திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் 4-ந்தேதி தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் அதிகாரிகளுடன் திருப்பதி துணை அதிகாரி போலா.பாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் அனைவரும் செய்ய வேண்டும். வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 8-ந்தேதி கஜவாகனம், 9-ந் தேதி தங்கதேரோட்டம், கருடவாகனம், 11- ரதஉற்சவம், 12-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவை நடைபெறும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அப்போது பக்தர்களுக்கு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழா வண்ணம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின்போது எவ்வாறு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டதோ அதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்ய வேண்டும்.

பிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்களை கவரும் விதமாக திருப்பதியில் கண்காட்சி விளம்பரங்களும் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்புக்கு 300 ஸ்ரீவாரி சேவகர்களும் விஜிலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து சேவைபுரிய உள்ளனர்.

பிரம்மோற்சவ விழா நடைபெறக்கூடிய நாட்களில் நான்கு மாட வீதிகளில் 10 எல்.இ.டி. கேலரிகளும் பஞ்சமி தீர்த்தம் அன்று கூடுதலாக 8 கேலரிகளும் அமைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யபட உள்ளது. சுவாமி வீதி உலாவின்போது ஊர்வலத்தின் முன்பு பல்வேறு மாநிலங்களில் உள்ள கலைக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com