தைப்பூச விழா சிறப்புகள்

எல்லா சிவன் கோவில்களிலும், அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்திலோ அல்லது அந்த தினத்தையொட்டியோ பூச நட்சத்திரத்தில் வருவது தைப்பூசம் ஆகும். எல்லா சிவன் கோவில்களிலும், அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

உத்தரயாண புண்ணிய காலமாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் கருதப்படுகின்றன. வசந்த காலத்தின் தொடக்கமாக தை மாதம் கருதப்படுகிறது. இதனால் தான் தை மாதம் முதல் நாளில் சூரியனை வணங்கிவிட்டு நாம் பணிகளை தொடங்குகிறோம். தேவர்களுக்கு பகல் பொழுதாக விளங்கும் இந்த காலத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் பெருவிழாக்கள், வழிபாடுகள் நடத்துவது சிறப்பு ஆகும்.

பழனியில் உத்தரயாண புண்ணிய காலத்தில் நடைபெறும் முதல் திருவிழா தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு. அது தைப்பூசத் திருவிழாவுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக பழனிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டம் தான். பழனி தைப்பூச திருவிழாவுக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சென்னையில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இன்று பிரசித்தி பெற்றுள்ள பழனி பாதயாத்திரையை தொடங்கி வைத்தவர்கள் நகரத்தார்கள் ஆவார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையை தொடங்கி வைத்தனர். பின்னர் இந்த பாதயாத்திரை வழிபாடு தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது. இதன் காரணமாக பழனி தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் சிறப்பு பெற்றுள்ளது.

பாதயாத்திரையின்போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி செல்வதும் முக்கிய அம்சம் ஆகும். காவடி ஏந்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார். நோய் தீர வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், குடும்ப பிரச்சினை தீர வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், ஆண் குழந்தை வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்று பழனிக்கு லட்சக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்து வருகின்றனர்.

பழனி முருகனுக்கு காவடிகள் எடுப்பதால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம் ஆகும்.

தைப்பூசத் திருநாள் அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். சிவபெருமான் உமா தேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் புரிந்து தரிசனம் அளித்த தினம் தைப்பூசம் என்பர். சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து, இரணியவர்மன் எனும் மன்னன் சிவபெருமானை நேரில் தரிசித்ததும் இந்நாளிலேயே. இக்காரணத்தினால்தான் தைப்பூசம் அன்று சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகங்கள் நடை பெறுகின்றன. தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூச நாளில் குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனை தரும் என்பர்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தை மாத வெள்ளிக்கிழமை அன்று புனர்ப்பூச நட்சத்திர தினத்தில் தான் சமாதியானார். இதனால்தான் அவர் சமாதியான வடலூரில் தைப்பூசத் திருநாள் அன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழா கொண்டாடுகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com