தோஷம் போக்கும் நவபாஷாண கோயில்

ராமநாதபுரத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது தேவிபட்டினம். பண்டைய காலத்தில் இளங்கோமங்கலம், உலகமாதேவிப்பட்டினம், தேவிபுரம் என இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடற்கரையில் திலகேஷ்வரர் என்று அழைக்கப்படும் சௌந்திரநாயகி சமேத சிவன் கோயில் உள்ளது. கோயில் அருகில் கடலுக்குள் நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இது நவபாஷாண கோயில் என்று அழைக்கப்படுகிறது. கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து, பாவங்களை போக்கும் கிரியை செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.

தல வரலாறு

ராவணனிடமிருந்து சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் இப்பகுதிக்கு ராமர் வந்தார். இங்கு கடலில் இறங்கி நீராடிய அவர், பிடி மண்ணால் நவக்கிரகங்களை உருவாக்கினார். பின்னர் அவற்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் அவரது சனீஸ்வர தோஷம் நீங்கியது. பின்னர் அவர் இலங்கை சென்று ராவணனை வீழ்த்தி சீதையை மீட்டார். புராண காலத்தில் மகிஷாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். இதனால் அவதியடைந்த தேவர்கள், பராசக்தியிடம் தங்களை காத்தருளுமாறு வேண்டினர். மனமிரங்கிய பராசக்தி, மகிஷாசுரனுடன் யுத்தம் செய்ய தயாரானார்.

இதனையறிந்த மகிஷாசுரன், தேவிபட்டினத்திலுள்ள சக்கர தீர்த்தத்தில் மறைந்து கொண்டான். தனது சக்தியால் சக்கர தீர்த்தத்தின் நீர் முழுவதையும் வறண்டு போக செய்த பராசக்தி, அதில் மறைந்திருந்த மகிஷாசுரனை கொன்றாள். பின்னர் அவனது வேண்டுகோளை ஏற்று, அவனுக்கு சாப விமோசனம் வழங்கினாள். இதனை கண்டு மகிழ்ந்த தேவர்கள், பராசக்தியின் மீது அமிழ்தை பொழிந்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் அப்பகுதி தேவிபட்டினம் என்று அழைக்கப்பட்டு வருகிறது என்பது புராணம்.

இங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு முன்ஜென்ம பாவம் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம் செய்ய, நவக்கிரக தோஷங்கள் போக்க, குழந்தை பாக்கியம் பெற, ஆயுள், கல்வி மற்றும் செல்வம் பெருக பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நவக்கிரகங்களுக்கு நவதானியங்களை படைத்து, சுற்றி வந்து வணங்குகின்றனர். அமாவாசை நாளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். குறிப்பாக ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மேலும் கிரக பெயர்ச்சிகளின் போது, விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com