திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணியகால பூஜை

திருவண்ணாமலையில் நடக்கும் உற்சவங்களில் சிறப்பு வாய்ந்தது, உத்தராயண புண்ணியகால பூஜை. இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணிய கால பூஜை வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணியகால பூஜை
திருவண்ணாமலை தலத்தில் ஆண்டு தோறும் 7உற்சவங்கள் நடைபெறுகின்றன. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது, உத்தராயண புண்ணியகால பூஜை ஆகும். இது 10 நாட்கள் நடைபெறும் விழா. மார்கழி மாதத்தின் கடைசி 9 நாட்களும் தை மாதத்தின் முதல் நாளும் இந்த 10 நாள் பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணிய கால பூஜை வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று காலை அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் உற்சவர், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அதன் பிறகு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் மேளதாளம் முழங்க வருகை தந்து தங்ககொடி மரத்தின் அருகே எழுந்தருள்வார்கள்.

அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உத்தராயண புண்ணியகால பிரமோற்சவ கொடியேற்றும் விழா நடைபெறும். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்து அண்ணாமலை யாருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்புவார்கள். இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இதைத் தொடர்ந்து 10 நாட்களும் பிரமோற்சவ விழா நடைபெறும். காலையிலும், மாலையிலும் உற்சவர் சந்திரசேகரர் மாடவீதியில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலையில் 9 மணிக்கும், மாலையில் 7.30 மணிக்கும் இந்த மாட வீதி உலா நடைபெறும். 10-வது நாள் அதாவது தை மாதம் 1-ந்தேதி (ஜனவரி 15-ந்தேதி) உத்தராயண புண்ணியகால பூஜையின் நிறைவு நாளாகும். ஆனால் உத்தராயண புண்ணிய காலம் அன்று முதல் தொடங்குகிறது.

எனவே அன்று சூரியனை வழிபட்டு ஆராதனை செய்ய வேண்டும். திருவண்ணாமலை தலத்தில் அன்றைய தினம் மதியம் உச்சிகால பூஜை முடிந்ததும் தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அண்ணாமலையார் ஸ்ரீசந்திரசேகரர் ரூபமாக சென்று தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்பார். அன்று இரவு சந்திரசேகரர் வீதிஉலா வருவார். அவர் ஆலயத்துக்குள் திரும்பியதும் உத்தராயண புண்ணிய கால பிரமோற்சவ விழா கொடி இறக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் அமாவாசை, கார்த்திகை, பிரதோஷம், சுக்ரவாரம், சோமவாரம் எனும் 5 வகையான பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்கு பஞ்ச பருவ பூஜை என்று பெயர். எந்த சிவாலயத்தில் பஞ்ச பருவ பூஜை நடத்தப்படுகிறதோ அங்கெல்லாம் உத்தராயண புண்ணிய கால பூஜைகள் மிக சிறப்பாக நடைபெறும்.

அந்த வகையில் வருகிற 6-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை 10 நாட்களும் திருவண்ணாமலை தலத்தில் சிறப்பான பூஜைகள் நடத்தப்படும். உத்தராயண புண்ணியகால பூஜைகளில் பங்கு பெறுவது மிகுந்த பலன்களை தரும். இந்த பூஜையை சிவபக்தர்கள் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் திருவண்ணாமலை தலத்தில் நடைபெறும் இந்த பூஜையில் பல்வேறு ரகசியங்களும், சூட்சுமங்களும் அடங்கி உள்ளன.

“உத்தர” என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். அயணம் என்றால் “வழி” என்று அர்த்தமாகும். சூரிய பகவான் தென்திசையில் இருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயண புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதங்களும் உத்தராயண காலமாகும்.

நமக்குதான் இவை 6 மாதம் ஆகும். ஆனால் தேவர்களுக்கு இது ஒரு நாளின் பகல் பொழுதாகும். இந்த பகல் பொழுதில் இளங்காலையில் தேவர்கள் பூஜை செய்வார்கள். அந்த இளங்காலை நேரம் என்பது தை மாதத்தை குறிக்கிறது. எனவே தை மாதத்தில் திருவண்ணாமலையில் காலையில் செய்யப்படும் பூஜையை பார்ப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த காலை நேரம் எந்த அளவுக்கு புனிதமானது என்பதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.

பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் மகாபாரத போர் நடந்தபோது பீஷ்மர் கவுரவர்களுடைய படைகளுக்கு தலைமை தாங்கி போர் புரிந்தார். 10 நாட்கள் கடும் போர் நடந்த பிறகும் பீஷ்மரை யாராலும் எளிதில் வீழ்த்த இயலவில்லை. இதனால் அர்ச்சுனன் என்ன செய்வது என்று யோசித்தான். அப்போது அவனுக்கு ஒரு திட்டம் தோன்றியது.

அதன்படி சிகண்டி என்ற வீரனை பிடித்து வந்து போர் களத்தில் பீஷ்மருக்கு எதிராக அர்ச்சுனன் நிறுத்தினான். இந்த சிகண்டி என்பவன் ஆண்மை இழந்தவன் ஆவான். ஆண்மையற்ற ஒருவனோடு சண்டை போடுவதற்கு பீஷ்மர் விரும்பவில்லை. எனவே அவர் தனது ஆயுதங்கள் அனைத்தையும் கீழே போட்டு விட்டார். நிராயுதபாணியாக அவர் நின்று கொண்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்துற்குத்தான் அர்ச்சுனன் காத்து கொண்டு இருந்தான். அவன் சிகண்டியின் பின்னால் இருந்து சரமாரியாக அம்புகளை விட்டான். அந்த அம்புகள் பீஷ்மரின் உடல் முழுவதையும் துளைத்தன. கீழே சரிந்த பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடந்தார். அவர் உடனே மரணத்தை தழுவவில்லை. அவர் “இச்சா மிருத்யு” என்னும் வரத்தை பெற்று இருந்தார். இந்த வரத்தை பெற்றவர்கள் தாங்கள் விரும்பும்போது மட்டுமே தங்கள் உடலில் இருந்து உயிரை பிரித்துக் கொள்ள முடியும்.

பீஷ்மர் அனுமதி கொடுக்காவிட்டால் மரணம் கூட அவரை நெருங்க முடியாது. இந்த வரத்தை பயன்படுத்தி அவர் தனது மரணத்தை தள்ளி போட முடிவு செய்தார். அதற்கு காரணம் அவர் உடலை அம்புகள் துளைத்த காலம் தட்சிணாயன காலம் ஆகும். தட்சிணாயன காலத்தில் மரணம் அடைந்தால் மறுபிறவி எடுப்பார்கள் என்பது ஐதீகமாகும். எனவேதான் தட்சிணாயன காலத்தில் மரணம் அடையாமல் உத்தராயண காலம் வரை காத்திருக்கிறது மரணம் அடைய பீஷ்மர் விரும்பினார்.

அம்பு படுக்கையில் கிடந்த அவர் பாண்டவர்களின் படையிலும், கவுரவர்களின் படையிலும் உள்ள தனது பேரன்களை அழைத்தார். “நான் என் கடமையைச் செய்து முடித்து விட்டேன். இனி உயிர் பிழைக்க மாட்டேன். என் உடம்பில் தைத்துள்ள அம்புகளை நீக்கி விட்டால் உடனே நான் இறந்து விடுவேன். இப்போது, தட்சிணாயனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவர்களின் இரவு காலமான இதில் இறப்பவர்களுக்கு நற்கதி கிட்டாது. இன்னும் சில நாட்களில் தேவர்களின் உதயகாலமான (பகல் காலம்) உத்தராயணம் வந்து விடும். அதுவரையிலும் நான் இறக்கக் கூடாது. அதனால், இந்த அம்புகளோடு அமைதியான ஓரிடத்திற்கு என்னை எடுத்துச் செல்லுங்கள். அங்கு கடவுளை நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன்” எனக் கூற அவர்களும் அவ்வாறேச் செய்தனர்.

அம்பு படுக்கையிலேயே இருந்த பீஷ்மர், அந்த நாட்களில் பாண்டவர்களுக்கு, நல் உபதேசங்களைச் செய்து, பின் உத்தராயணம் வந்த நாளில் உயிர் நீத்தார். இதில் இருந்து உத்தராயண காலம் எவ்வளவு புனிதம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். தை மாதம் 1-ந்தேதி உத்தராயணம் தொடங்குவதை கருத்தில் கொண்டு தான் தை பிறந்தால் வழிபிறக்கும் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

தை மாதம் 1-ந்தேதி சூரிய பகவான் தனூர் ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். எனவேதான் தை மாதம் 1-ந்தேதியை மகர சங்கராந்தி தினம் என்று சொல்கிறார்கள். உத்தராயணத்தின் தேவதையாக சந்திரன் கருதப்படுகிறது. இதனால் உத்தராயணத்தில் பிறந்தவர்கள் மன தெளிவு மிக்கவர்களாகவும், எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்களாவும், நீண்டகாலம் வாழ்வதாகவும், தாராள குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

எனவே உத்தராயணத்தில் திருவண்ணாமலையில் வழிபட்டால் இந்த சுகபோகங்களை மேலும் அதிகரிக்க செய்ய முடியும் என்பது ஐதீகமாகும். உத்தராயண புண்ணிய காலத்தில் தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், திருமணம் செய்து கொள்வது, கிரகபிரவேசம் நடத்துவது, குளம் வெட்டுவது போன்ற புண்ணிய காரியங்களை செய்யலாம். இந்த செயல்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டுமானால் திருவண்ணாமலையில் நடைபெறும் உத்தராயண புண்ணிய கால பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய 6 மாதங்கள் தட்சிணாயன புண்ணிய காலம் ஆகும். இது தேவர்களுக்கு இரவு காலமாகும். இந்த நேரத்தில் முக்கிய சுபகாரியங்களில் ஈடுபட மாட்டார்கள். அதற்கு பதில் தட்சிணாயன புண்ணியகால பூஜையில் ஈடுபடுவார்கள். குறிப்பாக சப்த மாதர்கள், பைரவர், நரசிம்மர், வராகமூர்த்தி போன்றோர்களை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள்.

எனவே இறைவழிபாட்டுக்கும், சுபகாரியங்களுக்கும் தட்சணாயன புண்ணிய காலத்தை விட உத்தராயண புண்ணிய காலமே சிறந்தது என கருதப்படுகிறது.
சூரியனின் தேர் சக்கரத்தின் மேல்பாகம் உத்தராயணத்தையும், கீழ்ப்பாகம் தட்சணாயனத்தையும் குறிக்கிறது. எனவே உத்தராயணத்தின் முதல் நாளான தை பொங்கல் தினத்தன்று சூரிய வழிபாட்டை மிக சிறப்பாக செய்ய வேண்டும். அன்று காலை சூரிய பகவானை முறைப்படி பூஜை செய்து வணங்கி விட்டு பிறகு திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமலை அம்மனையும் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் நல்ல உடல் வலிமை, நீண்ட ஆயுள், மனஅமைதி ஆகியவை கிடைக்கும்.

குறிப்பாக கணவன்-மனைவி இருவரும் தம்பதி சகிதமாக திருவண்ணாமலையில் நடைபெறும் உத்தராயண பூஜையில் கலந்து கொள்வது நல்லது. வாய்ப்பு, வசதி இருப்பவர்கள் தை பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும் திருவூடல் திருவிழாவிலும் கலந்து கொள்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.

கணவனும், மனைவியும் மகிழ்ச்சியாக கருத்து வேற்றுமை வராமல் என்றென்றும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள் திருவண்ணாமலை தலத்தில் 16-ந்தேதி நடைபெறும் திருவூடல் விழாவை அவசியம் காண வேண்டும்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com