திருப்புள்ளமங்கை

இறைவர் திருப்பெயர்: பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: அல்லியங்கோதை, சௌந்தரநாயகி.
தல மரம்: ஆலமரம்.
தீர்த்தம் : எதிரில் உள்ள திருக்குளம்.
வழிபட்டோர்: பிரம்மா,சம்பந்தர்.

தல வரலாறு

   • ஊர்ப்பெயர் பண்டை நாளில் ‘புள்ள மங்கை’ என்றும், கோயிற் பெயர் ‘ஆலந்துறை’ என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி ‘பசுபதி கோயில்’ என்று வழங்குகின்றது. ‘புள்ளமங்கை’ என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் இருக்கின்றன. 
   • குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் ‘ஆலந்துறை’ என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர். 
   • அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.
   • பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.
   • சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட ஆலயம்.அஷ்ட நாகங்களோடு வந்து சாமுண்டி தேவி சிவபூஜை செய்தபடியால் இங்கு வந்து வழிபடுவோர் நாக தோஷங்கள் நீங்கப்பெறுவதாகக் கூறப்படுகிறது.
   • நாகாபரண தரிசனம் தனக்கும் கிடைக்கவேண்டும் என்று ஜகதம்பிகையும் தவம் செய்யவே, இறைவனும் அவ்வாறே காட்சி அளித்ததாக வரலாறு.
   • தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த விஷத்தை அருந்திய இடம் இதுவே என்றும் அதனால் தலத்திற்கு ஆலந்துறை என்ற பெயர் வந்தது என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது.தேவாரத்திலும் இப்பெயர் எடுத்தாளப்படுகிறது.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - பாலுந்துறு திரளாயின.

 

தல மரம் : ஆலமரம்

சிறப்புகள்

   • திருச்சக்கரப்பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இத்தலமும் ஒன்று.அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது.விமானத்தின் கீழ் சிவபுராணம், 108 நாட்டிய கரணங்கள், இராமாயண காட்சிகள் ஆகியன சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார். 
   • இங்குள்ள துர்க்கை – மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் – இக்கோலம் தனிச் சிறப்பு. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.)
   • அர்த்த மண்டபத்தின் மேல் உள்ள பூத கணங்களும் விமானத்திலுள்ள சுப்பிரமணியர், ரிஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூர்த்திகளின் சிற்பங்களும் இணையற்றவை.
   • இக்கோயில் கல்வெட்டுக்களில் “ஆலந்துறை மகாதேவர் கோயில்” என்று குறிக்கப்படுகிறது.முதலாம் பராந்தகன் காலத்தில் (கி. பி. 907 – 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்றுள்ளன. 
   • (சம்பந்தர் இப்பாட்டில் ‘பொந்தின்னிடைத் தேன்ஊறிய’ என்று பாடியிருப்பதற்கேற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.)
   • சோழர் காலச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. மூலவரின் கருங்கல் விமானத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள சிற்பங்கள் நம்மைப் பரவசப்படுத்துபவை.சின்னஞ்சிறிய வடிவில் உள்ள ராமாயண சிற்பங்களும், நாட்டியச் சிற்பங்களும் சிற்பிகளின் கைத்திறனைப் பறைசாற்றுவதாக உள்ளது. சுமார் 65 சிற்றுருவச் சிலைகளைக் கொண்ட அடித்தளத்தில்,கஜசம்ஹார மூர்த்தி, காலாரி, அந்தகாசுர சம்ஹார மூர்த்தி, தாண்டவ மூர்த்தி, வராகர் ஆகிய சிற்பங்கள் கலை நுணுக்கம் மிக்கவை.
   •  
   • கல்வெட்டுக்களில் இறைவன் ஆலந்துறை மகாதேவர் என்று குறிப்பிடப்படுகிறார். முதலாம் ராஜராஜன் காலத்திய கல்வெட்டால், புள்ளமங்கை ஊர்ச்சபையினர் முரசு அறைவித்து ஒன்றுகூடி, இருக்கு வேதத்திலும்,சாம வேதத்திலும் வல்ல அந்தணர் சிலருக்கு மானியம் விட்ட செய்தியை அறிகிறோம். பல கல்வெட்டுக்கள்  ஆலயத்திற்கு வழங்கப்பட்ட கொடைகள் பற்றி அறிவிக்கின்றன.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சையிலிருந்து பசுபதிகோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு – கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது. கும்பகோணம் – தஞ்சாவூர் இருப்புப் பாதையில் பசுபதிகோயில் புகைவண்டி நிலையம் உள்ளது. தொடர்புக்கு :- 97914 82102.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com