நல்லவை கைகூட காசி விஸ்வநாதர் வழிபாடு

தென்னகத்தில் சைவம் தழைத்தோங்கிய காலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபடுவது வாழ்நாளின் மிகப்பெரிய லட்சியமாக இருந்தது. வடமாநிலத்தில் உள்ள காசிக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவது தென்மாநிலத்தில் இருந்தவர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால், 500 ஆண்டுகளுக்கு முன், தென்காசியில் சிவன் கோயில் கட்டுவதற்கு மன்னன் அரிகேசரிபாராங்குசன் முடிவெடுத்து, காசிக்கு சென்று சிவலிங்கத்தை வடிவமைத்தான். பின்னர் தனது மனைவியுடன் படைகள் புடைசூழ சிவலிங்கத்தை காராம்பசு மீது ஏற்றி தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிவகாசியில் தங்கினார். மறுநாள் காலை புறப்படும் போது காராம்பசு முரண்டு பிடித்தது. மகாராணியும் பயணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், சிவலிங்கத்தை காராம்பசுவில் இருந்து இறக்கி ஒரு வில்வமரத்தின் கீழ் மன்னன் வைத்தார். சில நாட்கள் கழித்து பயணம் புறப்பட தயாரான போது, கீழே வைத்த சிவலிங்கத்தை தூக்க முயன்றனர். ஆனால், சிவலிங்கம் அகற்ற முடியாத நிலையில், தானே அங்கு பிரதிஷ்டையானது. சிவனுக்கு இந்த ஊர் மிகவும் பிடித்து விட்டதால், தென்காசி செல்லாமல் இங்கு தங்கி மக்களுக்கு அருள் வழங்கட்டும். சிவன் இங்கு காட்சி கொடுத்ததால் இந்த ஊர் சிவன்காசி என்று வழங்கப்படும் என்று புலவர்கள் கூறியுள்ளனர்.

அரிகேசரி மன்னன் மீண்டும் காசிக்குச் சென்று புதிய சிவலிங்கம் அமைத்து, அதனை தென்காசி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ததாக, சான்றுகள் கூறுகின்றன. வடகாசி, சிவகாசி மற்றும் தென்காசியில் உள்ள சிவன்கோயில்களின் மூலவர் பெயர் விஸ்வநாதர் என்று அழைக்கப்படுவதால் இந்த புகழ்பெற்ற 3 கோயில்களுக்கும் சென்று தரிசித்தால் ஒரே மாதிரியான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். வாழ்நாளில் ஒருமுறையேனும் காசி, தென்காசி அல்லது சிவகாசி சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்டால் நல்லவை கைகூடும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே உள்ளது. தானே வந்து அமர்ந்து அனைவருக்கும் காட்சி கொடுத்த சிவன் இருக்கும் ஸ்தலத்தின் பெயராலேயே சிவன்காசி என்ற ஊர் நாளடைவில் சிவகாசி என்ற பெயர் பெற்றது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com