துயரை கொய்திடும் துர்க்கை

ஆதிகாலங்களில் துர்க்காதேவி தனிக் கோயில்களில் வழிபடப்பட்டாள். பின்னர், பல்லவ மன்னர்கள் துர்க்கை வழிபாட்டை, சிவ வழிபாட்டுடன் இணைத்து ஒரே ஆலயத்தில் வழிபட வகை செய்தார்கள் என வரலாறுகள் கூறுகின்றன. அதன்படி சிவாலயங்களில் துர்க்கைக்கென்று கோஷ்டங்களில் தனிச்சந்நதிகள் அமைக்கப்பட்டு கோலாகலமாக கொலு வீற்றிருக்கின்றாள். பூலோக கயிலாயம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு துர்க்கை ஆலயங்கள் இருக்கின்றன என்றாலும் கச்சபேஸ்வரர் ஆலயத்தினுள் அமைந்துள்ள துர்க்கை சந்நதி முதன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. கச்சபேஸ்வரர் ஆலயத்தில் கொடிமரத்தின் முன்னே அமைந்துள்ள முற்றம் ‘பஞ்சந்தி’ என்று அழைக்கப்படுகிறது.

இங்கு விநாயகர், துர்க்கை, ஐயனார், சூரியன், பைரவர் ஆகிய ஐவருக்கும் தனித்தனி சிற்றாலயங்கள் இருக்கின்றன. இவற்றுள் துர்க்கை ஆலயம் தனிச்சிறப்புடன் மாடக்கோயிலாகத் திகழ்கின்றது. தெற்கு நோக்கிய வண்ணம் உள்ள கருவறையில் பெரிய, அழகிய திருவுருவமாக துர்க்கை அருள்கின்றாள். திருமணத்தடை, கடன் தொல்லை, மகப்பேறின்மை இவைகளைத் தீர்க்க வல்ல இறைவியாக இங்குள்ள துர்க்கை விளங்குகின்றாள். சப்த விடத்தலங்களில் ஒன்றான வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் வடகிழக்கு முனையில் தெற்கு நோக்கியவாறு உள்ள பெரிய சந்நதியில் துர்க்கை எழுந்தருளியுள்ளார்.

அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்திற்கு ‘சுந்தரி பீடம்’ என்பது பெயர். இங்கு வெள்ளிக் கிழமைகளிலும், ராகு கால வேளைகளிலும் திரளான மக்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். இங்கு தரப்படுகின்ற காப்புக்கயிறை அணிந்துகொண்டால் தீய சக்திகளின் பிடியிலிருந்து காக்கப்பட்டுபில்லி சூன்யக் கெடுதல்கள் விலகிவிடும் என்பது ஐதீகம். திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி ஆலயத்தினுள் துர்க்கைக்கென பெரிய சந்நதி இருக்கிறது. இது ‘விந்தைக்கோட்டம்’ என புராண காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது. பல அசுரர்களை வதம் செய்த பாவம் தீர துர்க்கை இங்கு சிவபூஜை செய்து பரிகாரம் பெற்றதாக வரலாறு.

கும்பகோணத்திற்குத் தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம் என்ற திருமுறைத்தலம். இங்கு ஞானாம்பிகை உடனுறை பட்டீஸ்வரர் ஆலயத்தில் வடக்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கியவாறு பெரிய சந்நதியில் துர்க்கை எழுந்தருளியுள்ளாள். இது மிகவும் பிரசித்தி பெற்ற துர்க்கை ஆலயமாகும். துர்க்கைக்கென்றே விசேஷமாக உள்ள இந்த ஆலயத்தில் இறைவியை பூஜித்து வணங்கினால் பகைகள் அகலும். வழக்குகளில் வெற்றி கிட்டும். ஆரோக்யமான குழந்தைகள் பிறக்கும் என்பது ஐதீகமாகும். ஈசனின் இடப்பாகம் வேண்டி உமாதேவியார் கடுந்தவம் புரிந்த வேளையில் மகிஷாசுரன் என்ற அரக்கன் பெருந்தொல்லை கொடுத்து வந்தான்.

அவனை வதம் செய்ய உமாதேவியார் தன் அங்கத்திலிருந்து வீர சக்தியாக துர்க்கையைப் படைத்து மகிஷனைக் கொன்று வர அனுப்பினாள். துர்க்கை மகிஷாசுரனுடன் கடும்போர் புரிந்து அவனை வதம் செய்து ஒரு பாறை மீது வந்தமர்ந்து ஈசனை பூஜித்தாள். சிவபெருமான் துர்க்கைக்கு காட்சி தந்து அருள் புரிந்தார். அந்த இடத்தில் தேவர்கள் துர்க்கைக்கு தனி ஆலயம் அமைத்தனர். துர்க்கைக்கென்று அமைந்த தனிக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு துர்க்கை ஏற்படுத்திய கட்க தீர்த்தம் என்ற சுனையும், துர்க்கேஸ்வரர் சந்நதியும் உள்ளன. துர்க்கேஸ்வரருக்கு ‘பாப விநாசர்’ என்ற சிறப்புப் பெயர் உண்டு. திருவண்ணாமலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

ராமேஸ்வரத்திலுள்ள தேவிபட்டினம் என்ற தலம் துர்க்கா தேவிக்குரியதாகும். மகிஷனைக் கொன்ற களைப்பு தீர துர்க்கா தேவி இங்கு வீற்றிருந்தாள் என்றும் அவளுக்கு தேவர்கள் ஆலயம் எழுப்பினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. துர்க்காதேவியின் பெயரால் இத்தலம் ‘தேவி பட்டினம்’ என்று அழைக்கப்படுகிறது. துர்க்கை நீராடவும், சிவ பூஜை செய்யவும் அமைக்கப்பட்ட தீர்த்தம் சக்ர தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. ராமபிரான் இந்த தீர்த்தத்தில் மூழ்கி துர்க்கையையும் ராமநாதரையும் வழிபட்டதாக கூறப்படுகின்றது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலமெனும் தலத்தில் துர்க்கா தேவிக்கு பெரிய ஆலயம் அமைந்திருக்கிறது.

இயற்கையான சூழலில் மலைகளின் நடுவே அமைந்துள்ள இந்த தலத்தில் துர்க்கை கம்பீரமாகக் காட்சி தருகின்றாள். இங்கருளும் துர்க்கையை ‘தாம்ப்ர கெளரி’ எனும் நாமமிட்டு அழைக்கின்றனர். குடவாயில் எனும் திருத்தலம் கும்பகோணத்தில் உள்ளது. இங்கு ‘பெரிய நாயகி’ என்ற பெயரில் அம்பாள் அழைக்கப்படுகிறாள். இங்கு துர்க்கைக்கென்று தனிக்கோயில் அமைக்காமல் ‘பெரிய நாயகி’ அன்னையையே துர்க்கையாக பாவித்து வணங்குகின்றார்கள். அம்பாளை துர்க்கையாகப் போற்றி வணங்குவது இந்த ஆலயத்தில் மட்டும்தான். எனவே, இந்த அம்பாளுக்கு ‘ப்ருஹத் துர்க்கை’ எனும் திருநாமமும் உண்டு.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com