விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அழகர்கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சை பட்டு ஆடை அலங்காரத்தில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் தேரில் எழுந்தருளினர்.

காலை 8.05 மணியளவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோபாலா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. காலை 10.30 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.