திருச்செந்தூர் கோவில் சுவாமி-அம்பாள் வீதி உலா

திருச்செந்தூர் கோவில் சுவாமி-அம்பாள் வீதி உலா

சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மாலையில் கீழ ரத வீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாள் மற்றும் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.7-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார்.

8-ம் திருநாளான நாளை (வியாழக்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10-ம் திருநாளான 8-ந்தேதி(சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com