தீபாவளிக்கு செல்வம் தரும் அன்னபூரணி விரதம்

Amman

தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வது போன்று அன்னபூரணிக்கும் விரதமிருந்து பூஜை செய்திட அள்ள அள்ள குறையாத செல்வங்களையும், அன்னத்தையும், ஞானத்தையும், அன்னபூரணி வழங்குவாள் என ஞான நூல்கள் கூறுகின்றன.

அனைத்து ஜீவராசிகளும் பசிப்பிணியின்றி வாழ அருள்புரிபவள் அன்னபூரணி. அகில உலகிற்கும் படி அளப்பவள் அன்னபூரணி. அவளை வணங்கினால்தான் நம் வாழ்நாளில் பசிப்பிணியின்றி வாழ முடியும். நமக்கு எந்த வகை உணவும் வயிற்றுக்கு சென்று பசியாற்றுகிறது என்றால் அதனை தருபவளே அன்னபூரணி. அன்னபூரணியை குறிப்பிட்ட நாளில்தான் வணங்க வேண்டும் என்பதில்லை.

தினம் தினம் நாம் உணவு உண்ணும்போதும் அன்னபூரணியே நமஹ என்று கூறி உணவருந்தினாலே அவள் நமக்கு வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் பசிக்கும்போது தேவையான உணவை தந்து விடுவாள். உணவாய் உண்ணும் எல்லா பொருள்களை விளைவிப்பதும், அதனை உயிர்ப்பிக்க ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. அந்த அன்னபூரணியை தீபாவளி நாளன்றும் அதன்முன், பின் ஆகிய மூன்று நாட்கள் காசியில் தங்கமயமாய் காட்சி தருபவளை வணங்கிட வாழ்நாள் முழுவதற்குமான அன்னத்தை, செல்வத்தை வழங்கிவிடுவாள். காசியில் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில் பால் அன்னம் தந்து உலக உயிர்களின் அன்னதோஷம் என்னும் வறுமை அண்டாதவாறு அருள்புரிகிறாள்.

செல்வ வளங்களை பெற தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வது போன்று அன்னபூரணிக்கும் விரதமிருந்து பூஜை செய்திட அள்ள அள்ள குறையாத செல்வங்களையும், அன்னத்தையும், ஞானத்தையும், அன்னபூரணி வழங்குவாள் என ஞான நூல்கள் கூறுகின்றன.

பிட்சாடனார் பசிதீர்க்க அவதரித்த அன்னபூரணி

சிவபெருமானின் ஐந்து தலைகள் போல் தனக்கும் ஐந்து தலைகள் உள்ளது என பிரம்மதேவன் கர்வம் கொண்டார். அதனை தீர்க்க முற்பட்ட சிவன் தன் மனைவி பார்வதிதேவியை வைத்து ஓர் லீலை புரிந்தார். அதன்படி கயிலைக்கு வந்த பிரம்மனை பார்த்து பார்வதிதேவி சிவபெருமான் என நினைத்து வணங்கிட அதனை கண்டு பிரம்மன் கர்வம் கொண்டு சிரித்து விட்டான். இதனை கண்ட சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து விட்டார். பிரம்மன் தலை துண்டித்த தோஷத்தால் சிவன் கையிலேயே அந்த கபாலம் ஒட்டி கொண்டது. இந்த தோஷம் போக்க சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அதே நேரம் பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கியதற்கு தனக்கு தானே தண்டித்து கொண்டு காசியில் அன்னபூரணியாக அவதரித்து தவம் செய்தாள். இச்சமயம் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அந்த நேரமே பிரம்ம கபாலம் சிவபெருமான் கையை விட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கி விட்டாள்.

உணவை அருளும் சக்தி அன்னபூரணி

அன்னை சக்தியும், ஈசனும் ஒரு சொக்கட்டான் விளையாட அதில் ஈசன் வெற்றி பெற்றார். ஆனால் சக்தியோ சிவன் ஏதோ தவறாக ஆடியே தன்னை வெற்றி கொண்டார் என எண்ணி வாதம் செய்தார். ஈசனோ “எல்லாம் மாயை. இதில் இந்த ஆட்டமும் மாயை” என்று கூறி, எனவே வெற்றி, தோல்வி குறித்து அதிக கலக்கம் கொள்ள வேண்டாம் என்று கூறினார். தேவியோ எல்லாம் மாயை எனில் உயிர்களின் இயக்கமும் மாயையா? என வினவ, ஆமாம் என்றார் சிவபெருமாள். அதன் காரணமாய் சக்தி தேவி காசி நகரில் வந்து தவமியற்றினாள். தன் பணியை விட்டு பராசக்தி தவமியற்றியதால் உலகத்தில் உயிர்கள் பசியால் வாடின. உலக மக்களின் துயரம் போக்க ஈசன் தாமே காசிக்கு பிச்சாடனார் ஆக சென்று பிச்சை எடுத்து பசியாறினார். அப்போதுதான் சிவபெருமான் “உலகம் மாயைதான். எனினும் உயிர்கள் வாழ ஆதார சக்தி உணவு தேவை. அதனை அருள்பவள் சக்தியே” என்று தன் தவறை உணர்ந்து கூறினார். அது முதல் காசியில் அமர்ந்து அன்னகூடம் அமைத்து சகல ஜீவராசிகளின் பசிப்பிணி போக்குகிறாள் அன்னதயாபரி.

நவரத்ன சிம்மாசனத்தில் அன்னபூரணி

நவரத்ன சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவமும் அருகில் ஆரடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை வெள்ளியால் செய்யப்பட்டது. தீபாவளியன்று அன்ன கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேர் திரும்ப வரும்போது ஒரு லட்டு கூட இருக்காது. அன்னபூரணியை தீபாவளியன்று தொடர்ந்து மூன்று நாட்கள் விரதமிருந்து பூஜை செய்து வணங்கலாம். அதுபோல் அன்னபூரணி உருவச்சிலை வைத்து பூஜை செய்து வணங்கிடலாம். அன்னபூரணி அனைத்து நலன்களையும் தருவாள்.