திருமண வரம் அருளும் பாவை நோன்பு

மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர்.

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர்.

கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.

மார்கழி மாதம் தேவர்களின் இரவுக் காலம் முடியும் காலம் ஆகும். இதை உஷத் காலம் என்றும் வைகறைப் பொழுது என்றும் கூறுவது உண்டு. இந்த மாதத்தில் யார் விடியற்காலத்தில் எழுந்து பக்தியுடன் பகவானைத் தொழுகிறார்களோ அவர்கள் சகல சவுபாக்கியங்களையும் பெறுவதுடன் ஆண்டவனின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.

மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீதிகளில் பஜனை செய்தல் வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை பாட வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்பார் ஆண்டாள். இவ்வாறு விரதம் இருந்து காலையில் பஜனை செய்து ஆண்டவனை வழிபட அருள் கிடைக்கும்.

மார்கழி மாத நோன்பால் உள்ளத்தையும் உடலையும் நாம் தூய்மையாக்கி கொள்ள முடியும். அது மட்டுமின்றி மார்கழி மாத நோன்பு நமது பிறவிப்பயனே ஆண்டவனை அடைவது தான் என்பதை உணர்த்துகிறது. தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனைக் கொடு என்பது தான் கன்னிப்பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும். மாத பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் வைப்பது நல்லது.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com
Facebook Auto Publish Powered By : XYZScripts.com