திருப்பதியில் 11-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் – 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதியில் 11-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் - 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் 21-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை வருடாந்திர பிரம்மோற்சவம் 9 நாட்கள் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.10-க்கு தொடங்கி 11 மணி வரை நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்த நிலையத்திலிருந்து வெளியே உள்ள மகாதுவாரம் வரைக்கும் இந்த பணி நடைபெறும்.

அன்று காலை 6.30 மணிக்கு நடக்கும் அஷ்டதல பாதபத்மாராதன சேவையும், வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படும். இதையடுத்து கோவில் பிரதான நுழைவு வாயில் சாத்தப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. இதனால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.

பின்னர் கோவில் கதவுகள் திறக்கப்பட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு நண்பகல் 12 மணிக்கு நைவேத்தியம் நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 1 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பபடுகின்றனர்.

இந்த தகவலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com