திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவிலில் நாளை சுதர்சன ஹோமம்

திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் கோவிலில் நாளை சுதர்சன ஹோமம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.

மதுரையை அடுத்த திருமோகூரில் உள்ள காளமேகப்பெருமாள் கோவில் வளாகத்தில் சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. தென்மாவட்ட அளவில் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் சக்கரத்தாழ்வார் கோவிலில் சுதர்சன ஹோமம் 30-வது ஆண்டு விழா மற்றும் திருமஞ்சனம், திவ்ய நாம பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை அனுக்ஞை, புண்யாக வாசனம், கும்ப பூஜை தொடங்கி நடைபெறும்.

தொடர்ந்து 10.30 மணிக்கு சுதர்சன ஹோமம் நடைபெறும். அதனுடையே நரசிம்மர் ஹோமமும், சக்த ஹோமமும் நடைபெற உள்ளது. இதையடுத்து மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை சுதர்சன ஹோம பூர்ணாகுதி அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது.

இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருவாராதனம் நடைபெற இருக்கிறது. விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com