திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றவர்கள்.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதையொட்டி இன்றுஅதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சேர்கிறார்.

13 அடி நீள அலகு குத்தியபடி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த சிவகாசி திருத்தாங்கள் பக்தர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்திருந்த திரளான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து, பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.

பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவ படத்தை வைத்து, அரோகரா கோ‌ஷம் எழுப்பியபடி வந்தனர். கோவில் வளாகம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரையிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்து நின்று சாமி கும்பிட்டனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

திருச்செந்தூர் டி.எஸ்.பி. பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com