நன்மைகள் தருவாள் நாகமுத்து மாரியம்மன்

புதுச்சேரி-கடலூர் சாலையில் மரப்பாலம் தாண்டியவுடன் நயினார்மண்டபம் என்ற இடத்தில் சாலையின் வலதுபுறம் கிழக்குநோக்கி அருள்பாலிக்கும் நாகமுத்து மாரியம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மன்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் கடலூர் பெருவழிச் சாலையோரம் ஒரு புற்று ஒன்று தோன்றியது. அங்கு வழிப்போக்கனாக வந்த பித்தன் ஒருவன் புற்று அருகில் உள்ள மரத்தடியில் தங்கி புற்றை வழிபட்டு வந்துள்ளான். ஒருநாள் மழை பெய்தபோது புற்றின் ஒரு பகுதி கரைந்து உள்ளிருந்து பிள்ளையார் சிலை ஒன்று வெளிப்பட்டதாம். இதனால் மெய்சிலிர்த்துப்போன பித்தன் புற்றையும், விநாயகரையும் சேர்த்து வழிபட தொடங்கினான். அன்று முதல் அவ்வழியே செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயணம் தடையில்லாமல் தொடர புற்றையும், பிள்ளையாரையும் வழிபட்டு வந்தனர். அங்கு கீற்றுக்கொட்டகை மட்டுமே இருந்தது. பின்னர் 1942ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த குயவர் ஒருவர் கழுத்துவரையுள்ள அம்மன் சிலை செய்து அதற்கு நாகமுத்து மாரியம்மன் என்று பெயரிட்டு வழிபட்டு வந்தனர். அதே சிலைதான் இன்றளவும் கருவறையில் உள்ளது. இது தவிர தனி கொட்டகை அமைத்து நிலையம்மன் சிலையும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. நாகமுத்து மாரியம்மன் கோபுரம் 26அடி உயரமும், முத்து மாரியம்மன் கோபுரம் 36 அடியும் உள்ளது.

பாதுகாப்பான பயணம்

சென்னை – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்திற்கு இந்த நாகமுத்து மாரியம்மனையே நம்புகின்றனர். அவர்கள் அதற்காக தங்களால் முடிந்த அளவு காணிக்கைகளை செலுத்தி மகிழ்கின்றனர். இதனால் விபத்தின்றி பாதுகாப்பான பயணத்தை மக்கள் மேற்கொள் கிறார்கள். மேலும் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இங்கு வந்து அம்மனை வழிபட்டுச்சென்றால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் அவர்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறார்கள். தொழில் முடக்கம் தீர்த்து மக்களுக்கு நன்மைகள் தந்து காக்கும் அம்மனாகவும் இந்த அம்மன் திகழ்கிறாள்.இங்கு விநாயகர், முருகன், துர்க்கை, சிவன், பார்வதி, நாகர்கள் மற்றும் நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. கைலாய மணலில் உள்ள மானசரோவர் ஏரியில் கண்டெடுத்த சிவன் சிலை இங்குள்ள அரச மரத்தடியில் வைக்கப்பட்டு வழிபடுகின்றனர்.

திருவிழாக்கள்:

நாகமுத்து மாரியம்மனுக்கு 12 ஆண்டுகளாக 5 நாள் திருவிழா நடத்தி முக்கிய விழாவாக தேர் திருவிழா மற்றும் செடல் திருவிழா நடத்தி வருகின்றனர். ஆடி முதல் வெள்ளியன்று இந்த திருவிழாக்கள் நடக்கிறது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டுச்செல்கின்றனர். பக்தர்கள் அலகுகுத்தி வாகனங்கள், கனகர வாகனங்கள் இழுத்தும், விமான அலகு குத்தியும், உடல் முழுவதும் வேல் அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும். புதுச்சேரி தவிர கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். மேலும் பெண் பக்தர்கள் பலர் அன்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலும் போகி பண்டிகை அன்று பால்சாகை வார்த்தலும் நடக்கிறது. கடந்த 2005ல் முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகமும், 2013ஆம் ஆண்டு மே மாதம் நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. மேலும் 27 அடி உயர புதிய தேர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தரிசன நேரம்:

நாகமுத்து மாரியம்மன் கோயில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

செல்வது எப்படி?

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் கடலூர் சாலையில் நயினார்மண்டபம் என்ற இடத்தில் நாகமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. எந்நேரமும் பேருந்து வசதி உண்டு.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com