷ்டி நாளில் சந்தன அலங்காரமும் செய்யப்படுகின்றன. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க மலர் அலங்காரமும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் செய்கிறார்கள்.ஆறுமுக சுவாமி தியானத்துடன்சரவணமூர்த்தியின் சடாட்சர மூல மந்திரம் சொல்லி, யாகம் செய்து, பூஜைகள் முடிந்ததும் சர்க்கரைப் பொங்கல் மற்றும் பஞ்சாமிர்தம் நிவேதனம் செய்து, படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகளுக்கு பிரசாதமாக வழங்கும் ஒரு சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

இதை ‘வித்யாசர்வண பிரார்த்தனை’ என்று சொல்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் கல்வியில் உயர்வடைய வேண்டுமென்று எண்ணும் பக்தர்கள் இந்த வித்யாசர்வண பூஜையில் கலந்து கொண்டு பஞ்சாமிர்த பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள்.இந்த அழகு முருகனை தரிசிக்கசித்திரைப் பௌர்ணமியின் போது நடைபெறும் 108 பால்குட உற்சவத்திலும், ஐப்பசி மாத சூரசம்ஹார விழாவிலும், குமாரசஷ்டி (கார்த்திகை மாதம்)யிலும், தைப்பூசத் திருநாளிலும் பக்தர்கள் பெருங்கூட்டமாக வந்து செல்வார்கள். சஷ்டி அப்த பூர்த்தி (அறுபது வயது நிறைவு), பீமரத சாந்தி (70 வயது நிறைவு) கொண்டாடுபவர்கள், முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்வதால் இங்குள்ள உற்சவ மூர்த்திக்கு எப்போதும் உற்சவ காலம்தான். பக்தர்கள் தரிசிக்க ஆலயம்  காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் திறந்திருக்கிறது.சென்னை-பூந்தமல்லி சாலையில் காட்டுப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே அரை கி.மீ. தொலைவில் உள்ளது செந்தூர்புரம்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com